பற்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமா? pt
ஹெல்த்

பற்களை ஆரோக்கியமாக வச்சுக்கணுமா? அப்போ இந்த 10 வழிகளை ஃபாலோ பண்ணுங்க - மருத்துவர் கூறும் ஆலோசனைகள்!

பற்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், எந்த பாதிப்பும் ஏற்படாமல் பராமரிக்க வேண்டும் என்று விளக்குகிறார் பல் மருத்துவர் பத்மாவதி.

ஜெனிட்டா ரோஸ்லின்

நம் அன்றாட வாழ்வை தீர்மானிப்பதில் உடல் நலன் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் நல ஆரோக்கியத்தில் உடல் உறுப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் இன்றியமையாத ஒன்று. அப்படிதான் பற்களின் ஆரோக்கியமும்.

ஆகவே பற்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும், பற்கள் சார்ந்த பிரச்னைகளை எவ்வாறு வரும்முன் காக்க வேண்டும் என்று விளக்குகிறார் பல் மருத்துவர் பத்மாவதி.

பல் மருத்துவர் பத்மாவதி

பல் துலக்குதல்:

காலையில் எழுந்த பிறகு, இரவு உறங்குவதற்கு முன் என்று இரண்டு நேரம் பல் துலக்க வேண்டும். மேலும் உப்பு, சார்கோல் போன்ற எந்த பொருட்களும் இல்லாத பற்பசைகளையும், மிருதுவான பிரஷ்களையும், உபயோகிக்கப்படும் பேஸ்ட்டின் அளவும்(கடலை அளவில்) தேவையான அளவில் எடுத்து கொள்ளுவது மிக முக்கியம்.

வாய் கொப்பளிப்பது:

வெதுவெதுப்பான சுடுநீருடன் சிறிது கல் உப்புசேர்த்து காலை, இரவு நேரங்களில் பல் துலக்கும் போது வாயை நன்கு கொப்பளிக்கவேண்டும்.

உணவு அருந்தியதற்கு பின்பு:

உணவு உண்ட பிறகு சாதாரண நீரில் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

மருத்துவ பரிசோதனை:

ஒவ்வொரு 6 - 8 மாதங்களுக்கு கட்டாயம் பல் மருத்துவரிடம் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்ள வேண்டும்.

பிரஷ்களை மாற்றுவது அவசியம்:

உபயோகிக்கும் பிரஷ்களை குறிப்பிட்ட காலம் கழித்து மாற்றுவது அவசியம். அதாவது பிரஷ்கள் தேய்மானம் அடைந்தாலோ, உடல் நலம் பாதிப்படைந்து நலம் பெற்ற பின்னரோ கட்டாயம் பிரஷை மாற்றவேண்டும். இல்லை என்றால், தொற்றின் போது ஏற்பட்ட கிருமிகளின் பாதிப்பு தொடர வாய்ப்பு உள்ளது.

PH:

நமது வாய் குழியில் உள்ள சலைவாவின் PH தன்மையை பராமரிப்பது அவசியம்.

பொதுவாக சாக்லேட் எடுத்து கொள்வது பல் சொத்தையை உருவாக்கும் என்பது தவறான கூற்று . அதாவது, எப்பொழுது அது பாதிப்பினை உண்டாக்கும் என்றால்,தொடர்ச்சியாக அதாவது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை என்று ஒரே நாளில் பல முறை சாக்லேட் எடுத்து கொள்ளும்போதுதான். இதன் காரணமாக நமது சலைவா அதாவது எச்சிலின் PH தன்மையை பாதிக்கப்படுகிறது. ஆகவே உட்கொள்ளும் உணவுகளில் கவனம் தேவை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்வது சரியானது.இல்லையெனில் பற்களில் கிருமிகளின் பெருக்கத்திற்கு காரணமாக அமைந்து விடும்.

எப்பொழுது பரிசோதனை?

கர்ப்பிணிகளோ அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நபர்களோ அறுவை சிகிச்சைக்கு முன்னதாக பற்களை பரிசோதனை செய்வது, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியமானது.

பராமரிப்பு யாருக்கு?

பற்கள் இல்லாதவர்கள் பெரியவர் முதல் சிறியவர் வரை பற்களை பராமரிப்பது அவசியம். பற்கள் இல்லாதவர்கள் மிதமான வெந்நீரில் காட்டன் துணியை நனைத்து பல் ஈறுகளை சுத்தம் செய்யவேண்டும்.

நாக்கினை சுத்தம் செய்ய வேண்டும்:

பற்கள் மட்டும் அல்லது நாக்கினையும் சுத்தம் செய்வது அவசியம். வாய்துர்நாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் நாக்கின் மேல் படியும் உணவுகளின் மிச்சம்தான். ஆகவே ஒவ்வொரு முறை பற்களை சுத்தம் செய்யும் போதும். நாக்கினையும் சுத்தம் செய்வது மிக அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

பொதுவான பிரச்னை?

பொதுவான பல் பிரச்னை என்று குறிப்பிட்டால் பற்சொத்தை, பல் ஈறுகள் வீக்கம் அடைதல்தான். ஆனால் இவற்றினை ஆரம்பகாலத்திலே சரி செய்ய முடியும். பற்களின் வரிசை ஒழுங்கான முறையில் இல்லாததால்தான் பற்களில் காரை படிவதற்கு காரணம். ஆகவே பற்களை சீர்படுத்தி அதன்பிறகு சுத்தம் செய்வதன் மூலம் இது போன்ற பிரச்னைகளை சரிசெய்யலாம்.

ஆகவே வரும்முன் காப்பது என்பது மிகவும் அவசியம். இவ்வாறு செய்தாலே பெரும்பாலான பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது.