சிறப்புக் களம்

ரெடின் கிங்ஸ்லி: 'டாக்டர்' தந்த நம்பிக்கை... அடுத்த நட்சத்திர நகைச்சுவை நடிகர் ரெடி!

ரெடின் கிங்ஸ்லி: 'டாக்டர்' தந்த நம்பிக்கை... அடுத்த நட்சத்திர நகைச்சுவை நடிகர் ரெடி!

PT WEB

'டாக்டர்' படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சிம்புவின் 'பத்து தல' படங்கள் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என்ற தனி ரசிகர் வட்டம் உண்டு. படத்தில் எது இருக்கிறதோ இல்லையோ, காமெடி இருந்தால் போதும் என்று படம் பார்க்கச் செல்கிற கூட்டம் காரணமாக தமிழ் சினிமாவில் காமெடி பிரிக்க முடியாத கலவையாக இருக்கிறது. இதன்காரணமாக எண்ணற்ற நகைச்சுவை நடிகர்களும் உருவாகி மக்களை ரசிக்க வைத்துள்ளனர். கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் தொடங்கி யோகி பாபு வரை பல நகைச்சுவை நடிகர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். இந்த நடிகர்கள் பலர் உடல்மொழி மூலம் மக்களை சிரிக்க வைத்தனர். நாகேஷ், செந்தில், வடிவேலு என பலரை இதற்கு உதாரணம் சொல்லலாம்.

ஆனால், காமெடிக்கே உரித்தான ரைமிங் - டைமிங் நகைச்சுவை இல்லாமல், 'டாக்டர்' படம் மூலம் வாய்மொழியால் ரசிகர்களை சிரிக்க வைத்து கவனம் ஈர்த்துள்ளார் தமிழ் சினிமாவின் புதிய வரவு ரெடின் கிங்ஸ்லி. 'டாக்டர்' படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆக காரணம், அதன் காமெடி போர்ஷன் கிளிக் ஆனதுதான். காமெடிக்கு முற்றிலும் சிவகார்த்திகேயனுடன் புதிய டீம் இணைந்திருந்தது. சிவகார்த்திகேயனின் ஆஸ்தான காமெடியனான யோகி பாபு இதில் இடம்பெற்றிருந்தாலும், அவரைவிட அதிக புகழ்பெற்றது, பேசப்படுவது ரெடின் கிங்ஸ்லி.

படத்தில் 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' கதாபாத்திரத்தில் வரும் ரெடின், நாயகி குடும்பத்தை வைத்தும், யோகி பாபுவுடன் இணைந்தும் அடித்த காமெடி லூட்டிகளுக்கு தியேட்டரில் கரவொலியும் சிரிப்பொலியும் எழுகின்றன. 'டாக்டர்' படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே ரெடினை பாராட்டாமல் இருப்பதில்லை. அவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைக்காத குறைதான். அந்தளவிற்கு, அவரைப்பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன.

நெல்சன் - நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ரெடினுக்கான அறிமுகத்தை கொடுத்தாலும், பல வருடங்கள் முன்பே சினிமாவில் கால்பதித்திருக்க வேண்டியவர். அதுவும் நெல்சன் மூலமாகவே நிகழ இருந்தது. நெல்சன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான், ரெடின் கிங்ஸ்லி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தால், தனது முதல் படத்தில் ரெடினையும் இனைத்துக்கொண்டார். விஜய் டிவியில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில் 2010-ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா வைத்து 'வேட்டை மன்னன்' படத்தை தொடங்கினார். இதில் ரெடினும் நடித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் படம் பாதியிலேயே டிராப் ஆக நெல்சனை போல் ரெடினுக்கும் திரைத்துறை அறிமுகம் தள்ளிப்போனது.

என்றாலும் ஏழு வருட போராட்டத்துக்கு பிறகு, 'கோலமாவு கோகிலா' மூலம் மீண்டும் நெல்சன் சினிமாவுக்கு வர, ரெடினையும் முக்கியமான ரோலில் அறிமுகப்படுத்தினார். இதில் பெரிதாக பேசப்படும் வேடம் இல்லையென்றாலும் தனது தனித்துவமான நடிப்பால் 'யார்ரா இது?' என கவனிக்க வைத்தார். அவரது தனித்துவத்தை கண்டுகொண்டார் ஆர்ஜே பாலாஜி. இயக்குநராக தனது முதல் படமான எல்கேஜியை இயங்கிக்கொண்டிருந்த ஆர்ஜே பாலாஜி, இரண்டாம் கட்ட ஷூட்டிங் முன்னதாக, ஒரு நாள் யதேச்சையாக 'கோலமாவு கோகிலா' படத்தை பார்க்கும்போது ரெடின் நடிப்பை பார்த்தள்ளார். பின்னர், ரெடின் தனது படத்தில் இருக்க வேண்டும் என்று பாதி படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு, ரெடினுக்கென தனி கேரக்டர் உருவாக்கி அவரை நடிக்க வைத்திருக்கிறார்.

அரசியல்வாதியாக வரும் ஜேகே ரித்தீஷின் உதவியாளராக தனது அப்பாவிதனமான நடிப்பால் படம் முழுக்க சிரிக்க வைத்த ரெடின் அதன்பிறகு சந்தானத்தின் 'A1', யோகிபாபுவின் 'கூர்க்கா', ஜோதிகாவின் 'ஜாக்பாட்', நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படங்களில் பேசியே சிரிக்க வைத்தவருக்கு, நெல்சனின் இரண்டாம் படமான 'டாக்டர்' புதிய பயணத்தை ஏற்படுத்தியுள்ளது. 'டாக்டர்' படம் வெளியாகும் முன்பே படத்தின் புரொமோஷன் நிகழ்வுகளில் ரெடின் பேசியது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலாகின. குறிப்பாக 'பீஸ்ட்' படத்தைப் பற்றி ரெடின் பேச, விஜய் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டார்.

அப்போதே ரெடின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்த்தது போலவே, 'டாக்டர்' படத்தில் அவரின் காமெடி ஹிட் அடிக்க இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். விஜய் - நெல்சனின் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவரும் ரெடின் கிங்ஸ்லி அடுத்ததாக சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', சிம்புவின் 'பத்து தல' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும், ரஜினியின் 'அண்ணாத்த' படத்திலும் நடித்திருக்கிறார்.

இதேபோல் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'இடியட்', 'கோஷ்டி', 'வீட்டுல விஷேசங்க' ஆர்ஜே பாலாஜியின் அடுத்தப் படம் என கிட்டத்தட்ட 10 படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த அசுர வளர்ச்சியால் ரெடின் விரைவில், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வளம் வருவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

- மலையரசு