சிறப்புக் களம்

ஜொமோட்டோ பங்குகளை வாங்கியவர்களுக்கு முதல் நாளிலேயே 66% லாபம்!

ஜொமோட்டோ பங்குகளை வாங்கியவர்களுக்கு முதல் நாளிலேயே 66% லாபம்!

நிவேதா ஜெகராஜா

உங்கள் இல்லங்களை தேடி வந்து, நீங்கள் விரும்பும் உணவுகளை 'ஹோம் டெலிவரி' செய்யும் ஜொமோட்டோ தனது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அமோக லாபத்தை 'டெலிவரி' செய்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் ஜொமோட்டோ பங்குகள் வெள்ளிக்கிழமை முதல் வணிகம் தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 66% சதவிகிதம் லாபம் அளித்துள்ளது.

ஜொமோட்டோ பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கு 76 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், பங்குசந்தை வணிகத்தில் முதல் நாளிலேயே விறுவிறு ஏற்றத்தைக் கண்டது. வெள்ளிக்கிழமை இந்தியப் பங்குச்சந்தை வணிகம் முடிவடைந்தபோது, ஜொமோட்டோ ஒரு பங்கின் விலை 126 ரூபாயாக உயர்ந்திருந்தது. முதல் நாளிலேயே ஜொமோட்டோ பங்குகளின் விலை 66% உயர்ந்துள்ளது பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

சமீபத்தில் பல பங்குகளை ஐபிஓ முறையில் வாங்கிய முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், 'வீட்டுக்கே வந்து உணவு டெலிவரி'  செய்யும் நிறுவனமான ஜொமோட்டோ லாபத்தை அள்ளி வழங்கியுள்ளது. பங்குச்சந்தையில் ஆன்லைன் முறையில் வணிகம் செய்யப்படும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ள ஜொமோட்டோ பங்குகளின் சந்தை மதிப்பு இன்றைய விலை அதிகரிப்பு காரணமாக 1 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை இறுதி மதிப்புப்படி ஜொமோட்டோ பங்குகளின் சந்தை மதிப்பு 98,221 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஜொமோட்டோ பங்குகளை ஐபிஓ முறையில் வாங்க கடும் போட்டா போட்டி நிலவியது. ஜொமோட்டோ நிறுவனம் 1.23 பில்லியன் பங்குகளை விற்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில், அதைவிட 38 மடங்கு பங்குகளை வாங்குவதற்கு விண்ணப்பங்கள் குவிந்ததே முதலீட்டார்களின் ஆர்வத்தை படம்பிடித்து காட்டியது. ஆகவே, பங்குகளை வாங்க விண்ணப்பித்திருந்தவர்களில் ஒரு சிலருக்கு பங்குகள் கிடைத்தன என்பதும், அதுவும் விண்ணப்பித்ததை விட குறைந்த அளவிலேயே கிடைத்தது என்பதும் முதலீட்டாளர்களின் வருத்தமாக உள்ளது.

இத்தனைக்கும் ஜொமோட்டோ இன்னும் லாபம் ஈட்ட தொடங்கவில்லை. உணவகங்களின் விலையை விட குறைந்த விலையில் இட்லி தொடங்கி பிரியாணி வரை மக்கள் விரும்பி ருசிக்கும் உணவுகளை 'ஹோம் டெலிவரி' அளிக்கும் ஜொமோட்டோ நஷ்டத்தில்தான்
இயங்கி வருகிறது. ஆனால், அதிக அளவில் வாடிக்கையாளர்களை தன்பால் ஈர்த்துள்ளதால், ஜொமோட்டோ பங்குகள் விண்ணை நோக்கி பறந்து கொண்டிருக்கின்றன. இளைய தலைமுறையினர் உணவுகளை ஆர்டர் செய்ய விரும்புவது மற்றும் கோவிட் 'ஹோம் டெலிவரி' முறையை ஊக்குவித்தது ஆகியவை ஜொமோட்டோ, ஸ்விக்கி, டொமினோஸ் போன்ற நிறுவனங்களின் பலமாக கருதப்படுகிறது.

வீட்டுக்கு தேவையான பொருட்களை 'ஹோம் டெலிவரி' செய்யும் அமேசான், பிளிப்கார்ட், ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யும் ஒயோ போன்ற நிறுவனங்கள் மற்றும் மருந்துகளை வீட்டுக்கே கொண்டுவரும் 1mg போன்ற நிறுவனங்கள் அதிக மதிப்பு உள்ளவையாக கருதப்படுகின்றன. மீண்டும் மீண்டும் பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கும் வாடிக்கையார்களை அதிக அளவில் கொண்டுள்ளதால், இத்தகைய நிறுவனங்கள் பாரம்பர்ய நிறுவனங்களை விட அதிக சந்தை மதிப்பு உள்ளவையாக திகழும் என முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.

- கணபதி சுப்ரமணியம்