சிறப்புக் களம்

இளம் நடிகர்கள் ஏன் தடுமாறுகிறார்கள்? - ஒரு அலசல் கட்டுரை

இளம் நடிகர்கள் ஏன் தடுமாறுகிறார்கள்? - ஒரு அலசல் கட்டுரை

webteam

தமிழ் சினிமா என்றாலே ஹீரோவை மய்யபடுத்திய சினிமா என்றுதான் அர்த்தம். ஆனால் இதையும் மீறி அற்றைக் குளத்தில் அவ்வெண்ணிலவில் தாமரை மலர்கள் தலையாட்டதான் செய்கின்றன. பெயரளவில் யதார்த்த சினிமா என்பார்கள். அதுவும் அடிநாதமாக ஹீரோவை தாங்கிப்பிடிக்கவே செய்கிறது. ‘பதினாறு வயதினிலே’வில் ஹீரோ கமல்தான் கோவணம் கட்ட வேண்டும். பரட்டை பாத்திரமா ஆலமரத்தின் கீழே  ரஜினிதான் உட்கார்ந்து வசனம் பேச வேண்டும். இங்கே சப்பாணியை சப்போர்ட் பண்ணுபவர்கள் ‘மயிலு’க்கு மரியாதை கொடுக்கமாட்டார்கள். ‘முதல் மரியாதை’ கூட அப்படிதான். சிவாஜிதான் தேவை. அதில் வடிவுக்கரசிதான் காத்திரமான பாத்திரம். ஆனால் நமக்கு சிவாஜிதான் தெரிகிறார். அவர் முகத்தை மீறி ஒருவரும் சோபிக்க முடிவதில்லை. கோட்டும் சூட்டுமாக வலம் வந்த சிவாஜி அங்கே சிம்பிள் செய்யப்படுவதால் ஒரு சீரியஸ்னஸ் உண்டானது.  

தொண்டையை உயர்த்தி உடலை தடதடவென அசைத்து டயலாக் பேசிய சிவாஜி, ஒரு மெளனக் கடலாக கதையை கடந்து போகும்போது நமக்கு ஏனோ வலிக்கிறது. ஒவ்வொரு பார்வையாளனுக்குள் ஒரு மரண வேதனை பிறக்கிறது. படம் பேச முடியாத ஒரு விஷயத்தை, கதை மட்டுமே நகர்த்திவிட முடியாத ஒரு காட்சியை ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட வலுவான கதாநாயகன் சிவாஜி, நம் உச்சந்தலையை பிடித்து உலுக்க செய்கிறார். திரையை மீறிய ஒரு வலி அங்கே பிறக்கிறது. ஆகவேதான் ஆடியன்ஸ் அதை பார்த்து அலறினார்கள். இது யதார்த்த அம்சம் கொண்ட சினிமாதான். 

ஆனால் அதற்குள் கனக்கச்சிதமாக செதுக்கப்பட்ட ஒரு முரட்டுத்தனமான நடிகன் தேவைப்படுகிறார். சிவாஜி நிற்கும்போதே காட்சிகள் கவனப்பட்டுவிடுகின்றன. இந்தப் பாணியை ஏதோ பாரதிராஜா மட்டும் கையாளவில்லை. இன்று நமக்கு சினிமா காட்டிக்கொண்டிருக்கும் பாலா கூட கையாண்டிருக்கிறார். அழகான ஒவ்வொரு ஹீரோவையும் அவரது அழுக்காக்கும் முயற்சிகள் அதன் பொருட்டே நடக்கின்றன. இந்த மாற்றம் கதைக்குள் மகத்தாக மந்திரமாக வேலை செய்கிறது. வசியம் செய்வதை போல அவர் இந்த வேலையை  செய்கிறார். யதார்த்தம் அப்பிக் கிடக்கும் கதையை அவர் சொல்ல தொடங்குவதற்கு முன்பாகவே கதாநாயகனை கவனிக்கச் செய்யும் காட்சிகளை மடமடவென்று அடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.
 
யதார்த்தம் ஆனால் கொஞ்சம் மிகை யதார்த்த அம்சங்களைத் தாண்டி வழக்கமான சினிமா பாணியை மீறி ஆர்ப்பாட்டம் இல்லாமல், பெரிய உசுப்பல்கள் இல்லாமல் கதை சொல்ல வந்த இயக்குநர்கள் பட்டியல் மிகப்பெரியது. ‘காதல்’ பாலாஜி சக்திவேல் ஆரம்பித்து ‘அருவி’வரை ஒரு வசதிக்காக வகைப்படுத்தலாம். அதற்கு முன்னால் ‘உதிரிப்பூக்கள்’ இதற்கு பாதை போட்டது. இதில் வெளிப்பட்ட ஹீரோக்கள் யாருக்கும் பிம்பங்கள் இல்லை. முதன்முறையாக திரையில் வந்து தங்களின் தேர்ந்த நடிப்பால் நம் முகத்தில் அரைந்தவர்கள். முதல் தேர்வையே முழு வேகத்தில் தாவிப்பிடித்த இந்தக் கதாநாயகர்கள் அடுத்தடுத்த படங்களில் ஏன் தடுமாற ஆரம்பித்தார்கள்? சினிமா தாகம் என்பது தணிந்து ஹீரோ மோகம் தலைத்தூக்கும் காலத்தில் இந்தச் சிக்கல் உண்டாகிவிடுகிறது என  சுருக்கி சொல்விட முடியாத புதிர் ஏதோ அவர்களை பின்னுக்கு இழுக்கிறது. அந்த ‘ஏதோ’ என்பது என்ன? ஒரு சினிமா நண்பர் ‘அந்த ரகசியம் மட்டும் ஒருவருக்கு தெரிந்துவிட்டால் ஏவி.எம். ஸ்டுடியோவில் மாதம் 5 லட்சம் சம்பளம் தருவார்கள்’ என்கிறார். இதை பற்றிய கருத்தைதான் கனப்படுத்த விரும்புகிறது இந்தக் கட்டுரை.


பரத்

இரண்டாயிரத்திற்கு பிறகு வந்த கதையம்ச படங்களில் தவிர்க்க முடியாத படம் ‘காதல்’. இந்தப்படத்தில் பரத்தை பார்த்தபோது ஏற்கெனவே ‘பாய்ஸ்’ பையன்தானே என்று லேசாக விட்டுவிட முடியவில்லை. அந்தளவுக்கு ஒரு கனல் அடுப்புக்கு பக்கத்தில் கதகதப்பான உஷ்ணத்தில் நிற்பதை போல அவர் நடிப்பு நம்மை திரும்பி பார்க்க வைத்தது. சீரான காட்சிகள், சிதறாத நடிப்பு என பரத் அதில் வாழ்ந்திருந்தார். அவர் உயரமும் கதையின் உயரமும் ஏறக்குறைய ஒரே மட்டத்தில் வந்து நின்றது. ஆகவே படத்தில் பிசிறில்லை. பரத் மட்டுமல்ல; அந்தப் படத்தில் சந்தியாவில் ஆரம்பித்து தண்டபாணி வரை தரமான கேரக்டர் தேர்வுகள் ஒரு அறிவார்ந்த அடையாளத்தை கட்டி எழுப்பியிருந்தது. நான்கு பேரில் ஒருவனாக பாய்ஸில் உலாவிய பரத், பாலாஜி சக்திவேல் கட்டமைப்பில் கெளரவம் பெற்றிருந்தார். சரியாக சொன்னால் வேறு முகம் கொண்டிருந்தார். அந்த வேறு முகம்தான் அவரை தடதட உச்சத்தை எட்ட வைத்தது. பின் மக்கள் வேறு முகத்தை எதிர்பார்க்கிறார்கள் என தெரிந்தும் அவர் ‘ஆறுமுகம்’ பாங்கான கதைக்கு தாவிய போது தடுமாறம் தலைக்காட்ட தொடங்கிவிட்டது. பின் சித்த வைத்திய சிகாமணி வரை அவர் வந்து சேர்ந்த இடம் மோசம். 

சினிமா பின்புலம் இல்லாமல் வந்த பரத் இன்றைக்கு 25 படங்கள் வரை வரிசையாக வளர்ந்து வந்திருப்பதே பெரிய விஷயம்தான். ஆனால் அவர் விரும்பி இருந்தால் இந்தப் பட்டியலைக் குறைத்துக் கொண்டு தனகென்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தை தமிழ்சினிமாவில் உருவாகி இருக்க முடியும். அவர் தன் உடம்பை அழகேற்றினார். கேரக்டருக்கு தக்க தன்னை மெருகேற்றிக் கொண்டார். வழக்கமாக‘லோக்கல் பாய்’ இமேஜ் மட்டுமே தன்னை தாக்குப் பிடிக்க செய்யாது என முன்கூட்டியே சரியாக கணித்தார். எல்லாம் சரி, ஆனால் அவர் இடையில் சினிமாவில் இல்லாமலே போனார்.
கமர்ஷியல் வேல்யூவுக்காக தன் வேல்யூவை அவர் வளர்த்தெடுக்காமல் விட்டுவிடார். அவரை முறையாக பதப்படுத்தி எடுக்க இயக்குநர்கள் இல்லாமல் போனார்கள். வந்த வாய்ப்புகளில் இது பரவாயில்லை என்ற எல்லைக்கு அவர் தள்ளப்பட்டது மிகப் பெரிய சோகம். 

ஒரு மட்டத்தில் அவர் சுதாரித்துக் கொண்டு இடைவெளி இருந்தாலும் பரவாயில்லை. இனி சரியான திசை முக்கியம் என மறைந்தே இருந்தார். ஆனால் அவருக்கு அந்த இடைவெளி கூட விட்ட இடத்தை இட்டு நிரம்பும் படி இல்லை. ஆறாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ வைத்திய முறையில் மட்டுமில்லை கதை சொல்ல வந்த முறையில் கூட பின்நோக்கியே இருந்தது. ஆகவே அவர் இன்னும் இருந்த இடத்தைவிட கீழே இறங்க வேண்டியதாகிவிட்டது. உண்மையில் பாய்ஸுக்குப் பிறகு பரத்தின் உழைப்பு அசாதாரணமானது. ஏறக்குறைய நடனப் புயல் பிரபுதேவா விட்டுச் சென்ற இடத்தை இட்டு நிரப்புவார் என பலர் கருத்து சொன்னது இன்றும் நம் காதில் மிதக்கிறது. அவரும் கடுமையான நடனக்காரராக தன்னை உருமாற்றிக் கொண்டார். 

‘டான்ஸ் மூமெண்ட்’டுக்காக பல விழா மேடைகளில் அவருக்கு தனி நாற்காலி போடப்பட்டது ஒரு காலம். ஷங்கர் கையால் தொடங்கி  ஏ.ஆர். முருகதாஸ் தெலுங்குப் படம் வரை அவர் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அதில் எதிலும் பழைய பரத் இல்லை. இங்கே பழைய பரத் என்பது நடிப்பில் தொடங்கி திரையரங்க வசூல் வரையான விஷயத்தை சேர்த்துதான் சொல்கிறோம். எப்போது அவர் ‘சின்னத் தளபதி’ என டைட்டில் கொடுக்கப்பட்டாரோ அப்பவே அவரது அடையாளம் அடிபட ஆரம்பித்து விட்டது. 

பரத்திற்கு ‘காதல்’ சொல்ல தெரிந்தது. வெயிலில் வாடத் தெரிந்தது. அரவான் அழகு ‘திருத்தனி’யில் தித்திக்கவில்லை. ‘சிகாமணி’யாகவும் ‘முடியாண்டி’யாகவும் அவர் பெயர் மட்டுமே மாறியது. ஆள் மாறவில்லை. ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர் கொடுக்க அவரால் முடியவில்லை. ‘ஃபோர் த பீபுளை’ தேடி பார்க்க வைத்தவர். இன்று அவரை திரைத்துறையில் வலைப்போட்டுத் தேட வைத்துவிட்டார்.  ‘செல்லமே’வில் சின்ன ரோலில் தனித்து தெரிந்த பரத் இப்போது ஆளே தெரியாமல் இருக்கிறார். 

‘555’ல் அவர் மீண்டு வந்தார். மீண்டும் வருவார் என நம்பிக்கை இருக்கிறது. பரத் போன்ற நடிகர்கள் சினிமாவில் வெற்றிப் பெரும் போதும் எதிர்கால சினிமாவை நம்பி உள்ளே வர காத்திருக்கும் ஒரு இளைய நடிகருக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அந்த நம்பிக்கை தனிநபர் சார்ந்ததல்ல. அத்துறை சார்ந்து இயங்க விரும்பும் சமூகம் சார்ந்தது.  அந்தத் தலைமுறைக்கு பரத் மறுபடியும் தைரியம் கொடுக்க வேண்டும். கதையை நம்பி தன்னால் தரமான படங்களை தர முடியும் என்பதை அவர் காண்பிக்க வேண்டும். அவரை ஹீரோவாக நினைத்து இதை சொல்லவில்லை. கடினமாக கதாபாத்திரத்திற்கு தக்க உழைக்க கூடியவர் என்பதால் சொல்கிறோம்.

விமல் 

‘பகத்து வீட்டு பையன்’ என்ற இமேஜ்தான் விமலை எல்லா வீட்டுக்கும் கொண்டு போய் உட்கார வைத்தது. அவர் ஏற்கெனவே ‘கில்லி’,‘குருவி’ போன்ற சில படங்களில் குட்டிக் குட்டி ரோல்களில் தட்டுப்பட்டாலும் அவரை எட்டிப் பார்க்க வைத்தது ‘பசங்க’தான். அந்தப் படம் திரைக்கு வந்த ஒரே நாளில் அவர் வாழ்நாளே மாறியது. ‘இங்கிட்டு மீனாட்சி..அங்கிட்டு யாரு’ என அவர் தலையாட்டிய போதும் இளையராஜாவின் பாட்டுக்கு தக்க பல்லைக்கட்டிய போதும் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி மக்கள் மனதில் கிளர்ந்தது உண்மை. ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து வழக்கமான டூயட் தானே என இல்லாமல் அவர் வேற அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தார். 

அவர் வாழ்நாளில் யாருக்கு கடன்பட்டிருக்கிறாரோ இல்லையோ இயக்குநர் பாண்டிராஜூக்கு அவர் பாத்தியப்பட்டே இருக்கிறார். விமலுக்கு உயிர் கொடுத்தவர் பாண்டிராஜ். அதே போல அவர் கூட்டணியில் ‘கேடிப்பில்லா கில்லாடி ரங்கா’வாக வந்த போதும் அவர் சிவகார்த்திகேயனைவிட நடிப்பில் சீரியஸ் காட்டியிருந்தார். ‘கூத்துப்பட்டறை’ போன்ற நடிப்பு சார்ந்த கற்றல் வழிமுறை அவர் நடிப்புக்கு ஜீவன் கொடுத்திருந்தது. நடிகன் ஆவதற்கு பழக்க தோஷம் மட்டுமே பயன்படாது என முன்கூட்டியே உணர்ந்த விமல் ‘கூத்துப்பட்டறை’குள் புகுந்தது ஒரு தரமான முடிவு. ஆனால் அங்கே எந்தளவுக்கு இவர் தன்னை செதுக்கிக் கொண்டார் என்பதை நாம் கூட இருந்து எடைப்போட முடியாது. வித்தையை எந்தளவுக்கு திரைக்கு மாற்றித் தருகிறாரோ அதை வைத்துதான் நாம் கணிக்க முடியும். அப்படி கணித்தால் விமல் சரியான நடிகர்தான். அவருக்கு காமெடி கலந்த மிக யதார்த்தம் இல்லாத கதைகளில் நடிப்பது கைவந்த கலையாக இருந்திருக்கிறது. 

இவரும் நடிகர் விஜய் சேதுபதியும் ஒரே பட்டறையில் பக்கத்து பக்கத்தில் இருந்து பழகியவர்கள். இவர் நடிப்புக் கற்றுக் கொண்டிருக்கும்போது சேதுபதி கணக்கு வழக்குகளை கவனித்துக் கொண்டிருந்தார் அங்கே. ஆனால் கணக்கை கவனித்தவர் தற்சமயம் தரமான பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். ஆனால் விமல் பிடித்த இடத்தையே தக்க வைக்க முடியாமல் தட்டுத்தடுமாறுகிறார். விமலுக்கு சினிமா வாய்ப்பு வர விஜய் சேதுபதிதான் காரணம். விமல் முந்திக் கொண்டு வந்து நின்றார். நல்ல இடம். நல்ல அடையாளம் அவருக்கு அளவு தாண்டி கிடைக்கவே செய்தது. 

ஆனால் அதை அவர் புரிந்துக் கொள்வதற்குள் புயல்போல அந்தச் சரிவு நிகழ்ந்துவிட்டது. இன்று அவர் சினிமாவில் இருக்கிறாரா என தடவி பார்க்க வேண்டிருக்கிறது. அவர் நடித்த ‘வாகைசூடவா’ ஒரு கெளரவமான படம். பல விருதுகளை விரட்டி விரட்டி தட்டிக் கொண்டு திரும்பிய தரமான தமிழ்சினிமா. காலகட்டத்தை கணக்கச்சிதமாக பொறுத்து மிக உயிரோட்டமாக சினிமாவில் விமல் இருந்தார். அதே போல ‘களவாணி’கூட அவரை தூக்கி நிறுத்திய படம்தான். ‘கலகலப்பு’ வரைக்கும் அவர் வந்த வழி சரி. ஆனால் அவர் ‘அஞ்சல’ என்றும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என்றும் ‘மஞ்சபை’ என்று மாறிமாறி வித்தைக்காட்ட தொடங்கிய போதுதான் ஆபத்தை விலைக்கு வாங்க ஆரம்பித்தார். 

‘கிராமத்து கேரக்டரே நடிச்சு நடிச்சு அலுத்து போச்சுப்பா’ என ஒரு நடிகனாக அவர் சோர்வாகி இருக்கலாம். அதற்காக ஐடியில் வேலை செய்யும் அளவுக்கு முன்னேறியதில்தான் விதி விளையாடிவிட்டது. ஐடி என்பது ஒரு வேலை அல்ல. அது ஒரு கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்திற்குள் பொருந்தக்கூடிய முகவெட்டு அவருக்கு இயல்பாகவே இல்லை. ஆனால் அதை ஒரு நடிகனாக உருவாக்கிவிட முடியும்தான். அதற்கு வலுவான உழைப்பு தேவை. அவதானிப்பும் தேவை. உடல் மொழியில் ஆரம்பித்து டப்பிங் வரை அதற்கு அதிகம் வேர்வையை கொட்டித்தர வேண்டும். வெறுமனே கதையை கேட்டுவிட்டு ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் ஐடி கய் ஆக பரிமளித்துவிட முடியாது. அது கஷ்டம். விமலுக்கு இப்போதும் நல்ல வாய்ப்புகள் உண்டு. அவர் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நாம் வசதியாக வாழ்க்கைக்காக நடிக்கிறோமா? இல்லை மக்களை வசியம் பண்ண வேண்டி நடிக்கிறோமா? நாம் அவருக்கு பரிந்துரைக்க விரும்புவது இரண்டாவது முடிவைதான். 

சித்தார்த்

மிக அழகான ஹீரோ. சாக்லெட் பாய் என்றால் அவருக்கு கோபம் வரும். ஆனால் நமக்கு, கோபம் வருவதல்ல பிரச்னை. மக்கள் நம்மை எப்படி புரிந்துக் கொள்கிறார்கள் என்பதே பிரச்னை. அவர் எடைப்போட்டு மக்கள் கொடுத்த அந்த அழகான ‘அடையாள’த்தை அவர் மீற நினைக்கிறார். அந்த மீறல் ஒரு குழந்தை அடம்பிடிப்பதை போல இல்லாமல் தற்செயலாக ஒரு பையன் வளர்ந்து வருவதை போல இருக்க வேண்டும். ஆனால் சித்தார்த்திடம் அது இல்லை. ஆகவே பிரச்னை. தமிழில் பக்கத்தில் நிற்கவே பல நாற்காலி போட்டுக் காத்திருக்கையில், அவருக்கு மணிரத்னம் உடன் பணி செய்யவே வாய்ப்பு கிடைத்தது. மணிரத்னம் கூட வேலை செய்யலாம். ஆனால் அவருடன் இருப்பவர்கள் எல்லாம் அவரை போல சினிமா செய்துவிட முடியாது. ஸ்டைல் என்பது மூளையோடு சம்பந்தப்பட்டது. உடம்போடு சம்பந்தப்பட்டத்தல்ல. என்னதான் ஒருவரை சுவீகரித்துக் கொண்டாலும் அவர் மூளையாக நாம் மாறிவிட முடியாது. ஆனால் சித்தார்த் அப்படி மாறிவிட்டதாக நம்புகிறார். 

அவர் ‘பாய்ஸ்’படத்தில் பட்டாளத்தோடு ஒருவராய் கலந்து நின்றிருந்தாலும் கதைக்கு அவர் மிக முக்கியம். அவருக்கு அந்தக் கதை முக்கியம் என கலந்திருந்தது. அதாவது மீச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங். அந்த பைண்டிங் நன்றாகவே திரையில் மிளர்ந்தது. ‘அலைகள் ஓய்வதில்லை’க்குப் பிறகு அழகான இளம் ஹீரோ இடம் இவருக்கு என கணித்த காலத்தில் அவர் காலத்தை மீறிபோக கணக்குப்போட்டார். தமிழில் நல்ல வாய்ப்புகள் இருக்கும்போதே அவர் தெலுங்கு பக்கம் தலை வைத்தார். சித்தார்த் பக்கா தமிழ் பையன். அவர் டோலிவுட் போய் தனக்கென ஒரு இடத்தை உண்டாக்கியதே பெரும் சாதனை. இன வேறுபாடுகள் அதிகம் தலைக்காட்டும் ஒரு துறையில் சித்தார்த் மாநிலம் தாண்டி மரியாதை பெற்றது சாதனை அல்ல, இந்திய சினிமாவின் வரலாறு.

சித்தார்த் நடிகன் மட்டுமல்ல; நல்ல சினிமா அறிவு கொண்டவர். மிக அழகான பாடகர். அதை தாண்டி ரைட்டர். அவர் வீட்டில் பெரிய ஸ்டுடியோவே போடும் அளவுக்கு இசை அவர் வாழ்க்கையை நிரப்பி இருக்கிறது. ஆனாலும் தன்னை ‘தரமான’பாடகர் என அவர் தம்பட்டம் தட்டிக் கொண்டதே இல்லை. அடக்கிதான் வாசிப்பார். தன் திறமைகள் மீது பெரிய நம்பிக்கை உள்ளவர். பெங்கால் சினிமா வரைக்கும் போய் நடித்து திரும்பியவர். ‘எடாகி’ என தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் அளவுக்கு இந்த இளம் வயதில் அவர் முன்னேறியது பெரிய விஷயம். அவர் நடித்த விளம்பர படத்தில் உச்சரித்த வசனத்தையே தன் நிறுவனத்திற்கு தலைப்பாக்கியவர். சின்ன வயதிலேயே தனகென ஒரு கம்பெனி ஆரம்பிப்பேன் என அவர் பெற்றோரிடம் லட்சியம் பேசியதாக தகவல் உண்டு. 

தெலுங்கில் படு பிசியாக இருக்கும்போதே அவர் திடீர் என்று தமிழுக்கு மாறினார். மாற்றம் பிரச்னை இல்ல. ஆனால் முழுக்க ஒரு பக்கமாக வந்து உட்கார்ந்ததுதான் பிரச்னை. இன்று தெலுங்கில் சித்தார்த் இல்லை. அது அவருக்கு நஷ்டம். நம்ம மாநிலத்து நடிகர் அங்கே பெரிய இடத்தில் நிற்கிறார் என சொல்ல முடியாத அளவுக்கு உதறியதுதான் பிரச்னை. இப்போது தமிழில் நிறைய படங்கள் அவருக்கு இருக்கிறது. பாய்ஸில் ஆரம்பித்து  ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ ‘ஆயுத எழுத்து’ ‘உதயம் என்ஹெச் 4’ ‘காதலில் சொதப்புவது எப்படி’ ‘ஜிகர்தண்டா’ ’180’ என பட படங்களில் தன்னை தக்க வைத்திருந்தாலும் தனக்கான ஒரு இடத்தை இன்னும் அவர் தமிழில் தர முற்படவே இல்லை. 
 
படங்களுக்காக, நடிப்புக்காக சித்தார்த் பேசப்பட்டதைவிட ‘கல்யாணம் எப்போ?’என விவாதிக்கப்பட்டதே அதிகம். அவர் நினைத்திருந்தால் அந்தப் புதிருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அந்தப் புதிரின் முடிச்சியை அவிழ்க்காமல் மேலும் பல முடிச்சிகளை போட்டுக் கொண்டே இருந்தார். இந்தப் பிரச்னை அவரை முடக்கும் அளவுக்கு அவர் மறைய ஆரம்பித்தார். அந்த மறைவு தமிழ், தெலுங்கு எனும் இரண்டு துறையைவிட்டே அவர் மறைய காரணமாகி வருகிறது. சித்தார்த்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் இடம் இப்போதும் அப்படியேதான் உள்ளது. அவர் மீண்டும் இயங்க வேண்டும். அதுவும் அசுரத்தனமாக. சமூக சேவைகளில் காட்டும் அதே தீவிரத்தை அவர் ஒரு நடிகனாக தன்னை தக்க வைக்க உழைத்தாக வேண்டும். அவர் சினிமாவில் சம்பாதித்தால் அவர் வீடுமட்டும் இல்லை. கொஞ்சம் ஊரும் சேர்ந்து வாழும். ஆகவே இந்த அழைப்பு.

விதார்த்

‘மைனா மைனா நெஞ்சுக்குள்ள’ என்று பாடிய போது அவர் ஹீரோ இல்லை. கதையில் வரும் மிக அழுத்தமான நடிகர். அல்லது கேரக்டர். சுருங்கின முகம். அழுக்கு லுங்கியும் அவரை பக்கா அக்யூஸ்ட்டாகவே காட்டியது. அந்தப் படத்தில் விதார்த் ஹீரோ இல்லை என்பதற்கு சரியான உதாரணம் அந்தப் படத்தில் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவர் ஹீரோவை விட பொலிவாக இருந்தார். ஆனால் நடிப்பு அவரை மறைத்துவிட்டு விதார்த்தை விரட்டச் சொல்லி நமக்கு உணர்த்தியிருந்தது. அந்தப் புத்திசாலித்தனம் ஆடியன்ஸுக்கு இருந்தளவுக்கு விதார்த்துக்கு இல்லை. ‘நல்லா வருவார்’ எனபலரும் எதிர்பார்ப்பதை பெரும்பாலான நடிகர்கள் ஏதோ அஜித், விஜய் உடன் ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். அது ஆசை அல்ல; வியாதி. தமிழ்சினிமாவில் நடிப்புக்காக அவர்கள் அந்த இடத்தை பிடிக்கவில்லை. 

விஜய்க்கு நடிக்கத்தொடங்கிய காலத்தில் பல படங்கள் தோல்வி முகத்தையே தொட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அவரை கீழே இறங்கவிடாமல் பல லட்சங்களை போட்டு அவரது அப்பா தொடர்ந்து படங்களை எடுத்து இட்டு நிரப்பிக் கொண்டே இருந்தார். விதார்த்தை பார்த்ததும் பிடித்தது. ஆனால் விஜய்யை பார்க்கப் பார்க்கதான் பிடித்தது. இதற்கு காரணம் விஜய்யைவிட விதார்த் அழகானவர் என்று இல்லை. தமிழ் சினிமாவில் விஜய் விரும்பிய இடத்தை அவர் முதலிலேயே முடிவு செய்து முன்னே நகர்ந்து கொண்டிருந்தார். ஆகவே அவர் தோல்விகள் அவர் விரும்பிய இடத்தை அடையும் வரை அளவுகோளாக பயன்பட்டன. விதார்த் அப்படியில்லை. அவரை விரும்புவது என்பது அந்தக் கதாபாத்திரத்தை விரும்புவது. அந்தக் கதையை விரும்புவது. அந்த மக்களின் கலாச்சாரத்தை விரும்புவது என இப்படி பல விஷயங்கள் அதற்குள் புதைந்துப்போய் இருந்ததன. ஆனால் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயின்ற விதார்த்துக்கு இது ஏதோ புரியவில்லை. அல்லது அவரை புரியவிடாமல் பலர் தடுத்துவிட்டார்கள் என சொல்லலாம். 

அவருக்கு அடுத்த படம் சோபிக்கும் அடுத்த படம் சோபிக்கும் என மக்கள் மிக விருப்பமாக வாய்ப்புக் கொடுத்து காத்திருந்தார்கள். அவர் தேவையே இல்லாமல் டுயட் பாட ஆரம்பித்தார். அஜித்திற்கு தம்பியாக ஆரம்பித்தார். அது வளர்ச்சி என அவர் நினைத்தார். இல்லை. அது தேவை அளவுக்கு மட்டுமே என சுருங்கிப் போனது. விக்னேஷ் காலத்தில் இருந்து அமெரிக்க மாப்பிளை ராஜா வரைக்கும் இந்தத் தடுமாற்றம் பலருக்கும் உண்டு. ஆனால் விக்னேஷூம், ராஜாவும் தடுமாறவில்லை. தள்ளாடினார்கள். விதார்த் விரும்புது நிச்சயம் இதுவாக இருக்காது. அப்படி என்றால் அவர் மறுபடியும் ‘மைனா’ அளவுக்கு தரைமட்டமாக வேண்டும். ‘ஆள்’ போல ஆங்கிலம் பேச முயற்சிக்கக் கூடாது. ‘குற்றமே தண்டனை’போல ஈட்டிப்போல மனதை உட்புகுந்து குத்திட்டு நிற்க வேண்டும். அதுதான் தேவை விதார்த்.