சிறப்புக் களம்

உயர்ந்து கொண்டே போகும் காசநோய் பாதிப்பு... 2025-க்குள் நோய் ஒழிப்பு சாத்தியமா? #WorldTBDay

உயர்ந்து கொண்டே போகும் காசநோய் பாதிப்பு... 2025-க்குள் நோய் ஒழிப்பு சாத்தியமா? #WorldTBDay

நிவேதா ஜெகராஜா

இன்று மார்ச் 24-ம் தேதி, உலக காசநோய் விழிப்புணர்வு தினம். இந்த ஆண்டுக்கான தீம், `காசநோயை ஒழிக்க, முதலீடு செய்யுங்கள்’ (Invest to End TB) என்பதை நிர்ணயித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த தீம் மூலம், `காசநோய்க்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தவும் - காசநோய்க்கு முடிவுகட்ட உலகத் தலைவர்களால் செய்யப்பட்ட உறுதிமொழிகளை அடையவும் - ஆதாரங்களை முதலீடு செய்யவும்’ உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா, மற்ற நுண்கிருமிகளைப் போல உடனே நோய் ஏற்படுத்திவிடுவதில்லை. மனித உடலுக்குள் சென்று நோய் ஏற்படுத்துவதற்கான காலநிலை வரும் வரை காத்திருக்கும். மனித உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவிட்டால் தூங்கிக் கொண்டிருந்த பாக்டீரியா விழித்துக் கொண்டு நோயை ஏற்படுத்தும். எனவேதான் சர்க்கரை நோயாளிகள், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் அதிகமாகக் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மனஅழுத்தம் உள்ளவர்களையும் இந்நோய் எளிதாகத் தாக்குகிறது.

இரண்டு வாரத்திற்குமேல் இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் மெலிதல் போன்ற காசநோய் அறிகுறியுள்ளவர்களுக்கு இலவசமாகச் சளி பரிசோதனையும், x-ray பரிசோதனையும் செய்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் 2020-ஐ விடவும், 2021-ல் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19% உயர்ந்திருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. அதிக அளவில் காசநோய் கண்டறியப்பட்டவர்கள் இருக்கும்போதிலும்கூட, 2019-2021க்குட்பட்ட காலகட்டத்தில் காசநோய் உறுதியானவர்களில், அதிலும் அறிகுறிகளுடன் நோய் பாதிப்பு உறுதியானவர்களில் 64% பேர் மருத்துவ உதவியை நாடாமல் இருக்கின்றனர் என்றும் `2022 இந்தியா டி.பி. ரிப்போர்ட்’ மற்றும் தேசிய காசநோய் பரவல் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பாதிப்பு உறுதியானோர், மருத்துவ உதவியை நாடாமல் இருப்பதன் பின்னணியில் அலட்சியம் (68%), மிக வெளிப்படையான அறிகுறி இல்லாததால் அறியாமையுடன் இருப்பது (18%), சுய தீர்வை நாடுவது (12%), சிகிச்சைக்கு பணமின்மை (2%) ஆகியவை காரணங்களாக இருக்கிறது. 2021-ம் ஆண்டை பொறுத்தவரை, 19.33 லட்சம் புதிய நபர்கள் மற்றும் ஏற்கெனவே பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு காசநோய் உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 2020-ல், 16.28 லட்சம் என்று இருந்திருக்கிறது.

பாதிப்பு உறுதியானவர்கள் எண்ணிக்கை மட்டுமன்றி, காசநோயால் இறந்தவர்கள் எண்ணிக்கையும் இந்த ஆண்டு உயர்ந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி 2020-ஐ விடவும் 2021-ல் காசநோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13% உயர்ந்திருக்கிறது. அதனால் காசநோயால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4.93 லட்சத்தை கடந்திருக்கிறது (ஹெச்.ஐ.வி. உறுதிசெய்யப்பட்டோர் இறப்பு எண்ணிக்கை சேர்க்காமல்). மாநில வாரியாக பார்க்கையில் டெல்லி (534 பேர்), ராஜஸ்தான் (484 பேர்), உத்தர பிரதேசம் (481 பேர்), ஹரியானா (454 பேர்) ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. கேரளாவில் 115 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அம்மாநிலம்தான் மிக குறைந்த நோயாளிகளுள்ள மாநிலமாக இருக்கிறது.

இந்தியாவில் 2025-க்குள் மேம்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்பின்மூலம் காசநோயை ஒழித்துவிடுவோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உரிய முன்னெச்சரிக்கையுடன், விரைந்து காசநோயை ஒழிக்க நாமும் முன்னெடுப்போம்.