சிறப்புக் களம்

உலக பக்கவாத தினம் 2021: ஒரே ஒரு நிமிடத்திலும் ஒரு உயிரை காக்கலாம்!

உலக பக்கவாத தினம் 2021: ஒரே ஒரு நிமிடத்திலும் ஒரு உயிரை காக்கலாம்!

நிவேதா ஜெகராஜா

பக்கவாதம்... உலகளவில் நோய் பாதிப்புகளினால் ஏற்படும் இறப்புகளில், இரண்டாவது முக்கிய பாதிப்பு பக்கவாதம்தான். முதலிடத்தில் இருப்பது, ரத்த ஓட்டம் தடுக்கப்படுவதால் ஏற்படும் இதய பாதிப்பு. இதயம் சார்ந்த சிக்கலுக்கு கூட, மூச்சுவாங்குதல் - படபடப்பு போன்ற அறிகுறிகள் பொதுவானதாக இருப்பதை நாம் அறியமுடியும். ஆனால் பக்கவாதத்துக்கு அப்படியான என்ன அறிகுறி ஏற்படும் என கேட்டால், நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. காரணம், அதுபற்றிய விழிப்புணர்வின்மை.

‘என்னன்னே தெரியலை... அவருக்கு திடீரென பக்கவாதம் வந்துவிட்டது’ என பலர் சொல்லிக்கேட்க முடிகிறது. பக்கவாதம், திடீரெனதான் வரும். ஆனால் அதற்கும் அறிகுறிகள் உண்டு. அவற்றை அலட்சியப்படுத்தி இறுதி நிலையை அடையும்போதே, அந்நபருக்கு பக்கவாதம் வருகிறதென சொல்கின்றனர் மருத்துவர்கள். இதனாலேயே அறிகுறிகளை உதாசீனப்படுத்தக்கூடாது என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். அறிகுறிகளை உதாசீனப்படுத்துவதைவிடவும் ஆபத்து, பக்கவாதம் வந்தபிறகான முதல் சில மணி நேரங்களில் அலட்சியம் காட்டுவது என சொல்லப்படுகிறது.

ஏனெனில் அந்த சில நிமிடங்களில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அந்நபரின் உயிருக்கேகூட ஆபத்து விளையலாம். இதை முன்னிறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு, பக்கவாதத்துக்கு முந்தைய அறிகுறி பற்றிய விழிப்புணர்வு, பக்கவாதத்துக்கு பிந்தைய சில நிமிடத்துக்கான விழிப்புணர்வு ஆகியவற்றை அதிகரிக்க அக்டோபர் 29ம் தேதி (அதாவது இன்று) ‘உலக பக்கவாத தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

இந்த வருட பக்கவாத தினத்துக்கான மையக்கரு, ‘சில நிமிட எச்சரிக்கை செயல்பாடுகூட, ஒரு உயிரைக்காக்கும்’. பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நபர்களில் இன்றளவில் நான்கில் ஒரு நபர் உயிர் அபாயத்தில் உள்ளனர். ஆகவே உரிய விழிப்புணர்வை அளித்தால், உலகளவில் 5.5 மில்லியன் உயிர்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் பக்கவாதத்தால் சராசரியாக மீட்கப்படும் 9 மில்லியன் பேரின் வாழ்க்கையையும் மேம்படுத்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பக்கவாதம் குறித்து கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. ஒன்றரை கோடி பேர் மரணம் அடைகின்றனர். இந்தியாவில் 6 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாத நோய் வருபவர்கள், அடுத்த 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இப்படியாக எல்லோருமே முன்வைக்கும் அந்த விழிப்புணர்வுகள் குறித்து சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் நம்மிடையே தகவல்கள் பகிர்ந்துக்கொண்டார்.

பக்கவாதம் அறிகுறிகள்: BE FAST - இதுதான் பக்கவாதத்தின் அறிகுறி. இதில், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு விரிவாக்கம் உண்டு.

B - Balance. நிதானமின்றி செயல்படுவது.
E - Eye Vision. பார்வையில் பிரச்னை ஏற்படுவது.
F - Face. முகத்தில் ஒரு பகுதி மட்டும் அசைவுகளற்று போவது; மற்றொரு பகுதி அளவுக்கு மீறி அசைவுகளுடன் இருப்பது
A - Arm. கை தோள்பட்டைகளை முழுமையாக செயல்படுத்தமுடியாமல் போவது
S - Speech. பேச முடியாமல் குளறுவது.
T - Time. இறுதியில் விரைந்து நேரத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது.

இவையன்றி திடீரென தலைசுற்றுவது உள்ளிட்ட வேறு சில அறிகுறிகளும் இருக்கலாம். ஆனால் மேற்சொன்ன இந்த BE FAST அறிகுறிகள்தான் 90 - 95% பேருக்கு ஏற்படும். இந்த அறிகுறிகள் தெரிந்தவுடன், நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக மிக நல்லது.

பக்கவாதம் - உடலியல் விளக்கம்: பக்கவாதம் என்பது, மூளைக்கான ரத்தக்குழாயில் ரத்தக்கசிவு ஏற்படுவது - மூளைக்கான ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது ஆகிய இருகாரணங்களால் ஏற்படும் பாதிப்பு. 100-ல் சராசரியாக 85 பேருக்கு, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் பக்கவாதத்தால் தாக்கப்படுகின்றனர். ரத்தக்குழாய் என்கையில், அது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயாகவும் இருக்கலாம் - மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயாகவும் இருக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயென்றால், அது பக்கவாதம் என சொல்லப்படுகிறது; இதுவே இதயத்துக்கான ரத்தக்குழாயென்றால், அது மாரடைப்பு எனப்படும்.

பக்கவாதம் ஏற்படுவதன் காரணங்கள்: பக்கவாதம் எந்த வயதில் வேண்டுமென்றாலும் வரக்கூடும் என்றாலும்கூட, 40 - 50 வயதுக்கு மேல் பக்கவாதம் வருவது சற்று பொதுவாகி வருகிறது. பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணங்களாக வாழ்வியல் நோய் பாதிப்புகள் உள்ளன. உதாரணத்துக்கு சர்க்கரை நோய், இதய பாதிப்புகள், மூச்சு சார்ந்த பிரச்னைகள், சீரற்ற ரத்த அழுத்தம் உள்ளிட்டவை இருந்தால் அவர்களுக்கு பக்கவாதத்துக்கான வாய்ப்பு அதிகம்.

பக்கவாதம் தடுப்பதற்கான வழிகள்: எப்போதுமே பக்கவாதம் என்பது, ஒரு நீடித்த வாழ்வியல் பாதிப்பின் இறுதி வெளிப்பாடாகவே இருக்கும். அந்த வகையில், வாழ்வியல் பாதிப்புகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டால் (சர்க்கரைநோய் - இதய பாதிப்பு உள்ளிட்டவற்றையெல்லாம் கட்டுக்குள் வைப்பது) பக்கவாதம் ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்க முடியும். பக்கவாதத்தை தடுப்பதில், ஆரோக்கியான வாழ்க்கை முறை ரொம்பவும் முக்கியம். அந்த வகையில், ஆரோக்கியமான உணவு - புகைப்பழக்கம் மதுப்பழக்கத்தை கைவிடவது - அன்றாடம் உடற்பயிற்சி செய்வது போன்றவை அவசியம்.

பக்கவாதம் சிகிச்சைகள்: எந்த இடத்தில் ரத்தக்கசிவு / ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்தே இதன் சிகிச்சை அமையும். ஓரே ஒரு இடத்தில்தான் கசிவு / அடைப்பு எனில், அவர்களை காப்பது எளிது. அதுவே நிறைய இடத்தில் ஏற்பட்டிருந்தால் அவர்களை காப்பாற்றுவது சற்று கடினம் - நீடித்த நாள்கள் ஆகலாம். அதேபோல சிறுமூளை செல்லும் பகுதியில் ரத்தக்கசிவு / அடைப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உயிர் ஆபத்தும் உள்ளது.

ரத்த அடைப்பு ஏற்படுபவர்களில் பக்கவாதம் ஏற்பட்டு முதல் 4 மணி நேரத்துக்குள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டால், அவருக்கு மருந்து மூலமாக மட்டுமே ரத்த அடைப்பை சரிசெய்துவிடலாம். 6 மணி நேரம் என்றாலும்கூட, கருவிகள் உள்ளிட்டவை மூலம் அடைப்பை சரிசெய்யலாம்.

ஒருசிலருக்கு 24 மணி நேரம் என்றாலும்கூட பாதிப்பை சரிசெய்ய வாய்ப்புள்ளது. எனிலும், எவ்வளவு விரைந்து ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறோமோ, அவ்வளவு நல்லது. ரத்தக்கசிவிலும், இப்படி நேரம் உண்டு. விஷயம் என்னவெனில், எக்காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டவுடன், அந்நபரை மருத்துவமனையில் அனுமதிக்க தாமதிக்கவே கூடாது. இந்த ஆண்டின் மையக்கருவையே, நானும் சொல்ல விளைகிறேன் ‘சில நிமிடங்கள்கூட உயிரைக்காக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார் மருத்துவர் பிரபாஷ்.