உலக சிட்டுக் குருவி தினமான இன்று (மார்ச் 20) அழியும் நிலையில் இருக்கும் சிட்டுக் குருவிகளை மீட்டெடுக்க ஆதரவு கரம் நீட்டுவோம்.
சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள் சுறு சுறுப்புக்கு பெயர் போனவை. அமைதியாக அழகான கீச் கீச் என்று ஓசையெழுப்பும் ஆண் பெண் சிட்டுக் குருவிகள் இருவேறு வித்தியாசமான வண்ணங்களை கொண்டவை. பார்ப்பதற்கு சிறியதாக இருப்பதால் சிட்டுக்குருவி என அழைக்கப்படும் இந்த பறவை இனத்தை இப்போது மிகவும் அரிதாகவே காணமுடிகிறது. வானில் கூட்டம் கூட்டமாக பறந்து பார்ப்பவர் கண்களை பரவசப்படுத்தும் சிட்டுக் குருவிகள் தற்போது வனப் பகுதிகளில் மட்டுமே அதிக அளவில் காணப்படும்.
ஒரு காலத்தில் இந்த சிட்டுக் குருவிகள் குடியிருப்பு பகுதிகளிலும் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால் இப்போது நகர் பகுதிகளில் சிட்டுக் குருவிகளை பார்ப்பதே அரிதிலும் அரிதாக இருக்கிறது. காலநிலை மாற்றம், வளர்ந்து வரும் விஞ்ஞானம், போன்ற காரணங்களால் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு, செல்போன் டவரில் இருந்து வெளியேறும் கதிரியக்கம், பட்டாசு வெடித்தல் போன்ற காரணங்களாலும் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக சொல்லப்படுகிறது.
வீட்டுக் குருவி, ஊர் குருவி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் சிட்டுக் குருவிகள் உயரமான மரங்களில் கூடுகட்டி வசித்து வந்தன. சிட்டுக் குருவியா அது எப்படிப்பா இருக்கும், அதுவா இந்தா இப்படித்தான் இருக்கும் என படத்தைக் காட்டி பிள்ளைகளுக்கு சொல்லும் அளவிற்கு சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது. அழிந்து வரும் இந்த சிட்டுக்குருவி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், பறவை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று உலக சிட்டுக் குருவி தினத்தில் இந்த இனத்தை மீட்டெடுப்போம் என்ற உறுதிமொழி ஏற்போம்.