சிறப்புக் களம்

சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க பள்ளி மாணவர்கள் முயற்சி

சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க பள்ளி மாணவர்கள் முயற்சி

webteam

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அழிந்து வரும் பறவை இனமான சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நீலகிரி மாவட்டம் கூடலூரில் பழங்குடியின பள்ளி மாணவர்கள் சிரத்தையுடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலாவில் பழங்குடியின மாணவர்களுக்காக இந்த உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 350 மாணவர்களும் சிட்டுக்குருவிகள் மீது தீராத காதல் கொண்டவர்களாக உள்ளனர். அழிவின் விளிம்பிலுள்ள சிட்டுக்குருவிகளுக்குப் பாதுகாப்பான இருப்பிடத்தை ஏற்படுத்தி, கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் பள்ளியையே சிட்டுக்குருவிகளின் வாழ்விடமாக மாற்றியுள்ளனர் தேவாலா பள்ளி மாணவர்கள். பள்ளி வளாகத்தில் ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட கூடுகள் உள்ள நிலையில், மேலும் பல இடங்களில் கூடுகளை மாணவர்கள் ஆர்வமுடன் பொருத்தி வருகின்றனர். இளம் வயதிலேயே விவசாயத்துக்கும், மனிதர்களுக்கும் சிட்டுக்குருவிகளால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்தால், அவற்றைப் பாதுகாக்க முடியும் என்கிறார் தேவாலா பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன். சிட்டுக்குருவிகள் மட்டுமின்றி இன்னும் பல உயிரினங்கள் அழியும் தருவாயிலுள்ளன என கூறும் சமுத்திரபாண்டியன், பள்ளி மாணவர்களுக்கு அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.