சிறப்புக் களம்

உலக கல்லீரல் தினம்: இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சைபெறுவது அவசியம்

உலக கல்லீரல் தினம்: இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சைபெறுவது அவசியம்

Sinekadhara

உடலில் மிக முக்கிய பாகங்களில் ஒன்று கல்லீரல். பெரும்பாலும் கல்லீரல் நலனில் பிரத்யேகமாக அக்கறை செலுத்தமாட்டோம். ஆனால் கல்லீரல் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும்போது அது உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இன்று உலக கல்லீரல் தினம். கல்லீரல் பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

சிறிய கால்பந்து அளவிற்கு, அடர் சிவப்பு நிறத்தில் சுமார் 3 பவுண்டு எடையுடன் வலதுபுற வயிற்றில் இருக்கும் ரப்பர் போன்ற தன்மைகொண்ட உறுப்புதான் கல்லீரல். இது விலா எலும்புகளுக்கு அடியில் இருப்பதால் அதன் இயக்கத்தை நம்மால் உணர முடிவதில்லை.

கல்லீரலின் வேலை என்ன? கல்லீரல் செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது?

உணவு செரிமானத்திற்கு கல்லீரல் உதவுகிறது. மேலும் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் கல்லீரலின் பங்கு அளப்பறியது. ஆனால் மரபணு சார்ந்த பிரச்னைகள், வைரஸ் பாதிப்பு, ஆல்கஹால் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் நீண்ட நாட்கள் வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதாவது சிரோசிஸ் (cirrhosis) என்று சொல்லக்கூடிய வடுக்கள் உருவாகும். சரியாக சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் கல்லீரலில் சிறிது வலி இருக்கும்போது ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடையும் வாய்ப்புகள் அதிகம்.

கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகள்

நீர் கோர்த்து, கால் மற்றும் வயிறு வீங்குதல்

கல்லீரல் பாதிப்பின் பொதுவான அறிகுறி இது. சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50% பேர்களில் ஆரோக்கியமான கல்லீரல் திசுக்களை வடு திசுக்கள் ஆக்கிரமித்துவிடும். இதனால் வயிறு மற்றும் கால்ப்பகுதிகளில் நீர்க்கோர்த்து வீக்கம் ஏற்படும். கல்லீரலில் ஆல்புமின் சுரப்பை அதிக ரத்த அழுத்தம் தடுக்கும்போது இந்த பிரச்னை உருவாகும். ஆல்புமின் என்பது திசுக்களில் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கும் ஒரு புரதம்.

சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள்காமாலை)

கல்லீரல் பிரச்னை ஏற்படும்போது சருமம், கண்கள் மற்றும் சிறுநீரில் நன்கு வித்தியாசம் தெரியும். அதாவது அடர்ந்த மஞ்சள் நிறமாற்றம் உருவாகியிருப்பதை காணமுடியும். ரத்த ஓட்டத்திலுள்ள ரத்த சிவப்பணுக்கள் உடையும்போது, பிலிருபின் என்ற நிறமி உருவாகும். இதனால்தான் நிறமாற்றமானது ஏற்படுகிறது. கல்லீரல் சீராக இயங்கும்போது அது பிலிருபினை உறிஞ்சி அதை கழிவாக வெளியேற்றிவிடும்.

யோசிப்பதில் சிரமம் மற்றும் குழப்பம்

ஹெபடிக் என்செபலோபதி என்ற கல்லீரல் குறைபாட்டால் குழப்பம் மற்றும் மயக்கம் போன்ற பிரச்னைகள் உருவாகும். ரத்தத்திலுள்ள நச்சுக்களை கல்லீரல் அகற்ற தவறும்போது அது மூளையுல் செயல்பாட்டை பாதிக்கும். இதைத்தான் ஹெபடிக் என்செபலோபதி என்கின்றனர். இந்த பிரச்னை திடீரெனவோ அல்லது சிறிது சிறிதாகவோ உருவாகலாம்.

ரத்தக்கசிவு

வயிற்றுப்பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 25% ரத்தத்தை கல்லீரல் சுழற்சிமுறையில் சுத்தம்செய்கிறது. ஆனால் சிரோசிஸ் பிரச்னையானது ரத்தக்கசிவை ஏற்படுத்திவிடும். இதனால் ரத்த வாந்தி அல்லது மலம் கழிக்கும்போது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். வடுக்கள் நிறைந்த திசுக்கள் வழியாக ரத்தம் செல்லும்போது ரத்தக்கசிவு ஏற்படுவதைத்தான் போர்டல் நரம்பு த்ரோம்போசிஸ் ( portal vein thrombosis) என்று அழைக்கின்றனர்.

இதுதவிர கல்லீரல் செயலிழப்பு ஏற்படும்போது சொறி, மயக்கம், குமட்டல் அல்லது வாந்தி, ஜீரணமின்மை போன்ற அறிகுறிகளும் தென்படும். எனவே இதுபோன்ற அறிகுறிகள் காணப்படும்போது ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும்.