சிறப்புக் களம்

ஒடுக்கப்பட்டோரின் உலக நாயகன்: நெல்சன் மண்டேலா பிறந்தநாள் இன்று!

ஒடுக்கப்பட்டோரின் உலக நாயகன்: நெல்சன் மண்டேலா பிறந்தநாள் இன்று!

sharpana

தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிரான போராட்ட நாயகனுமான நெல்சன் மண்டேலாவின் 102-வது பிறந்த தினமும், சர்வதேச நெல்சன் மண்டேலா தினமும் உலகம் முழுக்க இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.   

கொரோனா சூழலிலும் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் நிறவெறிகொண்ட போலீஸால் கொடூர கொலை செய்யப்பட்டார். அவரது படுகொலைக்காக உலகமே நீதிகேட்டு போராடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ’ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்கலாம்’ என்று கடந்த 40 ஆண்டுகளாக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த ஃபேர் அண்ட் லவ்லி முகப்பூச்சு க்ரீமின் பெயரையே யுனிலீவர் நிறுவனம் ’க்ளோவ் அண்ட் லவ்லி’ என்று மாற்றிக்கொண்டது. வெள்ளை மட்டுமே அழகில்லை என்பதை உணர்த்த இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரிகிறது.

ஆனால், சமூகத்தில் இந்த மாற்றங்கள் வருவதற்கெல்லாம் 80 ஆண்டுகளுக்கு முன்னரே தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்கள், பெரும்பான்மையினரான  கருப்பினத்தவரை நிறவெறிகொண்டு ஒடுக்கி ஆண்டு கொண்டிருந்தனர். இதனையெல்லாம் பார்த்துப் பார்த்து பாறையாக வளர்ந்தான், அந்தச் சிறுவன். பின்னர் இளைஞரானதும் ஓட்டுரிமை மறுக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதுமாக இருந்த கருப்பினத்தவர்களை ஒன்று திரட்டி 1939 ஆம் ஆண்டு தனது 21 வயதிலேயே தீரத்தோடு வெள்ளையர்களை எதிர்த்து கடுமையாக போராடினார். அந்த இளைஞர்தான், இன்று உலகமே மதித்துப்போற்றும் தலைவர் நெல்சன் மண்டேலா.  

   “ஒருவர் தோல்வியே அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை. ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது மீண்டு எழுவதில்தான் புகழ் பெறுகிறார்” என்ற நெல்சன் மண்டேலாவின் கூற்றுப்படியே கருப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக எத்தனையோ போராட்டங்கள், அவமானங்கள், 27 ஆண்டு சிறைவாசம் என பலகட்ட தோல்விகளிலிருந்துதான் தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சியை மலரவைத்தார்.

நெல்சன் மண்டேலா 1918-ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது, இயற்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. இவரது தந்தை சோசா, பழங்குடியினத் தலைவர். சிறுவயதில் குத்துச்சண்டை வீரரான நெல்சன் மண்டேலாவை, பின்னாளில் நிறவெறிக் கெதிரான யுத்த வீரராக மாற்றியது வரலாறு. பள்ளிக் கல்வியை ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே படித்தவர்தான், பின்னாளில் வழக்கறிஞராகி தன் மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கி அரசையே ஆட்டம் காண வைத்தார்.  

’கருப்பினத்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. சொந்த நாட்டுக்குள்ளேயே பயணம் செய்ய அனுமதியும் நிலவுடைமையும் தடை செய்யப்பட்டுள்ளது நீதியற்றது. இதனை, எதிர்க்கவேண்டும்’ என்றுகூறி கருப்பின மக்களை வெள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்து நீண்ட நெடிய போராட்டத்தை துவக்கி வைத்தார். அதன், தொடர்ச்சியாக 1943 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தவர் பின்னாளில், அக்கட்சியின் தலைவராகவும் வளர்ந்தார். அவர், கருப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக  போராடப் போராட, அவரது கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸும் 1960 ஆம் ஆண்டுகளில் தீவிரமாக வளர ஆரம்பித்தது. 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நிறவெறிக்கு எதிரான மிகப்பெரிய மாநாட்டை நடத்தி நாட்டையே அதிர வைத்தார். அதற்கடுத்தடுத்த போராட்டங்களால் அரசை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். இதனால், அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு 1964 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி முதல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலகில் வேறு எந்தத் தலைவரும் மக்களின் விடுதலைக்காக இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்ததில்லை என்பது வீர வரலாறு.

மக்களின் பல்வேறு கட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களாலும் உலக நாடுகளின் வலியுறுத்தலாலும் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். அப்போது, அவரை இந்தியாவின் சார்பாக வரவேற்றவர், பிரதமராக இருந்த வி.பி சிங்.

நெல்சன் மண்டேலாவின் மனைவிகளில் உலகப்புகழ் பெற்றவர், இரண்டாவது மனைவியான வின்னி மண்டேலா. அவரை எப்படி உலக மக்கள் நேசிக்கிறார்களோ, அதே அளவுக்கு வின்னி மண்டேலாவும் மதிக்கப்படுகிறார். காரணம், கருப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருந்த போராளிகளில் வின்னியும் ஒருவர். தனது கணவர் நெல்சன் மண்டேலாவின் போராட்டக் களங்களில் உறுதுணையாக இருந்தவர். நெல்சன் மண்டேலாவுக்கு மொத்தம் 5 பிள்ளைகள். அவர்களில், இளைய மகள் ஜிண்ட்சி கடந்த வாரம்தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியாக பதவியேற்ற நெல்சன் மண்டேலா, 1999 ஆம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தார். பின்னர் பதவியிலிருந்து விலகியவர், மீண்டும் போட்டியிட மறுத்து பதவிகளின் மீதும் தனக்கு பற்றில்லை என்பதை உணர்த்திய உன்னத தலைவர். இந்தியாவின் உயரிய விருதான ’பாரத ரத்னா’ விருது இந்தியர் அல்லாத ஒருவருக்கு கிடைத்தது என்றால், அது நெல்சன் மண்டேலாவுக்குத்தான். 1993 ஆம் ஆண்டு உலகின் உயரிய விருதான நோபல் பரிசும் அமைதிக்காக, அவருக்கு வழங்கப்பட்டது. ஐ.நா சபை கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளை ‘நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்’ ஆக அறிவித்தது. உலகம் முழுக்க 100 க்கும் மேற்பட்ட உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்ட ஒரே தலைவரும் இவர்தான்.

மண்டேலா விடுதலையானதும் ”இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவேண்டும். நிறவேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்டி கருப்பர்களுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்” என்று ஆற்றிய உரை உலகெல்லம் நிறவெறிகொண்டு ஒடுக்கப்படும் மக்களுக்கு இன்றும் எழுச்சிக்குரலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது, நிறவெறிக்கெதிராக போராடி ஒவ்வொருவரும் நெல்சன் மண்டேலாதான் என்பதை நினைவுப்படுத்துகிறார்கள். நெல்சன் மண்டேலா நிறவெறிக்கெதிரான எதிர்ப்பின்மூலம் நம் இதயங்களில் எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்.