சிறப்புக் களம்

இன்று உலக சுகாதார நாள்: மனசை மயக்கலாம் மவுனமாக!

இன்று உலக சுகாதார நாள்: மனசை மயக்கலாம் மவுனமாக!

webteam

உலக சுகாதார நாள், இன்று. உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், மன அழுத்தம்.

இன்று காணப்படும் பரபரப்பான சூழலில் எல்லா துறைகளிலும் அனைவரும் ஒரு விதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அறிகுறிகள். ஆனால் இந்த மன அழுத்தம் சிலரை மரணத்துக்கு இட்டுச் சென்று விடுகிறது. மன அழுத்தப் பிரச்சனையின் எதிரொலியாக அனைத்து துறைகளிலும் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. உலக அளவில் இந்தியாவில் தான் தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்

தேசிய மன நோய் மற்றும் நரம்பியல் கழகம் நடத்திய ஆய்வில் இந்திய மக்கள் தொகையில் 13.7 சதவீதம் பேர் மன அழுத்தத்தின் உச்சமாக ஏதாவது ஒரு வகை மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதில் 60% பேர் தங்களுக்கு உளவியல் பிரச்சனை இருப்பதே தெரியாமல் உள்ளனர். மேலும் மனிதனுக்கு 75 முதல் 80 சதவிகித நோய்கள் மன அழுத்தத்தால் வருவதாகவும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்களே அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது. இந்த மனசை மவுனமாக மயக்கி நம் பக்கம் இழுக்கலாம். அதற்கு...

முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்து செய்ய வேண்டாம்.

குழப்பங்களையும் கவலைகளையும் உள்ளுக்குள் புதையாமல் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மனம் பதற்றமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள்.

வார இறுதி விடுமுறை நாட்களை மனநிறைவாகச் செலவிடுங்கள், வெளியே சென்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது உற்சாகத்தை தரும்.

உள்ளங்கைகளில் கட்டை விரலால் தொடர் அழுத்தம் தாருங்கள். அது மன அழுத்தத்தை போக்கும் திறன் கொண்டது.

இசையை ரசியுங்கள், எத்தகைய பதற்றத்தையும் தணிக்கும் சக்தி இசைக்கு உண்டு. வெந்நீர் குளியல், நடைபயிற்சி, தியானம் என அனைத்துமே மனதை அமைதிப்படுத்தும்.