சிறப்புக் களம்

‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.!

webteam

நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கு குறிப்பிட்ட சக்தியை நாம் அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த சக்தி உணவு உட்கொள்வது மூலமே உடலுக்கு கிடைக்கிறது. வாகனங்களுக்கு எரிபொருள் எப்படியோ அதேபோலத்தான் உடலுக்கு உணவும். ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் உணவு உட்கொள்வது என்பது ஏதோ ஒரு வேலை போலவே ஆகிவிட்டது. அத்தியாவசியம் என்பதை மறந்து போகிறப்போக்கில் செய்கிற காரியமாக உணவு உட்கொள்வதை கொண்டு வந்துவிட்டோம். வேலைப்பளு காரணமாக சாப்பிடவில்லை என்று சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு போகிறவர்களும் உண்டு. உணவு குறித்தும், ஊட்டச்சத்து அத்தியாவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உறுப்பு நாடுகள் 1979-ம் ஆண்டு உணவு தினத்தை நிறுவி, அதனை வருடம் தோறும் கடைபிடிக்க வேண்டுமென ஐநாவுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்கு 1980ம் ஆண்டு ஐநா ஒப்புதல் அளித்தது. அதன்படி 1981 முதல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

''நமது செயல்பாடுகளே நமது எதிர்காலம்; பசியற்ற உலகுக்கு ஆரோக்கியமான உணவுகள்'' என்ற மையக்கருத்துடன் இந்த ஆண்டுக்கான உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் 82 கோடி மக்கள் பசியால் வாடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 9-ல் ஒருவர் பசியில் இருக்கிறார். மூன்று பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை அளிக்கிறது புள்ளிவிவரம். ஒருபுறம் உணவின்றி ஒருசாரார் தவித்துவரும் நிலையில் மறுபுறம் உணவு வீணாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

நகரமயமாதல் போன்ற காரணங்களால் விவசாயங்கள் அழிந்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவு என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது. குறைந்த காலங்களில் அதிக மகசூல் வேண்டி இயற்கைக்கு எதிராக உணவுபொருட்களை விளைவிப்பதும், உணவு விஷமாகும் ஆபத்துதான் எனவும் கூறப்படுகிறது. ஆரோக்கியமான உணவு என்பது அளவை பொறுத்தது இல்லை எனக்கூறும் மருத்துவர்கள், வயிறு முட்ட ஊட்டச்சத்து இல்லாத உணவை உண்பதைக் காட்டிலும், சீரான இடைவெளியில் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ளுதலே பயன் தரக்கூடியவை என்றும் அறிவுரை கூறுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தின் அச்சாணியே உணவு. ஆனால் வயிற்றை நிரப்பி பசியை போக்க மட்டுமே உணவு என்ற நிலை வந்துவிட்டதாகவும், இதுவே ஊட்டச்சத்து குறைபாடான தலைமுறையை உருவாக்கி வருவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள், கீரை வகைகள் என ஊட்டச்சத்து அதிகம் உள்ள இயற்கை உணவுகளை உட்கொள்ளுதல், துரித உணவுகளை தவிர்த்தல், நொறுக்குத் தீனிகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், முடிந்தவரை வீட்டில் சமைத்து உண்ணுதல் போன்ற செயல்பாடுகள் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்பது ஆரோக்கியமான உடலுக்கு சரியாக பொருந்தக்கூடிய பழமொழி. உடல் ஆரோக்கியமே நம்முடைய வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு உந்துசக்தியாக இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் மூலம் ஊட்டச்சத்தான தலைமுறையை உருவாக்க வேண்டுமென்பதே உணவு தினத்தின் மையக்கருத்து. அதனை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டுமென்பதே உணவு தினத்தின் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி.