சிறப்புக் களம்

இன்று உலக எமோஜி தினம்... உலகத்திற்கான பொது மொழியா எமோஜி?

இன்று உலக எமோஜி தினம்... உலகத்திற்கான பொது மொழியா எமோஜி?

webteam

இன்று உலக எமோஜி தினம். உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் எமோஜியின் வரலாறு என்ன? பயன்பாடு என்ன? – பார்ப்போம்.

உணர்வை, தகவலை, தேவையைச் சொல்லும் எளிய குறியீட்டுப் படங்களே எமோஜிக்கள் ஆகும். இவை தற்போது முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஜப்பானியர்களின் மொழியே சித்திர எழுத்துகள்தான் என்பதால், அவர்களே எமோஜிக்கு முன்னோடிகளாக உள்ளனர். 1998ல் ஜப்பானைச் சேர்ந்த எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு செயல்வடிவம் கொடுத்தது.

அந்த நிறுவனத்தில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர்  செய்திகளைப் படங்களாகச் சொல்ல நினைத்தார், அப்போது அளவில் பெரிய விரிவான படங்களைப் பயன்படுத்த தொழில்நுட்பம் இடம் கொடுக்காததால் அவர் உருவாகியதுதான் எளிமையான எமோஜி.

முதலில் மக்கள் அன்றாடம் வெளிப்படுத்தும் 180 உணர்வுகளைப் பட்டியலிட்டு அவற்றுக்கான எமோஜிக்களை உருவாக்கினார் குரிடா. இப்போது இன்னும் பல நூறு எமோஜிக்கள் வந்துவிட்டன.

இன்றைக்கு எமோஜிக்களை வைத்து மட்டுமே கவிதைகளை எழுதலாம் என்னும் அளவுக்கு எமோஜிக்களின் பயன்பாடுகள் மறுவடிவம் பெற்று உள்ளன. அதற்காக என்றே பிரத்யேக வலைத்தளங்களும் உள்ளன.

உலகில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பயன்படுத்தப்படும் இன்றைய சூழலில், அனைவருக்குமான ஒரே மொழியாக எமோஜிக்கள் உள்ளன. எதிர்காலத்தில் எமோஜிக்கள் அனைவருக்குமான பொது மொழியாக உருவெடுக்குமோ என்று உலகளாவிய ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

இன்னொரு பக்கம் இயற்கைப் பேரிடர்களுக்கான குறியீடுகளை எமோஜிக்களாக உருவாக்கினால், அனைவருக்கும் எச்சரிக்கைகளை விடுப்பது எளிதாக இருக்கும் என்பதால், அது குறித்த ஆய்வுகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.