சிறப்புக் களம்

மாவுச்சத்தை குறைத்தால் நீரிழிவு குறையும்... இன்று உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம்!

மாவுச்சத்தை குறைத்தால் நீரிழிவு குறையும்... இன்று உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம்!

JustinDurai

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் எப்படி ஏற்படுகிறது? நீரிழிவு நோயிலிருந்து தற்காப்பது எப்படி? என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

''இன்றைய உலகின் மக்கள் தொகை 600 - 700 கோடி இருக்கும். இதில் நீரிழிவு நோய் இருப்போர் சுமார் 43 கோடி. முதலிடத்தில் இருக்கும் சீனாவில் 11 கோடி பேரும் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியாவில் 7 கோடி பேரும் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடி என்று வைத்துக்கொண்டாலும் இன்றைய தேதியில் நம் மாநிலத்தில் மட்டும் 45 முதல் 50 லட்சம் நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் இந்த நீரிழிவை கட்டுப்படுத்த அதனால் விளையும் கேடுகளை தடுக்க என, நாம் செலவிடும் மொத்த தொகை வருடத்திற்கு சுமார் 673 பில்லியன் டாலர்கள். சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் தனது சம்பாத்தியத்தில் இருந்து சுமார் ரூ.25,000 நீரிழிவை கட்டுப்படுத்த செலவழிக்கிறான்.

இந்தியாவில் மட்டும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பதினைந்து ஆண்டுகளில் நூறு சதவிகிதம் அதிகரித்துள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு நிகழும் மரணங்களுள் 50 சதவிகிதத்திற்கு மேல் நீரிழிவின் பங்கு நிச்சயம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மில் பாதி பேருக்கு நமக்கு நீரிழிவு இருப்பதே தெரியாது என்பதே அச்சத்திற்குரிய விசயம்.

ஏன் நமக்கு நீரிழிவு வருகிறது?

நமது பாட்டன் பாட்டிகள் காலத்தில் இருந்த பஞ்சம் தற்போது இல்லை. அதனால் பட்டினி இல்லை. பசுமை புரட்சிக்கு நன்றி சொல்வோம். தற்போது தேவைக்கு மிதமிஞ்சிய அளவில் நமக்கு உணவு கிடைக்கிறது. உணவு மட்டுமல்ல.. கூட குப்பை உணவுகள் அத்தனையும் மலிவான விலையில் கிடைக்கிறது. நம் முன்னோர்களிடம் இருந்த உழைப்பு நம்மில் காணாமல் போய் விட்டது.

அவர்கள் நாளைக்கு ஒருவேளை அல்லது இரு வேளை உணவுண்டு, அதற்கும் மேல் வேலை செய்தனர். நாமோ கட்டாயம் மூன்று வேளையும் உணவு உண்டு, அதற்கு ஏற்றாற் போல் வேலை சிறிதும் செய்வதில்லை.

அரிசியை பாலிஷ் செய்தோம். வருடம் ஒருமுறை விழாக்காலங்களில் உண்ட இட்லி தோசயை தினமும் உண்ணத் தொடங்கினோம். தெருக்கு தெரு வடை, பஜ்ஜி , போண்டா கடைகள், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா கடைகள், மது கெட்ட வார்த்தையாய் இருந்த காலம் மலையேறிவிட்டது

ஃபாஸ்ட் புட் , ஃப்ரைடு உணவுகள், பீட்சா, பர்கர் , கே.எப்.சி, மெக்டொனால்டு என நம் கையில் இருக்கும் காசை பொறுத்து நாம் கரை ஒதுங்க பல இடங்கள் நம் சமூகத்தில் முளைத்து விட்டன.

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை கூட பொறுப்பதில்லை. உடனே செரிலாக், லாக்டோஜென் , பிறகு மிட்டாய், கூல் ட்ரிங்க்ஸ் என்று அவர்களையும் மாவுக்கு அடிமையாக்கி விட்டோம்.

இனி என்ன? பத்து வயது குழந்தைக்கும் ஃபேட்டி லிவர் எனும் கல்லீரல் வீக்க நோய்; வயதுக்கே வரமுடியாமல் செய்யும் அளவு சிறு வயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு பிசிஓடி; இருபதுகளிலேயே துளிர்விடும் நீரிழிவு; பின் முப்பதுகளில் நன்றாக வேர்விட்டு வளர்ந்து விருட்சமாகி சிறுநீரகங்களை காவு கேட்கிறது.

இன்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகங்களுக்காக காத்திருப்போர் பட்டியலில் ஒரு லட்சம் பேருக்கும் மேல் இருக்கின்றனர்

நாம் என்ன செய்ய வேண்டும்?

சதா மூன்று வேளையும் மாவுச்சத்தை உண்ணும் இந்த உணவு முறைக்கு குட்பை சொல்ல வேண்டிய தருணம் வந்தேவிட்டது. மாவுச்சத்தை உணவில் குறைத்தால் நீரிழிவு குறையும் இந்த உண்மையை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும். உண்மையில் .நீரிழிவு என்பது மாவுச்சத்தினால் வரும் இழிவே ஆகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்

தீபாவளி என்றாலே இனிப்புகளின் பண்டிகை. தயவு செய்து அதிகமான இனிப்புகள் எடுத்து பிறகு ஆபத்தில் சிக்க வேண்டாம். நாம் பாதுகாப்பாக இருந்தால் தான் இன்னும் பல தீபாவளிகளைக் காண முடியும்.''