கருவுற்றிருக்கும் பெண்களிடம் முதலில் கூறப்படும் அட்வைஸ் நன்றாக சாப்பிடவேண்டும் என்பதுதான். குழந்தை வயிற்றிலிருக்கும்போது எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அதே அளவிற்கு குழந்தை பிறப்பிற்கும் பிறகும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். குழந்தைக்கு வேண்டிய சத்துகள் மற்றும் எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் தாய்ப்பால் மூலமே கிடைப்பதால் குழந்தைக்கு போதுமான அளவு பால் சுரக்கும்படி ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பாலின் மகத்துவத்தை போற்றும் வகையிலும், தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மார்கள் சில உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதன்மூலம் பால் சுரப்பை அதிகரிக்க முடியும்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் அதிகளவில் புரதச்சத்து நிறைந்திருப்பது நமக்கு தெரியும். ஆனால் இதில் இரும்ம்புச்சத்தும் நிறைந்திருக்கிறது. இது ரத்தசோகை மற்றும் சோர்வடைந்த உடலுக்கு போதுமான எனர்ஜியைக் கொடுக்கிறது. கீரையை வேகவைத்து சாப்பிடுவதால் மழைக்கால நோய்கள் தாக்காமல் நம்மை பாதுகாக்கும். பசலைக்கீரையை பொரியல், சாலட் அல்லது ஜூஸ் என எப்படி வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
நட்ஸ்(வால்நட், பாதம், முந்திரி)
பாலூட்டும் தாய்மார்களுடைய டயட்டில் கட்டாயம் இடம்பெற வேண்டியை இவை. வைட்டமின் இ, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், நார்ச்சத்து மற்றும் பல சத்துகள் நட்ஸ்களில் நிறைந்திருக்கின்றன. இவை பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியவை. மேலும், நட்ஸ்களில் செரட்டோனின் இருப்பதால் இது பால்சுரப்பை துரிதப்படுத்துகிறது.
பெருஞ்சீரகம் அல்லது சோம்பு
பெருஞ்சீரகம் வாசனை மற்றும் சுவைமிக்கது. இது செரிமானத்தை தூண்டக்கூடியது. இது பால்சுரப்பை அதிகரிக்கக்கூடியது. மசால சமையல்கள் அல்லது டீ அல்லது சிலர் பாலில் சுவைக்காக பெருஞ்சீரகத்தைச் சேர்க்கின்றனர்.
வெந்தயம்
பாலூட்டும் தாய்மார்களுக்கு வெந்தயம் மிகவும் உதவியாக இருக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்டுகளும், பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களும் நிறைந்திருக்கிறது. இது ஹார்மோன்களை தூண்டி பால் சுரப்பை அதிகரிக்கிறது.
சீமை தினை
பொதுவாகவே சிறுதானியங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. அதிலும் சீமை தினையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கின்றன. இதில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. மேலும் இது சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
பால் பொருட்கள்
பாலூட்டும் தாய்மார்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே பால், தயிர், சீஸ் மற்றும் பனீர் போன்ற பால் பொருட்கள் தாய்மார்களுக்கு சிறந்த உணவுகள். இதிலுள்ள கால்சியம் சத்து குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
ஓமம்
ஓமத்தில் ஊட்டச்சத்துகள் ஏராளம். இது பால்சுரப்பை அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு வரும் முதுகு வலியை குறைக்க இது உதவும். குழந்தை பிறப்பிற்கு பிறகு உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகளை ஓமம் குணமாக்குவதாக பெரியோர்கள் கூறுவதுண்டு. எனவேதான் பாலூட்டும் தாய்மார்கள் ஓமத்தண்ணீரை தொடர்ந்து குடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உலக தாய்ப்பால் வாரம் கட்டுரைகள்: