சிறப்புக் களம்

பெண்கள் தினத்தை கொண்டாடப் போறவங்க, இதையெல்லாம் முதல்ல செய்ங்க!

பெண்கள் தினத்தை கொண்டாடப் போறவங்க, இதையெல்லாம் முதல்ல செய்ங்க!

நிவேதா ஜெகராஜா

மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினம். `பெண் உரிமையென்பது, அடிப்படை மனித உரிமையை கோரும் பயணம்தான்' என்றார் ஹிலாரி க்ளிண்டன். இந்த வாக்கியத்தின் பின்னுள்ள உட்கருத்தை, நாம் ஒவ்வொருவரும் பாலின பேதமின்றி புரிந்து கொள்ள வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்.

பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதிலிருந்து சொன்னால், கிளிண்டனின் வார்த்தையை கூடுதல் தெளிவுடன் நம்மால் புரிந்துக்கொள்ள இயலும்.

  • 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி, `ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. அனைவருக்கும் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும். கூலியை சமமாக வழங்கவேண்டும். வாக்களிக்கும் உரிமை பெண்ணுக்கும் வேண்டும்’ எனக்கூறி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் டென்மார்க் கோபன்ஹேகனில் நகரில் போராட்டமொன்று நடந்தது.
  • அடுத்ததாக, 1917-ல் ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள், இதேபோன்றதொரு கருத்தாக்கத்துக்காக, புரட்சியையும் போராட்டத்தையும் முன்னெடுத்தனர். அந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது.

- பெண்களால் பெண்களைக்கொண்டு இயக்கப்பட்ட இந்த இரு மாபெரும் `சம உரிமை’ புரட்சிகள் இரண்டுமே, இருவேறு காரணங்களுக்காக மார்ச் 8-ம் தேதி பெண்கள்தினம் கடைபிடிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் அந்த தினம் வருகையில், இந்த இரு புரட்சிகளையும் நினைவுகூர்ந்து, `சம உரிமையையும், அடிப்படை மனித உரிமையையும்’ கோரிய பெண்களின் பயணம் நினைவுகூரப்பட வேண்டுமென்பது, இது தொடங்கப்பட்டதன் வரலாறு. காலப்போக்கில், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளில், இன்று அது கொண்டாட்டத்துக்கான நாளாக மாறியுள்ளது. உண்மையில் இந்த தினம் கொண்டாட்டமாக மாற்றப்படுவதில், தவறேதும் இல்லை. ஆனால், கொண்டாடும் அளவுக்கு உலகம் பெண்கள் முன்னேற்றம் விஷயத்தில் உண்மையில் உயர்ந்துவிட்டதா என்பதில்தான் விஷயம் இருக்கிறது. 100 வருடங்களுக்கு முன்பு போராடிய பெண்கள் எதற்காக போராடினார்களோ அதை இன்று மாறிவிட்டதா? சிந்தித்துப் பார்த்தால், இல்லைதான்.

`அட என்னங்க இப்படி சொல்றீங்க? இப்பலாம் எவ்வளவு பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுது தெரியுமா? எவ்வளவு பெண்கள் வேலைக்கு போறாங்க தெரியுமா? எவ்வளவு பெண்கள் ஆண்களுக்கு நிகரா உயர்பதவியில இருக்காங்க தெரியுமா?’ என்று கேட்கலாம். ஆனால், இங்கு பெண் அடிமைத்தன்மையென்பது, தன் வடிவத்தை மாற்றியிருக்கிறதே தவிர, இன்னும் அது முடிவுக்கு வரவில்லை. உதாரணத்துக்கு, அன்று பெண்கள் போராடியதன் முக்கிய நோக்கம், சம்பளத்தில் சம உரிமை. ஆனால் இன்றும் அந்தப் பிரச்னை நிலவிக்கொண்டேதானே இருக்கிறது. இங்கு ஆண் பணியாளர் வாங்கும் அதே சம்பளத்தை உயர்பதவியிலிருக்கும் பெண் பணியாளரும் வாங்குகின்றாரா? அல்லது, குறைந்தபட்சம் உயர்பதவியிலிருக்கும் ஆண் பணியாளர்கள் எண்ணிக்கைக்கு ஈடாக உயர்பதவியில் பெண் பணியாளர்கள் எண்ணிக்கைதான் இருக்கிறதா?

முந்தைய காலகட்டத்தைவிடவும் பெண்கள் பலருக்கு வேலை வாய்ப்புக்கான வெளி அதிகமாகியுள்ளது என்பதை மறுக்கவிரும்பவில்லை. ஆம், கடந்த 20 ஆண்டுகளில், ஹோம் மேக்கர்ஸூம்கூட, ஹோம் ஓனர்ஸாக மாறியுள்ளனர். பல வீடுகளில் பெண்கள் தத்தமது உரிமைக்குரலை சரியான நேரத்தில் எழுப்ப தவறுவதில்லை. ஆனால், இன்றும் வீட்டில் சமைத்துவைத்துவிட்டு, பிள்ளைகளை ரெடி பண்ணி பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பாத்திரம் கழுவிவைத்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடும் பெண்களே அதிகம். காலை நேரத்தில், சமையலறைக்கு சென்று காய்கறி வெட்டி கொடுப்பதோ - டீ போட்டு கொடுப்பதோ - பாத்திரம் கழுவிவைப்பதோ இன்றளவுக்கும் (வேலைக்கு செல்லும்) ஆணுக்கு `பாராட்டுக்குரிய தகுதி’யாகவும், பெண்ணுக்கு `கடமை’யாகவும்தானே இருக்கிறது? இதை எத்தனை பேரால் மறுக்க முடியும்? எனில், இதில் எங்கிருந்து சுதந்திரம் கிடைத்திருக்கிறது? அடிமைத்தனம், தன் வடிவத்தை மாற்றியிருக்கிறது. அவ்வளவே.

இதைவிட நாம் கவனிக்க வேண்டியது, இங்கு வேலைக்கு செல்லும் எத்தனை பெண்ணால், தன் சம்பளத்தை தனக்கான சுய தேவைக்காக, யாருடைய அனுமதியும் பெறாமல், முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பது. `பெண் என்பவள் தாயானவள் - தமக்கையானவள் - தெய்வத்துக்கு நிகரானவள்’ என்றெல்லாம் கலர் கலராக பெண்ணுக்கு பெயர் வைத்து, பட்டம் சூட்டி பெண் என்றாலே `தியாகச்சுடர்’ என்ற பிம்பத்தை ஏற்படுத்தி, மீண்டும் அவளது பொருளாதாரம் வீட்டுக்காக சுரண்டுப்படுகிறது என்பதுதானே உண்மை? அன்றும் பெண்ணின் பொருளாதாரம் நிறுவனங்களாலும் வீடுகளாலும் சுரண்டப்பட்டது; இன்றும் அதுவே செய்யப்படுகிறது. ஒரேயொரு வித்தியாசம், இன்றைய பெண்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் கேள்வி கேட்பதற்காகவெல்லாம், பெண்கள் தினத்துக்கான நோக்கத்தை நாம் அடைந்துவிட்டோம் என்று பொருள் கொள்வது சரியல்ல. அப்படிப் பார்த்தால், 1910-ம் ஆண்டேவும் பெண்கள் கேள்வி கேட்கத்தொடங்கிவிட்டனர்தான். என்றைக்கு இந்த கேள்வி கேட்கும் விகிதம் குறைந்து - சம உரிமையென்பது இயல்பாகவே பெண்ணுக்கு கிடைக்கிறதோ அன்றுதான் இந்த தினத்தை கொண்டாட்ட தினமாக நாம் அனுகவேண்டும்.

இங்கு பெண் ஒவ்வொருத்தியும், சமூக அடிமைத்தனம் - பொருளாதார அடிமைத்தனம் - கூடுதலாக ஆண் அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமை சக்திகளுக்கு அடிமைப்பட்டுள்ளாள்” என்பது எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள். இந்த மூன்று அடிமைத்தனத்தையும் புரிந்துக்கொள்வதற்கு, 3 கேள்விகளை கேட்க விளைகிறோம். (இந்த 3 கேள்விக்கும், கூகுளிலெல்லாம் பதில் தேட வேண்டாம். மிக எளிதாக உங்களை சுற்றியிருக்கும், நீங்கள் அன்றாடம் கடந்துவரும் பெண்களை கவனித்து பதில் சொன்னால் போதுமானது)

  • இங்கு எத்தனை பெண்ணால் சமூகத்தில் எவ்வித `கேரக்டர் ஜட்ஜ்மெண்டுக்கும்’ உள்ளாகாமல் சகஜமாக எதிர்பாலினத்துடன் பழக முடிகிறது? எத்தனை பெண்ணால் தனக்கு விரும்பிய ஆடையை அணிந்தபிறகு, குறுகுறு பார்வைகளிலைப்பற்றி யோசிக்காமல் இயல்பாக பொதுவெளியில் நடக்க இருக்க முடிகிறது? எத்தனை பெண்ணால் தனக்கான துணையையும் - வேலை செய்யும் துறையையும் - படிப்பையும் தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்க முடிகிறது? எத்தனை குடும்பங்கள் தங்களின் பெண்களின் பிள்ளைகளை இதற்கெல்லாம் அனுமதிக்கிறது? எத்தனை பெண்ணுக்கு மோசமான திருமணத்திலிருந்தும், காதலிலிருந்தும் சுதந்திரமாக வெளிவர முடிகிறது?
  • இங்கு எத்தனை பெண்களால், தன் விருப்பத்துக்கேற்ப தன் சம்பளத்தை செலவு செய்யவோ சேமிக்கவோ முடிகிறது? (ஒரு பெண்ணின் உச்சபட்ச பாதுகாப்பு, அவளுடைய உழைப்பில் உருவான, சிறு சேமிப்புதான்)
  • இங்கு எத்தனை பெண்களால் (குறிப்பாக திருமணமானவர்கள்), வீட்டின் அடிப்படை பணிகளை செய்வது `கடமை’யாக இல்லாமல் இருக்கிறது? போலவே எத்தனை ஆண்களுக்கு வீட்டின் அடிப்படை பணிகளை செய்வது `பெருமைமிகு தகுதியாக’ தெரியாமல் இருக்கிறது?

உலகம் நவீனமாக நவீனமாக, பெண்கள் மீதான அடக்குமுறையும் நவீன வடிவங்களைப் பெறுகிறதென்பதே உண்மை. இன்றும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வரதட்சனை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் பல லட்சம்பேர் இருக்கின்றனர். `அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு?’ என 19-ம் நூற்றாண்டில் கேட்டார்கள். இப்போது, `பெண் பிள்ளையை அதிகம் படிக்கவச்சா, சீர் அதிகம் செய்ய வேண்டியிருக்கும்’ என்கிறார்கள். கடைசிவரை, படிப்பு எதற்கென்றே பொதுச்சமூகம் முழுமையாக புரிந்துக்கொள்ளவில்லைதான். ஒரே ஆறுதல், `அதிகம்’ படிக்கவச்சா- என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் குறைந்தபட்சம் யு.ஜி. டிகிரி முடிக்கும் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படியாக, கடைசிவரை ஒரு பெண் எவ்வளவு படிக்க வேண்டும் என்பதையும் சமூகம்தான் நிர்ணயிக்கிறது. அப்படி நிர்ணயித்தபடி படித்தாலும்கூட, அவர்களையும் படித்த படிப்புக்கு சமூகம் வேலைக்கு செல்ல விடுவதில்லை. பல இடங்களில் கணவர் இருக்கும் ஊரிலேயே, வீட்டுப்பக்கத்திலேயே... 9 - 5 வேலை ஏதாவது கிடைத்தால் போதும்! அந்தப் பெண் வாழ்நாளின் பெரும்பகுதி அங்கேயே கழிக்க வேண்டுமென்பது விதி. (`பொண்ணுங்க படிச்சுட்டு கல்யாணம் தானே பண்ணிக்கப்போறீங்க, வேலைக்கா போகப்போறீங்க’ என்று பள்ளி - கல்லூரி நாட்களில் கேட்போரின் நீட்சியே, இந்த அவலம்).

அலுவலக வேலைக்கு செல்லும் பெண்ணின் உழைப்பை விடவும், செல்லாமல் இருக்கும் பெண்ணின் உழைப்பும், உடலும் கூடுதல் ஆதிக்கத்துக்கு உள்ளாகிறது என்பது கூடுதல் சோகம். அலுவலகப் பணிக்கு செல்லாத பெண்களெல்லாம், `வீட்ல சும்மாதானே இருக்காங்க’ என்பது கடந்த சில வருடங்களாக கேள்விக்குட்படுத்தப்படுவது, ஒரேயொரு ஆறுதல். ஆனால் மீண்டும் சொல்கிறோம். கேள்வி கேட்கப்படுவது மட்டுமே போதுமானதல்ல. இங்கு தேவைப்படுவது, மாற்றம். உலகின் தலைசிறந்த சொல், செயல்.

பெண் உழைப்பின் மேல் நிகழ்த்தப்படும் ஆதிக்கம் மட்டுமல்ல. பெண் உடலின் மீது நிகழ்த்தப்படும் ஆதிக்கமும் இங்கு அதிகம்தான். இங்கு ஒரு பெண்ணால் இன்றளவும் தனக்கு இந்த குழந்தை வேண்டுமா - வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியாது. கருக்கலைப்பென்பது, பெண்ணின் விருப்பமென்கிறது இந்திய அரசியலைப்பு சட்டம். ஆனால் கருக்கலைப்பை பாவமென்கிறது சமூக கட்டமைப்பு. `கருக்கலைப்பு, இந்தியச் சட்டப்படி சரி’ என்ற புரிதலின்மையால், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 10 பெண் உயிரிழக்கிறாள் என்ற புள்ளிவிவரமே இதற்கு சாட்சி. இன்றும் நாடு முழுவது `மேரிடல் ரேப்’ (திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமை) நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவில், திருமணமென்பது `விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உடலுறவு கொள்வதற்கு கிடைக்கும் லைசன்ஸ்’ என்பதை மறுக்க முடியுமா என்ன?

திருமணமான பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் உடல் மீது மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தப்படுகிறதென்பதில்லை. எத்தனையோ பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு, அடிப்படை மாதவிடாய் சுதந்திரம் கூட கிடைப்பதில்லை. இன்றளவும், இந்தியாவில் `பீரியட் பாவர்டி’ என சொல்லப்படும் `மாதவிடாய்க்கால வறுமை’ தலைவிரித்தாடும் முக்கிய பிரச்னைதான். கடந்த ஆண்டு கிடைத்த ஒரு தரவின்படி, உலகளவில் 10-ல் ஒரு பெண்ணால் தன் மாதவிடாய்க்கு தேவையான நாப்கின் / மென்சுரல் கப் / டேம்பான் போன்ற அடிப்படை விஷயத்தை பெற முடியவில்லை. ஒவ்வொரு நாளும் உலகளவில் 80 கோடி பெண் தன்னுடைய மாதவிடாய் நாளில் இருக்கிறாளென்பது குறிப்பிடத்தக்கது. 2014-ல் இந்தியாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், 71% பெண் குழந்தைகளுக்கு, மாதவிடாய் பற்றிய உரிய அறிவுரை அவர்களின் முதல் மாதவிடாய்க்கு முன்பு தரப்படுவதில்லை. 2021 ஆய்வின்படி, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான மத்திய பிரதேசத்தில், 37.6% பெண்கள்தான் தங்கள் மாதவிடாயை சுகாதாரமாக எதிர்கொள்கின்றனர். இவர்களிடமெல்லாம், எப்போது நாம் `மாதவிடாய் என்பது, பெண்ணுக்கு நிகழும் உதிரப்போக்கு மட்டுமல்ல. மாதவிடாய் தரும் மனரீதியிலான மாற்றங்கள் அளவிலாதவை’ என்று சொல்லப்போகிறோம்?

இதற்குப் பிறகும், “இல்லை இல்லை, பெண்கள் பெரியளவில் முன்னேற்றம் அடைஞ்சுட்டாங்க. இப்போலாம் ஆண்கள் எண்ணம் மாறியாச்சு. ஆணும் வீட்டு வேலையை பகிர்ந்துக்கிறாங்க” என்று சொல்வீர்களேயானால், அது உங்கள் கருத்தாகவே இருக்கட்டும். ஆனால், என்றைக்கு ஒரு பெண்ணால் தன் துணையையும் - படிப்பையும் - வேலையையும் சுயமாக தேர்ந்தெடுக்க முடிந்து; என்றைக்கு ஒரு பெண்ணால் தன் சம்பளத்தை தன்னால் சுதந்திரமாக செலவு செய்ய முடிகிறதோ - என்றைக்கு ஒரு குடும்பத்தால் `வீட்டிலுள்ள வேலைகளை செய்வது, வீட்டிலுள்ள பெண்ணின் கடமை மட்டுமல்ல. அது அனைவரின் கடமையும்தான்’ என நினைத்து, வேலையை பகிர்ந்துக் கொள்ள முடிகிறதோ, அன்று கொண்டாடலாம் பெண்கள் தினத்தை.

பெண்ணும் மண்ணும் ஒன்றல்ல. பெண், உயிர். உங்கள் ஒவ்வொருவரின் சக உயிர். உங்களை போலவே அலுப்பு ஏற்பட்டு, ஓய்வு தேவைப்படும் உயிர். அந்த உயிருக்கு, தேவதை - தெய்வம் - தியாகச்சுடர் என்ற புகழுரையெல்லாம் வேண்டாம். சகமனுஷிகளாக மதித்து, வேலையை பகிர்ந்துக்கொண்டு மரியாதை கொடுத்தால் போதும். 

வலுவான நாளைக்காக, பாலின சமத்துவத்தை இன்றே நிலைநிறுத்துவோம். Yes, Lets JUST BREAK THE BIAS!