சிறப்புக் களம்

டெல்லியிலும் விசிலடித்த குக்கர்: தினகரன் ஹேப்பி அண்ணாச்சி

டெல்லியிலும் விசிலடித்த குக்கர்: தினகரன் ஹேப்பி அண்ணாச்சி

webteam

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் அதிரடி எண்ட்ரியாக இருந்தது தினகரன் வரவு. சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. சிறைக்கு செல்வதற்கு முன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார் சசிகலா. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் தினகரனுடன் அதிமுக அமைச்சர்கள் கை கோர்த்து நின்றனர்.

இந்நிலையில் திடீரென பல்டி அடித்த அதிமுக அமைச்சர்கள் தினகரனை கழட்டி விட்டனர். தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஓபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அணிகள் இணைந்தது. முதலமைச்சர், துணைமுதலமைச்சர் என பதவிகள் வந்தது. இப்படி சென்று கொண்டிருக்க தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கட்சியை மீட்பேன் ஆட்சியை களைப்பேன் என கூறிவந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதிமுக, திமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகளோடு சுயேட்சை வேட்பாளராக களத்தில் குதித்தார் தினகரன். இந்த இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.

மாற்றம் தந்த குக்கர்

தினகரனுக்கு கிடைத்த குக்கர் சின்னத்தை மற்றவர்கள் கேலியாக பார்த்தனர். இந்தச் சின்னத்தை வைத்துக்கொண்டு இவர் எங்கு வெற்றிபெறப்போகிறார் என்றனர். ஆனால் குக்கர் சின்னம் கிடைத்தது குறித்து பேசிய தினகரன், எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அவரது அணியினர், குக்கர் சின்னம் பெண்களிடம் எளிதில் சென்றடையும் எனவே வெற்றி எங்களுக்கு தான் என தெரிவித்தனர்.அதேபோல் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். குக்கரை கொண்டு கோட்டையில் நுழைந்தார். இந்தத் தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால் இரு அணிகளாக இருந்த நேரத்தில் சசிகலா அணிக்கு கொடுக்கப்பட்ட அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தனக்கு அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணையில், உள்ளாட்சி தேர்தல்களில் மாநில தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் வாதிட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து அந்தப் பெயரை பயன்படுத்த அனுமதிக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கே அதிகாரம் உண்டு என தினகரன் தரப்பு வாதிட்டது. 

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தினகரன் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் மூன்று பெயர்களில் (அம்மா திராவிட முன்னேற்ற கழகம்,  எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம்,  அம்மா எம்.ஜிஆர் முன்னேற்ற கழகம் ) ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தினகரனின் குக்கர் இரண்டாவது தடவையாக டெல்லியிலும் விசிலடித்துள்ளது. தீர்ப்புக்கு பின்னர் பேசிய தினகரன் புதிய பெயரில் நாங்கள் செயல்பட்டு, மக்கள் மன்றத்திலும் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்போம் எனத் தெரிவித்தார். அடுத்து வரும் தேர்தல்களிலும் விசிலடிக்குமா தினகரனின் குக்கர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.