கொரோனா ஊரடங்கு காலத்தில் முறையற்ற உணவுமுறை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் சந்தித்த உடல் பருமன் பிரச்னை குறித்து கடந்த வார கொரோனா கால மாணவர் நலன் அத்தியாயத்தில் பார்த்திருந்தோம். இந்தியக் குழந்தைகளில் இவர்கள் ஒருதரப்பு எனில், இன்னொரு பக்கம் இவர்களுக்கு நேரெதிராக மற்றொரு தரப்பு குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்கள், உணவே கிடைக்காத குழந்தைகள். உணவே கிடைக்காதுபோய், அதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, உடலெல்லாம் மெலிந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் நலிந்த குழந்தைகளாக அவர்கள் உள்ளனர். இவர்களைப் மையப்படுத்தியே இந்த அத்தியாயம் அமையப்போகிறது.
இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் குழந்தைகள், இந்த நாட்டின் நலிவின் வெளிப்பாடாய் இருக்கின்றனர். 'நாட்டின் நலிவு' என்பதை குறிப்பிட காரணம், அவர்கள் நலிவடைந்ததென்பது பசியால். பசியென்பது என்றைக்குமே தனியொரு குடும்பத்தின் / குழந்தையின் பிரச்னை அல்ல; அது சமூகத்தின் பிரச்னை, சொல்லப்போனால் நாட்டின், ஓர் அரசின் பிரச்னை. அதனாலேயே அந்தப் பசியை தீர்க்க வேண்டியது, நலிவடைந்த அரசின் அத்தியாவசிய கடமையாகிறது.
இந்த விஷயத்தில் தமிழகம் சார்ந்து சில விஷயங்களை இங்கே தெரிந்துக்கொள்வோம். தமிழக சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்திடம், 'பசியால் நலிவடைந்த குழந்தைகள்' குறித்தும், அவர்களுக்கு நம் அரசு செய்ய வேண்டியது குறித்தும் பேசினேன்.
"இந்தியாவின் வறுமையை படம்பிடித்து காட்டும் சமீபத்திய அறிக்கையாக 'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்' (The Global Hunger Index) வெளியிட்ட உலகப் பட்டினி அறிக்கை இருக்கிறது. இந்தப் பட்டினி பட்டியலில் உலகளவில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை எதன் அடிப்படையில் தரப்பட்டது என ஆராய்ந்தால், தனி குடும்பங்களின் பசி சார்ந்தே அவை அமைந்திருப்பதை காணமுடிகிறது. இந்திய அளவில் பட்டினியால் ஏற்படும் இறப்பு எங்கு அதிகமிருக்கிறது என பார்த்தால், அதில் இரண்டாவது முன்னணியில் இருப்பது தமிழகம்தான். அந்தளவுக்கு தமிழ்நாட்டில் பட்டினியால் தனிநபர் சாவு, பட்டினியால் குடும்ப தற்கொலை, பட்டினியால் குழந்தை தொழிலாளர் அதிகம் உருவாகும் நிலை போன்றவையாவும் அதிகளவில் நடந்துள்ளது.
இதுதான் கள நிலவரம் கண்கூடாக தெரிந்தாலும்கூட, அரசால் இதுகுறித்து நேரடியாக தரவுகள் சேமிக்க முடியாத சூழ்நிலை அதிகம் உள்ளது வேதனைக்குரிய விஷயம். அதுபோலவே நேரடியாக வீட்டுக்கு சென்று ஒரு குழந்தைக்கு உணவளிப்பதும் அரசுக்கு இன்றளவும் சாத்தியப்படாமலேயே இருக்கிறது. இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் நடைமுறை சிக்கல்கள் அதிகம். ஆகவே வீடு வீடாக சென்று கணக்கெடுத்து - பசியிலிருப்போருக்கு உணவு வழங்குவது சிரமமென்பதால் அரசையும் முழுமையாக குறை சொல்லிவிட முடியாது. எனில் என்னதான் செய்வது, இதன் தீர்வுதான் என்ன என்றால்... 'குழந்தைகளை பள்ளிக்கு அழையுங்கள்' என்பதே!
ஏனெனில் பள்ளிக்கு அழைக்கும்போது, அங்கு அவர்களின் உடல் எடையை கண்காணிக்க முடியும்; ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, வைட்டமின் மாத்திரைகள் - இரும்புச்சத்து மாத்திரைகள் - புரதச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள் என எல்லாவற்றையும் மாணவரின் கைகளிலேயே கொடுக்க முடியும்; நலிவடைந்திருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் தரப்பிலிருந்து கூடுதல் கவனம் தரப்பட்டு அதையும்கூட தரமுடியும். இப்படி தொடர்ந்து மாணவர்கள் நலனில் நேரடியாக அரசு கவனம் செலுத்த முடியும். குழந்தைகள்மூலம், தேவைப்படும்பட்சத்தில் பெற்றோருக்கும் அரசால் உதவ முடியும்.
கடந்த 20 மாதங்களாகவே, குழந்தைகள் எல்லோரும் உணவு விஷயத்தில் ஒழுங்கின்மை என்ற விஷயத்துக்கு பழகியுள்ளனர் அல்லது பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பின்னணியில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பொருளாதார பின்னடைவு முக்கிய பங்காற்றுகிறது. விளக்கிச் சொல்ல வேண்டுமெனில், ஏழைக் குடும்பங்களில் பணமில்லாததால் பல நேரம் அங்கிருந்த குழந்தைகளுக்கு உணவே கிடைக்கவில்லை. அதாவது காலை உணவு இருக்கும் - மதியம் இருக்காது - இரவு இருந்தாலும் இருக்கலாம் என்கிற நிலை உருவானது. பள்ளிகள் திறக்கப்படும்பட்சத்தில், மதிய உணவு கட்டாயம் குழந்தைக்கு கிடைக்கும். அதுவும், சத்துணவாக கிடைக்கும். உடன் வைட்டமின் மாத்திரைகள், இரும்புச்சத்து மாத்திரைகள் எல்லாமும் அவர்களுக்கு இலவசமாக கிடைக்கும். அப்படி சத்துகள் அனைத்தும் கிடைக்கும்போது சம்பந்தப்பட்ட குழந்தையின் உடல்நலன் முன்னேறுவதுடன், அவர்கள் வீட்டின் பொருளாதார சூழலும் சீராகும்.
'பள்ளிக்கு அழைத்து வாருங்கள்' என்பதில், சத்துணவுக்கு அடுத்தபடியாக அரசு செய்ய வேண்டிய மற்றுமொரு விஷயமும் உள்ளது. அது, குழந்தையின் உடல் எடை - உயரத்தை ஆராய்வதற்கான அரசு இலவச முகாம் அமைப்பது. அந்த வகையில் உயரத்துக்கேற்ற எடை இல்லையென்றால் குறிப்பிட்ட அந்தக் குழந்தைக்கு கூடுதல் விழிப்புணர்வு தரப்பட வேண்டும். ஏன் உயரம் - எடை கண்காணிப்பு அவசியமென்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சமீபத்தில் பார்லி-ஜி நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருந்தது. பார்லி-ஜி என்பது, பிற பிஸ்கட்களை விடவும் மிகவும் விலை குறைவான ஒரு பிஸ்கட் வகை. சிறு குழந்தைகளுக்கு ஏழைக் குடும்பங்களில், உணவில்லாத நாள்களில் பசியாற்றும் முக்கியமான ஒரு விஷயம், பிஸ்கட்; குறிப்பாக பார்லி-ஜி பிஸ்கட்டுகள். எப்படி வேலையில்லா இளைஞர்களுக்கு, ஒரு கப் டீ பசியாற்றுமோ, அப்படித்தான் ஏழைக் குழந்தைகளுக்கு பார்லி-ஜி. ஆனால் அதன் விற்பனை சந்தையே சரிந்திருக்கிறதென்பது, அதை அதிகம் உபயோகிக்கும் குடும்பங்களின் மிக மோசமான நிலையையே காட்டுகிறதென நான் பார்க்கிறேன். இந்தப் பொருளாதார இழப்பு, குழந்தைகளின் உணவு விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, பின் அவர்களை உடல்ரீதியாக நலிவடைந்து - உயரம் குறைவாகவும் எடை குறைவாகவும் ஆக்கும். அதனால்தான் அதுசார்ந்த கண்காணிப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென சொல்கிறேன். கண்காணிப்பை தொடர்ந்து, உயரம் மற்றும் எடை குறைவாக உள்ள மாணவர்களுக்கு, அதை சரிசெய்வதற்கான மருத்துவ வழிக்காட்டுதல் தேவை.
என்றார் தமிழக சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.
ஜவ்வாது மலையை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மகாலட்சுமியிடமும் பட்டினியால் அவதியுறும் ஏழை மாணவர்கள் குறித்தும், அவர்களை மீட்க அரசு செய்ய வேண்டியது குறித்தும் பேசினேன்.
"மாநில அரசு, தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் பருப்பு - முட்டை போன்றவை தருகிறது. உணவுக்கும் வழிவகைகள் செய்துள்ளது. ஆனால் பள்ளிகள் திறக்கப்படாததால் அந்த உணவு, சமைக்கப்பட்ட உணவாக மாணவர்களை சென்றடையும் வகையில் இருப்பதில்லை. மாறாக, சமைக்கப்படாமலேயே தரப்படுகிறது. இதனால் அந்த உணவு அந்தக் குழந்தையின் கைக்கு கிடைத்தும், வாய்க்கு கிடைக்காத நிலையே இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும்கூட, அது அந்தக் குழந்தைக்கு மட்டுமானதாக இருப்பதில்லை; அதாவது அந்த உணவை குழந்தையின் வீட்டிலுள்ள எல்லோரும் பகிர்ந்து உண்கின்றனர். பகிர்ந்துண்பதை நான் தவறென சொல்லவில்லை. ஆனால் ஒருவருக்கான உணவை ஐவர் சாப்பிடுகையில், எப்படி அந்த ஒருவருக்கு சத்து கிடைக்கும்? சொல்லப்போனால், எப்படி அந்த ஐவருக்கும்கூட சத்து கிடைக்கும்? இதனால் யாருக்குமே போதிய சத்து கிடைக்காமல், வெறுமனே அந்த நேரத்தில் ஏதோவொன்று சாப்பிடுகிறோம் என்ற நிலையே உருவாகிறது. எனில், வீட்டுக்குள் பகிர்ந்து சாப்பிடவே கூடாதா என்றால், அப்படியுமில்லை. இங்கே மாறவேண்டியது குடும்பங்கள் இல்லை; அரசுதான். அரசு, ஏழை மக்களின் - ஏழை குடும்பங்களின் பசியைப் போக்க, கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சிகள் போக மாணவர்கள், அதாவது குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறையை காட்ட வேண்டும்.
இந்த இடத்தில், 'இத்தனை மாதங்களாக உணவே கிடைக்காமல் இருந்த குழந்தைக்கு, சீராக உணவு தருகிறோம்' என்ற புள்ளியுடன் அரசு நின்றுவிடக்கூடாது. மாறாக, 'இத்தனை மாதங்களாக உணவு கிடைக்காமல் இருந்த குழந்தைக்கு, உடனடியாக கூடுதல் ஊட்டச்சத்து நிறைந்த உணவு அளிக்கிறோம்' என்று அரசு நினைக்க வேண்டும். இந்த முனைப்புடன், பள்ளி திறந்து அடுத்த 3 - 6 மாதங்களுக்கு சத்துணவில் சத்துகள் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். கூடுதல் பொறியல், கூடுதல் கூட்டு, வைட்டமின் மாத்திரைகள் என எல்லோமே கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்.
இவற்றை செய்யும்போது, குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்னைகள் குறையும். இதற்கு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கிறது என்பதை அழுத்திச் சொல்ல நினைக்கிறேன். காரணம், தற்போதைக்கு நம் மாநில அரசு 'மாணவர்களை பள்ளிக்கு வரவேண்டும்' என்பதை கட்டாயமாக்க கூடாது என சொல்லிவருகிறது. அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னிருக்கும் கொரோனா அச்சம் எங்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால் கொரோனா அச்சத்தைவிடவும் மிகப்பெரிய அவலமாக இருக்கும் பசி - பட்டினி சாவு - ஊட்டச்சத்து குறைபாடுகள் - வளர்ச்சி தடைபடுதல் போன்றவற்றுக்கு முன்பு, கொரோனாவை எங்களால் யோசிக்கமுடியவில்லை.
அதுமட்டுமன்றி, கொரோனா அச்சத்தை போக்க பள்ளிகளில் அரசு தரப்பில் நிறைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே மாணவர்களை தைரியமாக பள்ளிக்கு வரசொல்லி அரசே ஊக்கப்படுத்தலாம். 'மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டும்' என்று சொல்லாவிட்டாலும்கூட, குறைந்தபட்சம் 'மாணவர்கள் பள்ளிக்கு வராமலே இருக்கலாம் - இல்லம் தேடி கல்வி கொண்டு வருகிறோம்' போன்றவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருக்கலாம்.
எங்கள் மலைக்கிராமத்திலெல்லாம், இந்த கொரோனா பொதுமுடக்கத்தில் பல மாணவர்கள் தனியார் சிறுகுறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து சம்பளம் பெற தொடங்கிவிட்டார்கள். அவர்களையெல்லாம் மீட்டுக்கொண்டு பள்ளியில் அட்மிஷன் போடவைப்பதே எங்களுக்கு பெரும் வேலையாக இருந்தது. பெரும்போராட்டத்துக்குப் பின் அட்மிஷன் போட்ட அவர்களை, அடுத்தகட்டமாக பள்ளிக்கு வரவைத்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு எங்களால் அவர்களை அழைத்துச் செல்ல முடியும்.
'இல்லம் தேடிச் சென்றே கற்பிக்கிறோம்' என சொல்வதை கேட்கையில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த இல்லம் தேடி கல்வியில், ஆசிரியர்கள் - மாணவர்கள் ஈடுபாடே இல்லை. முழுக்க தன்னார்வலர் முயற்சியாகவே இருக்கிறது. அந்த தன்னார்வலர்களும், பட்டதாரி ஆசிரியப் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. குறைந்தபட்சமாக 10-ம் வகுப்பு முடித்த நபர்கள். நம் நாட்டில் அரசு பள்ளியென்பது வெறும் ஒரு வகுப்பறை அல்ல. வகுப்பறையுடன் சேர்த்து இலவச சத்துணவு கிடைக்கும் இடம் - வளரிளம் பருவ குழந்தை இலவச நாப்கின் கிடைக்கும் இடம் - இலவச ஊட்டச்சத்து மாத்திரைகள் கிடைக்கும் இடம் - இலவச உடல்நல முகாம்கள் (காசநோய் முகாம், பற்களுக்கான ஆய்வு முகாம், கண் முகாம் உள்ளிட்டவை) நடக்கும் இடம் - ஹெல்த்தி ஸ்நாக்ஸ் கிடைக்கும் இடம் என பல சிறப்பம்சங்களை கொண்ட இடம். அப்படியொரு இடத்துக்கு, 'வரவில்லையென்றாலும் பரவாயில்லை. இல்லம் தேடி கல்வி கற்க வருகிறோம்' என சொல்வதை நடைமுறையில் சரியாக இருக்காது. ஒருவேளை நம் நாட்டில் அரசுப் பள்ளி வெறும் ஒரு வகுப்பறையோடு இருக்குமாயின், இல்லம் தேடி கல்வியை நாங்கள் ஏற்றிருப்போம். ஆனால் நிலைமை அப்படியில்லையே!
'அதான் அரசு பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என சொல்லிவிட்டதே... நாம் செல்ல வேண்டாம்' என பின்தங்கிய குடும்பத்திலுள்ள ஒரு மாணவன் நினைக்கின்றான் என்றால், அதன் பின்னணி அவனுக்கு கொரோனா அச்சம் இருக்கிறது என்பதில்லை; மாறாக அவனுக்கு பொருளாதார தேவை உள்ளது - அவன் பகுதிநேரமாக எங்கேயோ வேலை செய்கிறான் - அவனை வைத்து அங்கு ஓர் பண அரசியல் நடக்கிறது என்பது. ஆக, 'வீடுதேடி கல்வி' என்பது சற்று மேல்தட்டு மக்களுக்கானது. இவற்றை உணர்ந்து, ஏழை குழந்தைகளையும் அரசு இவ்விஷயத்தில் கணக்கில் கொண்டு, அவர்களை அரசேவும் பள்ளிக்கு அழைத்து வர முயல வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளிக்கு அழைத்துவரப்பட்டு மாணவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து அவர்களை உடல்ரீதியாக வலிமைப்படுத்துவது போலவே மன ரீதியாகவும் - பொருளாதார ரீதியாகவும் அவர்களை வலிமைப்படுத்த அரசு சில முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு இலவசமாக மாஸ்க் வழங்குவது - நாப்கின் வழங்குவது என்பது தொடங்கி, குழந்தைகள் மனரீதியாக நலமாகத்தான் இருக்கிறார்களா - அவர்களின் மனச்சிக்கல்கள் என்னென்ன - அவர்களை எப்படி பொறுமையுடன் கையாள்வது என்பதையெல்லாம் உணர்ந்து செயல்பட, ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி அளிப்பது அவசியம். இப்படி அரசு மாணவர் நலனில் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும். அனைத்தையும் பள்ளித் திறப்புக்கு முன் செய்ய வேண்டும்; அறிவிக்க வேண்டும். இன்னும் ஒரு வாரம் மட்டுமே பள்ளித் திறப்புக்கு இருப்பதால், விரைந்து அரசு இதை புரிந்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
அரசின் செவிகளுக்கு, இந்தக் கோரிக்கைகள் கேட்குமா? - பார்ப்போம்.
இத்தொடரின் முந்தைய அத்தியாயங்கள்: