நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தலின்போது கட்சி அறிவித்த வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் எதையுமே சட்டை செய்யாமல் தன்னிச்சையாக போட்டியிட்டு திமுகவினர் பல இடங்களில் வெற்றி பெற்றனர். இது தொடர்பாக மிகக்கடுமையான அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பின்பும்கூட சில இடங்களில் கட்சி உத்தரவை மீறி வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்யாமல் போக்கு காட்டி வருகிறார்கள்.
இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் கட்சியின் கட்டுக்கோப்பு உறுதியாகும் என்பது திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் – கூட்டணி கட்சிகளும்:
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை தொடர்ந்து இப்போது நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது திமுக. தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்த கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன, இதனைத் தொடர்ந்து இத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியையும் பெற்றது.
நேரடி தேர்தல் முடிவடைந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த மறைமுக தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கியதுடன், மீதமுள்ள அனைத்து இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தது திமுக தலைமை.
மீறப்பட்ட கூட்டணி தர்மம் – கொந்தளித்த ஸ்டாலின்:
மறைமுகத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்களே போட்டி வேட்பாளர்களாக இறங்கி பதவிகளை கைப்பற்றினார்கள். இன்னும் சில இடங்களில் கூட்டணி கட்சியினரை வேட்புமனு தாக்கல் கூட செய்யவிடாமல், அதிகாரப்பூர்வமற்ற திமுக வேட்பாளர்களே போட்டியின்றியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது கூட்டணி கட்சியினரை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது, வெளிப்படையாகவே பல கட்சி தலைவர்கள் இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். பல இடங்களில் கூட்டணி கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இது தொடர்பான செய்தி கவனத்துக்கு வந்தவுடன், உடனடியாக திமுக தலைவர் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டார், அதில், “ கூட்டணி தர்மத்தை மீறிய திமுகவினரின் செயலுக்காக கூனிக்குறுகி நிற்கிறேன். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தலைமையின் உத்தரவை மீறி வெற்றிபெற்றவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து நேரில் சந்திக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும் வரவேற்றனர். உண்மையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிக்கை அவரது இமேஜை கூட்டணி கட்சியினர் மத்தியில் உயர்த்தியது. ஆனால், திமுக தலைவரின் இந்த கடுமையான அறிக்கைக்கு பிறகும்கூட சிலர் இன்னும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யாதது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்தியில் சற்றே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக கடலூர் திமுக எம்.எல்.ஏ அய்யப்பன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ் ராஜன் உள்ளிட்ட பலர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான போட்டி வேட்பாளர்கள் என்று இல்லாமல், திமுக தலைமையின் வேட்பாளர்களுக்கு எதிராகவே பரவலாக திமுகவை சேர்ந்த பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்த சூழலில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல் தொடராமல் இருக்க திமுக தலைமை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்?
இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “ தான் ஒரு உத்தரவிட்டால் அதனை கட்சியின் கீழ் மட்டம் வரை உள்ளவர்கள் அப்படியே கேட்பார்கள் என்று ஸ்டாலின் நம்பினார், அது நடக்கவில்லை என்பதைத்தான் இந்த போட்டி வேட்பாளர்கள் விவகாரம் காட்டுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிடுகிறார்கள், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராகவே போட்டி திமுக வேட்பாளர்களும் களம் இறங்கினார்கள்.
இதற்கு காரணம் நகரச்செயலாளர், மாவட்ட செயலாளர், அமைச்சர் ஆகியோர் ஏற்கனவே ஒரு வேட்பாளரை முடிவு செய்திருப்பார்கள், அவர்களும் தேர்தலுக்காக எக்கச்சக்கமாக பணம் செலவு செய்திருப்பார்கள். அதனை தாண்டி தலைமை ஒரு முடிவை அறிவிக்கும்போது போட்டி வேட்பாளர் களம் இறங்குகிறார்கள். இதனை தனது சோர்ஸ்கள் மூலமாக ஏற்கனவே கட்சி தலைமை அறிந்து உரியவர்களிடம் பேசி சரிக்கட்டியிருந்தால் இந்த சிக்கல் எழுந்திருக்காது” என்று கூறினார்
இத்தகைய செயலை ஸ்டாலின் கையாண்ட விதம் குறித்தும், திமுகவினரின் மனப்பான்மை குறித்தும் பேசும் ப்ரியன், “2019 ஆம் ஆண்டு முதலே கூட்டணி கட்சிகளை அன்போடு அரவணைத்து செல்கிறார் ஸ்டாலின், அப்படி இருக்கையில் உள்ளாட்சி தேர்தலில் எல்லா அமைப்புகளிலும் ஓரிரு இடங்கள்தான் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. எனவே அவர்களால் தனிப்பெரும்பான்மையாக எங்கும் வெற்றி பெற முடியாது, அதனால்தான் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதனை உணராமல் திமுகவினர் இதுபோல செயல்படுகிறார்கள். இது போல 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்திருக்கும்.
இத்தகைய செயலால், உள்கட்சிக்குள்ளேயே கட்டுப்பாடு குலையும், அடுத்ததாக மக்கள் மத்தியிலும் திமுகவின் இமேஜ் பாதிக்கும், கூட்டணி கட்சிகளிடமும் மனக்கசப்பு உருவாகும், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தோற்றால் அதுவும் பெரும்பாலான கட்சியினருக்கு அதிருப்தியை உருவாக்கும், தலைமை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் என்பதுதான் நிதர்சனம். இதற்காக திமுக தலைவர் மிகக்கடுமையான உத்தரவை பிறப்பித்தும்கூட சிலர் இன்னும் பதவிகளை ராஜினாமா செய்யாமல் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுகதான் இப்போது ஆட்சியில் இருக்கிறது, ஸ்டாலின் கட்சியை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், அப்படி இருந்தும் ஒழுங்கீனமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
கட்சி உத்தரவிட்டும் கூட இன்னும் சிலர் பதவி விலகாததற்கு காரணம், கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை பதவிதான் முக்கியம் என்பதுதான். எப்படி இருந்தாலும் அடுத்த தேர்தல் வர இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளது, எனவே அதற்குள் எப்படியாவது கட்சியிடம் மன்னிப்பு கேட்டு பேசி சரிக்கட்டி மீண்டும் கட்சிக்குள் வந்துவிடலாம் என்ற நினைப்புதான் இதற்கு காரணம். ஏனென்றால் திமுகவில் ஒருவரை அவ்வளவு சீக்கிரம் நீக்க மாட்டார்கள். உதாரணமாக மாநகராட்சி ஊழியரை மிரட்டியதற்காக திருவொற்றியூர் எம்.எல்.ஏவை கட்சி பதவியில் இருந்துதான் நீக்கினார்கள், கட்சியை விட்டு நீக்கவில்லை. கட்சி தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாவிட்டால், மீண்டும் வாழ்நாள் முழுக்க கட்சியில் சேர்க்கமாட்டேன் என ஜெயலலிதா போல ஸ்டாலின் முடிவெடுத்தால்தான் இதுபோன்ற சலசலப்புகள் இல்லாமல் கட்சி செயல்படும்.
எனவே தோழமை கட்சிக்கு எதிராக வென்ற திமுகவினர் ராஜினாமா செய்தால் மட்டும் போதாது, திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளர்களாக நின்று வென்றவர்களும் ராஜினாமா செய்யவேண்டும், அவர்கள் மீதும், கட்சி உத்தரவை மீறி அவர்களுக்கு வாக்களித்த உறுப்பினர்கள் மீதும், அவர்களுக்கு ஊக்கமளித்த திமுக நிர்வாகிகள் மீதும் மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலைமையின் பேச்சையே மதிக்காத அளவுக்கு திமுக பலவீனமாக உள்ளது என்றுதான் திமுகவினரும், பொதுமக்களும், கூட்டணி கட்சியினரும் நினைப்பார்கள்” என்று தெரிவிக்கிறார்.