சிறப்புக் களம்

தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கையில் தொடரும் சரிவு; என்னதான் பிரச்னை? தவறு எங்கே நடக்கிறது?

தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கையில் தொடரும் சரிவு; என்னதான் பிரச்னை? தவறு எங்கே நடக்கிறது?

நிவேதா ஜெகராஜா

நிதி ஆயோக்கின் முன்னாள் துணை தலைவரான அரவிந்த் பனாகாரியா, இந்தியாவின் தடுப்பூசி விநியோகம் குறித்து இன்று விமர்சித்திருக்கிறார். இந்தியா உடனடியாக தனது ஒருநாள் தடுப்பூசி விநியோகத்தை 50 முதல் 60 லட்சமாக அதிகரிக்க வேண்டுமென அவர் கூறியிருந்தார். இதை அவர் குறிப்பிட்டு சொல்ல காரணம், இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக மிகவும் குறைந்துவருகின்றது என்பதுதான். தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறைந்ததன் பின்னணி என்ன, இதனால் இந்தியா என்ன மாதிரியான பிரச்னைகளை அடுத்தடுத்த வாரங்களில் சந்திக்கும் என்பதன் முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

தடுப்பூசி தட்டுப்பாடு:

நேற்று (ஜூலை 11) ஒரு நாளில் இந்தியாவில் உபயோகப்படுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்கள், 12 லட்சம் மட்டும்தான். 130 கோடி மக்கள் இருக்கும் இந்தியாவில், கடந்த ஜனவரியிலிருந்து தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. ஏழு மாதங்களுக்குப் பிறகும், இப்போதும் தொடக்க நாட்கள் போல தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதென்பது அரசின் மிகப்பெரிய தோல்வியென்கின்றனர் நிபுணர்கள். இத்தனை மாதத்தில், அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 85 லட்சத்துக்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் ஆற்றல் உள்ளது. தடுப்பூசி விநியோக பொறுப்பை மத்திய அரசு ஏற்கத்தொடங்கிய முதல் நாளில் (ஜூன் 21), இந்த அதிகபட்ச எண்ணிக்கையானது பதிவாகியிருந்தது.

அன்றைய தினம் மத்திய அரசு இதுபற்றி பேசுகையில், “இது சாதாரணமான விஷயமில்லை. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து, துரிதமாகவும் திட்டத்துடனும் செயலாற்றியதனால்தான் இது நிகழ்ந்திருக்கிறது. அதிக தடுப்பூசி உற்பத்தியும், அதை விநியோக்கும் திறமையும்தான் இதற்கு அடிப்படை காரணம்” என்று பெருமையாக கூறினார் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன். மற்றொருபுறம் அரசு சார்பில், வரவிருக்கும் ‘ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அந்தளவு துரிதமாக செயல்படுவோம்’ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஜூன் 21 இவையாவும் சொல்லப்பட்டிருந்த நிலையில், ஏறத்தாழ 20 நாட்கள் கடந்து இன்றைய தினம் பார்க்கையில் எண்ணிக்கையானது மிகவும் பின்னோக்கி சென்று, ஒரு நாளில் 12 லட்ச தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. ஜூலையில், குறைந்தபட்சம் 40 – 45 லட்சம் என்ற அளவிலாவது அன்றாடம் சராசரியாக தடுப்பூசி போடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்படி போடப்பட்டால், ஜூலை மாதத்தில் 12 கோடி தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படுமென அரசு நினைத்தது. ஆனால் தற்போது முழுவதுமாக நிலைமை தலைகீழாகியுள்ளது.

இதனால் இந்தியாவில் தற்போதைக்கு முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 32.3% என்றும்; இரண்டு டோஸூம் எடுத்துக்கொண்டவர்கள், 7.8% என்றும் இருக்கிறார்கள். 130 கோடி மக்கள் தொகையில், இது மிகமிக குறைவு. இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்தால், பின்வரும் நாட்களில் இந்தியா இரண்டாவது அலையை விட மோசமான அடுத்த கொரோனா அலையையும், மக்கள் இறப்புகளையும் சந்திக்க நேரிடலாம்.

தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறைய காரணம்?

தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை குறைவது ஏனென்று ஆராய்ந்தால் அது மீதான தட்டுப்பாடும், மக்கள் மத்தியிலான விழிப்புணர்வையின்மையும்தான் முக்கியமான இரண்டு காரணங்களாக பார்க்கப்படுகிறது.

“இவற்றில் விழிப்புணர்வு அதிகரிப்பென்பது, தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும்போது நாள்போக்கில் அதிகமாகும். ஆகவே இங்கு தேவைப்படுவது, தடுப்பூசி தட்டுப்பாட்டை தீர்க்கும் முயற்சிதான்” எனக்கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

தமிழ்நாடு, கேரளா போன்ற பல மாநிலங்களில், ‘எங்களால் ஒரு நாளில் அதிகப்படியான தடுப்பூசிகள் விநியோகிக்கமுடியும். ஆனால் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் தரப்படுவதால், எங்களால் அதை விரிவுப்படுத்த முடியவில்லை’ என மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

ஒருவேளை தடுப்பூசி விநியோகம் வேகப்படுத்தவில்லை என்றால், என்ன ஆகும்?

தடுப்பூசி கிடைக்கவில்லை என்றபோதிலும் இம்மாநிலங்கள் அனைத்தும் தங்களின் பொருளாதார பிரச்னைகளிலிருந்து தப்பிக்க தளர்வுகளை அறிவித்துவருகின்றன. இதனால், கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு அல்லது குறையாமல் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இதேநிலை, இறப்பு சார்ந்த விஷயங்களிலும் ஏற்படும். அடுத்தடுத்து பள்ளிகள் திறப்பு குறித்தும் மாநில அரசுகள் யோசித்து வருகின்றன. “இரண்டாம் அலை இன்னும் முழுமையாக குறையாத - தடுப்பூசி விநியோகம் குறைந்த இந்த நேரத்தில், அரசுகள் அவசர அவசரமாக தளர்வுகளை அதிகப்படுத்துவதென்பது ஆபத்தை உருவாக்கும்” எனக்கூறியுள்ளார் அரவிந்தர் என்ற மருத்துவரொருவர்.

இதே கருத்தை முன்னிறுத்தி, “கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மூன்றாம் அலை உருவாவதை தடுக்க முடியாது” என இந்திய மருத்துவக் கழகம் இன்றைய தினம் எச்சரித்தது. அந்த எச்சரிக்கையில் மிகக்குறிப்பாக, “அவசியம் இன்றி பொதுஇடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படும் நிலையில், மக்கள் அதை பொருட்படுத்தாமல் கூட்டமாக திரள்வது வேதனை தருகிறது. பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் சுற்றுலா, புனித யாத்திரை என பொது இடங்களில் அதிக அளவில் கூடுகின்றனர். கொரோனா அச்சத்தை மறந்து மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி மக்கள் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாவிடில் 3 ஆம் அலையை சந்திக்க நேரிடும்” என்றது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த ப்ரௌன் பல்கலைக்கழக ஆய்வாளர் மருத்துவர்.அஷிஷ் ஜா “அமெரிக்காவை பொறுத்தவரை தடுப்பூசி போடாத இடங்களில்தான், ஆபத்தான டெல்டா வகை கொரோனா திரிபு வேகமாக பரவி, அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” எனக்கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் வாய்ப்புள்ளது! 

மத்திய அரசு என்ன செய்யவேண்டும்?

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான நாட்டில், தளர்வு நீட்டிபென்பது மிகப்பெரிய பொருளாதார சிக்கலையே தரும். இதனாலேயே பெரும்பாலான மாநில அரசுகள், தளர்வுகளை வேகமாக அதிகப்படுத்துகின்றன. ஆனால் தளர்வுகளை அதிகப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமாவது தடுப்பூசி விநியோகத்திலும் அரசுகள் காட்டினால் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம். தடுப்பூசி விநியோகமென்பது, மத்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது.

கடந்த வாரம் மத்தியில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது புதிதாக பொறுப்பேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மன்சு மாண்டவியாவின் முன் இருந்த மிகப்பெரிய சவால், இந்த தடுப்பூசி பற்றாக்குறைதான். நாளாக நாளாக இதை அவர் சமாளிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எண்ணிக்கை மிகவும் பின்தங்கிக்கொண்டே போவது, அவர்மீதான பழிச்சொல்லாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

இந்தியா, தனது இக்கட்டான மோசமான காலத்தை நோக்கி சென்றுக்கொண்டே இருக்கிறதென்பதுதான் தற்போதைய நிலவரம். தடுப்பூசியை அதிகப்படுத்தினால் மட்டுமே நம்மை கொஞ்சம் மேம்படுத்தமுடியும். ஆனால், அது சாத்தியமாகுமா?