சித்தராமையா - டி.கே.சிவக்குமார் twitter pages
சிறப்புக் களம்

சித்தராமையா Vs DK.சிவக்குமார் பனிப்போர்: கர்நாடக முதல்வர் ரேஸில் முந்தியிருப்பது யார்? பின்னணி என்ன?

Prakash J

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் வெற்றி, நாட்டில் பல கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆட்சியமைக்க 113 இடங்கள் போதும் என்ற நிலையில், காங்கிரஸ் 135 இடங்களில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது. இவ்வளவு பெரிய வெற்றிபெற்றும் அக்கட்சி, இன்னும் ஆட்சியமைக்க முடியாமல் தவித்துவருகிறது. அங்கு சித்தராமையா - டி.கே.சிவக்குமார் இடையே நடக்கும் முதல்வர் போட்டிக்கான மோதலால்தான் இன்னும் புதிய அரசு அமையாமல் உள்ளது. முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க 2 பேரும் முயன்று வருகின்றனர். ஏன் அவர்கள் இருவருக்குள்ளும் இந்த மோதல்? அலசுவோம் இந்தக் கட்டுரையில்!

கர்நாடகாவைப் பொறுத்தமட்டில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரைவிட முன்னாள் முதல்வர் சித்தராமையா அரசியலில் மூத்தவர். மேலும் அவருக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக உள்ளவர்களிடமும் நெருக்கமான உறவும் எம்.எல்.ஏக்களின் ஆதரவும் அதிகம் உள்ளது.

சித்தராமையா

அதுமட்டுமின்றி, சட்டசபையில் நீண்ட அனுபவம் கொண்டவர். 1983ஆம் ஆண்டு முதல்முறையாக எம்.எல்.ஏவாக தேர்வான அவர், 1994இல் அம்மாநிலத்தில் துணை முதல்வராகவும் அமரும் அளவுக்கு உயர்ந்தார். எச்.டி.தேவகெளடாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஜனதா தளத்தில் இருந்து விலகி 2008இல் காங்கிரஸில் இணைந்தார்.

அக்கட்சியில் இணைந்தபிறகு, 2013 முதல் 2018 வரை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததிலும் சாதனை படைத்துள்ளார். ஏழைகளின் நலனுக்காக சில திட்டங்கள் அவரது ஆட்சியில் கொண்டுவரப்பட்டதும், தமிழக காவிரி நீர்ப் பங்கீட்டில் கடுமை காட்டியதும் அவரது ஆட்சியினை உச்சத்துக்கு அழைத்துச் சென்றது.

சித்தராமையா

இதையடுத்தே அவர், முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. தமக்கு, சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை செல்வாக்கு இருப்பதாகவும், தனது செல்வாக்கால்தான் தலித், முஸ்லிம், லிங்காயத் மற்றும் குருபா உள்ளிட்ட பின்தங்கிய சமூகங்களின் வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்ததாகவும், தேர்தல் அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற உள்ளதால் தனக்கு இந்த முறை முதல்வர் பதவி வழங்கியே தீர வேண்டும் எனவும் சித்தராமையா ஒற்றைக்காலுடன் டெல்லியில் தவமிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே.சிவக்குமாரிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பிறகே காங்கிரஸ் வலிமையடைந்ததாகக் கூறப்படுகிறது. சித்தராமையா அளவுக்கு அவருக்கு மாநில அளவில் செல்வாக்கு இல்லை என்றாலும், டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் பழைய விசுவாசியாகக் கருதப்படுகிறார்.

டி.கே.சிவக்குமார்

தவிர, அவர், ஒக்கலிகா சமூகத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அந்தச் சமூகத்தின் வாக்குகளை அறுவடை செய்ததில் சிவக்குமாருக்கும் முக்கியப் பங்கு உண்டு. கர்நாடக அரசியலில் சாதி ரீதியிலான வாக்கு வங்கியே ஆட்சியைத் தீர்மானிக்கிறது.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் லிங்காயத், ஒக்கலிகா ஆகிய இரண்டும் செல்வாக்கு மிகுந்த சமூகங்களாக காணப்படுகின்றன. இதில் லிங்காயத் சமூகத்தினர் 17 சதவிகிதமும், ஒக்கலிகா இனத்தைச் சேர்ந்தவர்கள் 12 சதவிகிதத்தினரும் உள்ளனர். இந்த ஒக்கலிகா இனத்தின் ஓட்டுகளைத்தான் சிவக்குமார் வேட்டையாடி இருக்கிறார். கடந்த முறை இவ்வினத்தின் ஓட்டுகளை சித்தராமையா தக்கவைக்காததே தோல்விக்கு காரணம் எனப் பல புகார்களை டெல்லி தலைமையிடம் டி.கே.சிவக்குமார் பட்டியலிட்டுள்ளாராம். மேலும், “ஏற்கெனவே சித்தராமையா முதல்வராக 5 ஆண்டுகள் இருந்துள்ளார். அதனால் இந்த முறை எனக்குத்தான் முதல்வர் பதவியைத் தர வேண்டும்“ என காந்தம்போல காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு ஒட்டிக் கொண்டுள்ளாராம்.

டி.கே.சிவக்குமார்

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கமும் முக்கியம் என்பதுபோல, காங்கிரஸ் கட்சிக்கு சித்தராமையா மற்றும் சிவக்குமார் என இரு முகங்களும் அவசியம் தேவை. அவர்கள் இல்லாமல் கர்நாடக காங்கிரஸை அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது. இதனால்தான் காங்கிரஸ் தலைமை, முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் திண்டாடி வருகிறது.

இதற்கிடையே கடந்த மே 14ஆம் தேதி நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின்போது சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவர்களுடன் 31 அமைச்சர்கள் பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. சித்தராமையாவைத் தேர்ந்தெடுக்க 80 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததாகவும், இதற்கு இருதரப்பு ஒப்புக்கொண்டதாலேயே சித்தராமையா டெல்லி புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டது.

சித்தராமையா ,மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவக்குமார்

அதன்பிறகு தாங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் என தன்னுடைய ஆதரவாளர்கள் தெரிவித்ததை அடுத்து டி.கே.சிவக்குமார் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு காங்கிரஸ் தலைமையைச் சந்தித்து, ‘தமக்கு முதல்வர் பதவி மட்டுமே வேண்டும்; துணை முதல்வர் பதவி வேண்டாம். அப்படி தமக்கு முதல்வர் பதவி தரவில்லை என்றால், சித்தராமையாவிற்கும் தரக்கூடாது’ எனக் கொடி பிடித்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சித்தராமையாவிற்கு முதல் இரண்டரை ஆண்டுகளும், சிவக்குமாருக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளும் முதல்வர் பதவி வழங்கி இருவரையும் சமாதானம் அடையவைக்கலாம் என காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தியுள்ளதாம். ஆனால், இந்த ஆலோசனைக்கு அவர்கள் இருவரும் என்ன பதிலளிப்பார்கள் என்பது தெரியாமல் இருப்பதால், இது முடிவு செய்யப்படாமலும் இருக்கிறதாம். அதேநேரத்தில், இதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

”டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கினால், அவர் மீது இருக்கும் சிபிஐ வழக்குகளை, மத்தியில் இருக்கும் பாஜக அரசு மீண்டும் கையில் எடுக்கும். அதன்மூலம் காங்கிரஸுக்கும், மாநிலத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படும். இப்போதுதான் நாம் உயிர்ப்புடன் உள்ளோம். மீண்டும் காங்கிரஸுக்கு அவப்பெயர் ஏற்பட்டால், அது நாடாளுமன்றத் தேர்தல் வரை எதிரொலிக்கும்” என காங்கிரஸின் தலைமைக்குள் சித்தராமையா தரப்பு கொளுத்திப் போட்டிருப்பதாகவும், இதனாலேயே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி அளிக்க காங்கிரஸ் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சச்சரவுகளுக்கு இடையே, தற்போது அண்மை செய்தியாக மற்றொன்றும் வந்துள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு என தகவல் வந்துள்ளது. பதவியேற்பு விழா, மே 20-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன!