கோடை வெப்பத்தையும் மிஞ்சும் வகையில் அனலில் தகிக்கிறது தமிழக அரசியல் களம். இந்தச் சூழலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்கவிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து ரஜினிகாந்த்தை வந்து சந்தித்து வரும் வேளையில், அவர் ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்கும் நாளுக்காக பரபரப்பாக காணப்படுகிறது போயஸ் கார்டன். திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த ரஜினிகாந்த், 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அதனை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். ரஜினியை அரசியலில் கால் பதிக்க வலியுறுத்தி அவரது ரசிகர்கள் பட்டி தொட்டியெங்கும் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் வைத்து அழைப்பு விடுத்ததும் அதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, தனது ரசிகர்களை மீண்டும் சந்தித்து தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். சென்னை, கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில், வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, அரியலூர், தஞ்சை, கரூர், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்ட நிர்வாகிகளை முதற்கட்டமாக சந்தித்து தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள உள்ளார்.
ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறுகின்றனர் அவரது ரசிகர்கள். ரஜினிகாந்த் தனது படங்கள் சிலவற்றில் பேசிய வசனங்களை அவரது அரசியல் பிரவேசத்திற்கான அச்சாரமாகத்தான் ரசிகர்கள் கருதி வந்தனர். ஆனால், அதற்கான அறிகுறி எதுவும் அவரது பேச்சிலோ அல்லது செயலிலோ இருந்ததாகத் தெரியவில்லை.
இத்தகைய சூழலில், ரஜினிகாந்த் - ரசிகர்கள் இடையிலான சந்திப்பின் வெளிப்பாடு என்னவென்பதை காலம்தான் உரைக்கும்.