சிறப்புக் களம்

இந்தியா vs நியூ. தொடர்! ஐபிஎல் அனுபவம் இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கைகொடுக்குமா?

இந்தியா vs நியூ. தொடர்! ஐபிஎல் அனுபவம் இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கைகொடுக்குமா?

EllusamyKarthik

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் டி20 போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

விராட் கோலி, டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலகி உள்ள நிலையில், அணியை ரோகித் ஷர்மா வழிநடத்துகிறார். அவரது தலைமையில் இளமையும், அனுபவமும் கொண்ட வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர். 

இந்திய அணி விவரம்!

ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கே கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், சாஹல், அஷ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ். 

இதில் ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதன் மூலம் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரர்களாக களம் காண்பார்கள். 

இந்த மூவர் மட்டுமல்லாது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் சிலர் ஐபிஎல் 2021 சீசனில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டம்தான் அவர்களுக்கு அந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

ஐபிஎல் அனுபவம் இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கைகொடுக்குமா? 

ஐபிஎல் அனுபவம் இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டியில் எந்தளவுக்கு கைக்கொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்திய அணி நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேற காரணமே ஐபிஎல் தான் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஐபிஎல் 2021-இல் கிடைத்த அனுபவம் தங்கள் அணியின் பவுலர் ஹேசல்வுட்டுக்கு பெரிதும் கைகொடுத்ததாக சொல்லி இருந்தார் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச். 

இப்படி கருத்துகள் வேறுபடுகின்ற நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றுள்ள சில இளம் வீரர்களின் 2021 ஐபிஎல் பர்ஃபாமென்ஸ் எப்படி என்று பார்ப்போம். 

வெங்கடேஷ் ஐயர் : கொல்கத்தா அணிக்காக 10 இன்னிங்ஸ் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் மொத்தம் 370 ரன்களை எடுத்திருந்தார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும். அதே நேரத்தில் 8.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் மத்திய பிரதேச அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உட்பட 155 ரன்கள் எடுத்துள்ளார். 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

ருதுராஜ் கெய்க்வாட் : இந்திய அணியின் மற்றொரு இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்களை எடுத்திருந்தார். அதில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனும் அவர் தான். இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடி இருந்தாலும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் தனது ரன் குவிப்பை தொடருவார் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு சையத் முஷ்டாக் அலி தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 259 ரன்களை குவித்துள்ளார். 

ஆவேஷ் கான் : டெல்லி அணிக்காக விளையாடி வரும் பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் அபாராமாக பந்து வீசி அசத்தி வருகிறார். 16 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2021 ஐபிஎல் சீசனில் அதிக டாட் பால்கள் வீசிய வீரர். மொத்தம் அவர் வீசியது 156 டாட் பால்கள்.  

ஹர்ஷல் பட்டேல் : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். மொத்தம் 32 விக்கெட்டுகள். அவர் மட்டுமே ஒரே ஒரு விக்கெட் கூடுதலாக வீழ்த்தி இருந்திருந்தால் ஐபிஎல் அரங்கில் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். முதல்தர கிரிக்கெட் அதிகம் விளையாடி உள்ள வீரர் இவர். 

இதே போல அனுபவ வீரர்களான சாஹல், அஷ்வின், அக்சர் படேல் கூட நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த ஆட்டத்தை அவர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். நிச்சயம் ஹேசல்வுட்டுக்கு கைகொடுத்ததை போல நம் இந்திய வீரர்களுக்கும் ஐபிஎல் அனுபவம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்க உதவும் என நம்புவோம். 

ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பது சிக்கலாகுமா?

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் ரோகித் ஷர்மா, கே.எல். ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர் என ஐந்து தொடக்க ஆட்டக்காரர்கள் உள்ளனர். இவர்களை தவிர அணியில் இடம் பெற்றுள்ள பிரதான பேட்ஸ்மேன்களாக ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் உள்ளனர். இதில் சூர்யகுமார், ஷ்ரேயஸ் மற்றும் பண்ட் என மூவரும் முறையே 3, 4 மற்றும் 5-வது பேட்ஸ்மேன்களாக களம் காண வாய்ப்பு அதிகம். அதனால் மீதமுள்ள ஆறாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மென் இறங்கி விளையாட வேண்டி உள்ளது. மறுபக்கம் ஏழாவது பேட்ஸ்மேனாக ஆல்-ரவுண்டர் விளையாடவே வாய்ப்பு அதிகம். அதனால் பரிசோதனை முயற்சியாக இந்திய அணி இந்த தொடரில் ஓப்பனிங் காம்பினேஷனை மாற்றிப் பார்க்க வாய்ப்புள்ளது.