குடும்பத்தை தோளிலும், கேமராவை கழுத்திலும் சுமந்து, புகைப்படக் கலைஞராக சிறகு விரித்து வலம்வந்த விக்னேஷ்க்கு, 30 வயதில் திடீரென்று கண் பார்வை முழுவதுமாக இழந்துபோக, நிர்க்கதியானது விக்னேஷின் வாழ்க்கை மட்டுமல்ல, அவரின் குடும்பமும்தான்.
ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞருக்கு கண்பார்வை போனபிறகு என்ன வாழ்க்கை இருக்கிறது? வாழ்வாதாரத்துக்கான வழி இனி ஏது? குடும்பத்தை எப்படி காப்பாற்றப் போகிறார்...? என சமூகத்தின் வார்த்தைகள் எல்லாம் நெஞ்சை முள்ளாக குத்திக் கிழித்தபோது, ஒரு கரம் விக்னேஷின் தோளை தொட்டு அழுத்தி நம்பிக்கை கொடுத்தது. விக்னேஷ் மனைவி பிரேமாவின் கரம்தான் அது.
விக்னேஷை சந்தித்து பேசினோம். ‘’எனக்கு சொந்த ஊர் தென்காசி. எட்டாவது வகுப்பு வரைதான் படிச்சேன். மெக்கானிக்கல், போட்டோ எடுப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. கேரளாவில் பத்து ஆண்டுகள் வேலை பார்த்தேன். என் மாமா சொந்தமாக ஸ்டுடியோ வைத்திருந்தார். அவரிடம் இருந்து போட்டோ எடுக்கிறது கத்துக்கிட்டேன்.
சில வருஷத்துக்கு முன்னாடி என்னோட அம்மா வீட்டு முன்னாடியே விபத்துல இறந்து போயிட்டாங்க. அம்மாவின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது எனக்கு பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தலைவலியும் உண்டாகியது. மன அமைதிக்காக மேல்மருவத்தூர் கோவில் டிரஸ்டில் சில ஆண்டுகள் தங்கி இருந்தேன். அதிலிருந்து ஒரு புத்துணர்வு கிடைத்தது.
2011-இல் ஊருக்கு திரும்பி பிரேமாவை திருமணம் முடித்தேன். பாபநாசம் பக்கம் முதலியார்பட்டி என்கிற கிராமத்தில் ஒரு ஸ்டுடியோ ஆரம்பிச்சி, அங்கேயே குடிபெயர்ந்தேன். ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. வாழ்க்கை சுமூகமாக போயிட்டு இருந்தப்போ, என்னோட வலது கண்ல பிரச்சனை இருந்தது மாதிரி உணர்ந்தேன். அதுக்காக சிகிச்சை எடுத்து வந்தேன். ஆனால் அது குணமான மாதிரி தெரியல. கண் பார்வை கொஞ்சகொஞ்சமா குறைஞ்சிட்டு வந்தது. நிறைய பணம் செலவழிச்சு, சிகிச்சை எடுத்தும் ஒரு பலனும் இல்ல. டாக்டர்கள் கைவிட்டாங்க. ரெண்டு வருஷத்துல இரு கண்களிலும் பார்வை முழுவதுமாக பறிபோனது. வாழ்க்கையே இருண்டுபோய்விட்டது’’ என்று தழுதழுத்தவர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.
‘’ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் கையில் குழந்தையையும் மனைவியையும் வைத்து தவித்து வந்தேன். அந்த சூழ்நிலையில், நண்பர் ஒருவரை அழைத்துவந்து, அவருக்கு போட்டோ எடுக்கக் கற்றுக்கொடுத்து, ஸ்டுடியோ நடத்தி வந்தேன். ஆனால் அவர் என்னிடம் தொழில் கற்றுக்கொண்டு விட்டு, தனியாக ஸ்டுடியோ ஆரம்பித்ததோடு, எனது வாடிக்கையாளர்களையும் அவர் பக்கம் இழுத்துக்கொண்டு போய்விட்டார். நண்பரின் இச்செயலை ஜீரணிக்க முடியவில்லை. விரக்தியில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் பிழைத்துவிட்டேன். சில நாட்களிலே இரண்டாவது குழந்தை பிறந்தது.
அதன் பிறகு எனக்கு வந்த புகைப்பட ஆர்டர்களை, எனக்குத் தெரிந்த ஸ்டுடியோ நண்பர்களிடம் கொடுத்து கமிஷன் பெற்று வந்தேன். ஆனால், புகைப்படம் எடுக்க நான் வராததால் ஒருகட்டத்தில் ஆர்டர்கள் குறைந்துவிட்டது. மீண்டும் கையறுநிலைக்கு தள்ளப்பட்டேன். இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் நினைத்து கலங்கினேன். அவர்களை எப்படி வாழ வைக்கப் போறோனோ என்ற கவலை என்னை உறங்கவிடவில்லை. மனம் பாரமாகவே இருந்தது.
மீண்டும் தவறான முடிவை எடுக்க மனம் வரவில்லை. என்னை நம்பி குழந்தைகள், மனைவி இருக்கிறார்கள். ‘என்ன செய்வேன் கடவுளே’ என்று புலம்பிக் கொண்டிருந்த நிலையில், ஒருநாள் மனைவி பிரேமா என்னிடம், ‘எனக்கு போட்டோ எடுக்க கற்றுக்கொடுங்க.. இனிமேல் ஆர்டர்களுக்கு நான் போட்டோ எடுக்க போறேன்’னு சொன்னாங்க.
ஆரம்பத்தில் எனக்கு சில தயக்கங்கள் இருந்தது. புகைப்படம் எடுப்பது என்கிறது ஒரு கலை. அதற்கு உள்ளூர ஆர்வம் இருக்க வேண்டும். சூழ்நிலைகள் காரணமாக போட்டோ கற்றுக்கொண்டு இந்த ஃ பீல்ட்ல நிலைச்சு நிற்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இன்னொன்று, பிரேமா படித்தது ஐந்தாவது வகுப்பு வரைதான். கேமரா டெக்னிக், ஃபியூச்சர்ஸ் எல்லாத்தையும் அத்துபடியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்ரேட் பண்ண தெரியணும், போட்டோஷாப் பண்ண தெரியனும். சிட்டியாக இருந்தாலும் பரவாயில்லை, கிராமப்பகுதியில் ஒரு பெண்ணுக்கு போட்டோகிராபி ‘செட்’ ஆகுமா...? எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும்? என ஏகப்பட்ட கேள்விகள், குழப்பங்கள் என் மனதில் ஓடியது. ஆனால் பிரேமா, ‘என்னால நல்லா பண்ண முடியும்னு நம்பிக்கை இருக்கு.. தைரியமா சொல்லிக் கொடுங்க.. நான் ஜெயிச்சு காட்டுறேன்.. நமக்கு இதைவிட்ட வேறு வழியில்லை’னு பிரேமா நம்பிக்கையாக சொன்னாங்க.
போட்டோ எடுக்கிறது, கம்ப்யூட்டர் ஆப்ரேட் பண்றது, போட்டோஷாப் பண்றது எல்லாத்தையும் நான் சொல்ல சொல்ல, ஒவ்வொன்றாக படிப்படியா கற்றுக்கொண்டு வந்தாங்க. விடிய விடிய உட்கார்ந்து போட்டோ எடுக்க பழகியும், போட்டோஷாப் பண்ணவும் பயிற்சி பண்ணாங்க. அப்புறம் பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா.. இந்த மாதிரி சின்ன சின்ன ஆர்டர்களுக்கு அனுப்பி வைத்தேன். நான் எதிர்பார்த்ததைவிட பிரேமாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவங்க எடுக்கிற போட்டோவும் திருப்திகரமாக இருந்தது. நாள்கள் போக, திருமண ஆர்டர்கள், அரசு திட்டப்பணிகள் ஆர்டர்கள் வந்தது. இப்போ எங்க சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரேமா பரிட்சயமான போட்டோகிராபராக ஆயிட்டாங்க. குறிப்பாக கிராமப்புறங்களில் பிரேமாவுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு’’ என்கிறார் விக்னேஷ்.
நவீன மாடல் கேமராவோ, வீடியோ கேமராவோ இல்லாமல் தன்னிடம் இருக்கும் நடுத்தரமான மாடல் கேமராக்களை வைத்தே, ஆர்டர்களை சிறப்பாக முடித்துக்கொடுத்து வரவேற்பு பெற்றிருக்கிறார் பிரேமா. சக்தி பூதத்தான், சக்தி வள்ளி என்ற இரண்டு குழந்தைகளோடு, பார்வையிழந்த கணவரையும் அரவணைத்து, நம்பிக்கை அளித்து வாழ்ந்து வருகிறார் பிரேமா.
‘’கணவரின் நிலை இப்படியாகிவிட்ட சூழலில், குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்ததாக உணர்ந்தேன். அதனால்தான் இதில் துணிந்து இறங்கினேன். முதல்ல எனக்கு மவுஸ் பிடிக்கக் கூட தெரியாது. கணவர்தான் எனக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக புரியும்படி சொல்லிக் கொடுத்தார்.
ஒரு விஷயத்தை தவறுதலாக பண்ணும்போது கூட, ‘இந்த ஃபீல்ட்ல எவ்வளவுக்கு எவ்வளவு தவறு பண்றயோ, அவ்வளவுக்கு அவ்வளவு சரியாக பண்ண முடியும்’ என்று பாசிட்டிவாக பேசி என்னை வழிநடத்தினார். சிலர் என்னை முதுகுக்குப் பின்னால் ஏளனமாகப் பேசியபோது கூட, என்னை தைரியப்படுத்தினார்.
சிலர் எங்களின் நிலையைக் கண்டு, பண உதவி செய்ய வருகிறார்கள். எனக்கு அது வேண்டவே வேண்டாம். நாங்கள் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல. என்னிடம் திறமை இருக்கிறது. எனக்கு ஏதாவது உதவி செய்ய நினைத்தால், போட்டோ ஆர்டர்களை கொடுங்கள். அதில் கிடைக்கிற பணம் போதும்’’ என்றுக்கூறி, நமக்கு விடைகொடுத்து, கழுத்தில் கேமராவை மாட்டிக்கொண்டு ஆர்டருக்கு கிளம்பினார் பிரேமா.
பிரேமா சுமப்பது கேமராவை மட்டுமல்ல, பார்வையிழந்த தனது கணவரின் கனவுகளையும் தான்.