Easter Freepik
சிறப்புக் களம்

‘தன்னுயிர் கொடுத்தேனும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும்' - ஈஸ்டர் திருநாள் தரும் ஞானம் #EasterSunday

சிலுவையில் உயிர்விட்ட இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.

Justindurai S

மனிதனின் பாவம் போக்க மரித்து உயிர்த்தெழுந்து இயேசு!

கடவுள் (தேவன்) முதல் மனிதனாக ஆதாமையும், அவனுக்கு துணையாக ஏவாளையும் படைத்தார். பின்பு இவர்கள் மூலம் மக்கள்தொகை உலகில் பெருகத்துவங்கி, சேத், ஏனோஸ், கேனான், மகலாலேயல், யாரேத், ஏனோக், மெத்தூசலா, லாமேக், நோவா, சேம், அர்பக்சாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகு, செருக், நாகோர், தேரா, ஆபிரகாம் வரை 20 தலைமுறைகள் உருவாயின.

2 ஆயிரம் ஆண்டுகளாக ஆதாமிலிருந்து துவங்கிய பாவம் உலகில் அதிகமானது. மனிதன் பாவ மன்னிப்பை பெற ஆட்டையும், மாட்டையும், பறவைகளையும் பலியாக கடவுளுக்குச் செலுத்தி வந்தான். ஆனாலும், பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் மறுபடியும் பாவத்திற்கு அடிமையாகி வந்தான்.

Jesus

மனிதனின் பாவம் போக்க வேண்டுமானால் தேவன் தம் சொந்த குமாரனையே (இயேசு) அதற்கு பலியாக கொடுக்க முடிவு செய்தார். ஆம் , மனிதனுடைய பாவங்களை அழிப்பதற்கு, மனித ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பது கட்டளை. தேவன் ரத்தத்தால் உடையவர் அல்ல. அதனால் தேவன் மனிதனாக பிறக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேவன் தம் சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இவ்வுலகத்திற்கு மனிதனாக பிறக்க செய்தார். பிறந்து நமக்காக பாடுபட்டு, பிதாவாகிய தேவனின் சித்தத்தின் படி , நமக்காக பலியாக மரித்தார். மரித்து மீண்டும் உயிர்ந்தெழுந்தார். அவர் ரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

இயேசு உயிர்த்தெழுந்தது எப்படி?

இயேசு உயிர் நீத்த பிறகு அவரது உடலையும், சிலுவையில் அவருடன் அறைந்து கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் அகற்ற ஏற்பாடு செய்தனர். இதன் பிறகு அவரது சீடர் யோசேப்பு, மன்னன் பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலை எடுத்துப் போக அனுமதி கேட்டார். மன்னனும் அனுமதித்தான்.

இயேசுவின் உடல் அருகில் வந்த நிக்கோதேமுன் என்பவர், அவரது உடலில் நறுமணப் பொருளைத் தடவி, துணியில் சுற்றி கட்டினார். கண்மலையில் வெட்டியிருந்த கல்லறையில் அவரது உடலை வைத்து, அதன் வாசலில் பெரிய கல்லை புரட்டி வைத்தனர்.

Jesus

ஞாயிறு காலை இருள் நீங்காத பொழுதில் அவரது கல்லறைக்கு மகதலேனா மரியாள், மரியாள் சலோமி ஆகியோர் சுகந்த வர்க்கங்களைக் கொண்டு சென்றனர். கல்லறை வாசலில் இருந்த பெரிய கல்லை எப்படி புரட்டுவது என்று பேசிக் கொண்டே சென்றனர். அங்கு சென்று பார்த்த போது, கல் தானாக புரண்டு கிடந்ததைக் கண்டனர்.

'இதை யார் அகற்றினர்?' என்ற படியே கல்லறைக்குள் எட்டிப் பார்த்தனர். உள்ளே இயேசுவின் உடல் இல்லை. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இயேசுவின் சீடர்களான சீமோன், பேதுரு, யோவான் ஆகியோரிடம் சென்று இந்த தகவலைக் கூறினர். இதற்குள் இன்னும் சில பெண்களும் கல்லறைக்கு வந்தனர். அங்கே பிரகாசமான ஆடையணிந்த இருவரைக் கண்டனர். அவர்கள் அந்தப் பெண்களிடம், “உயிரோடு இருக்கிற ஒருவரை நீங்கள் மரித்தோர் இடத்தில் தேடுகிறது என்ன? அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தெழுந்து விட்டார். நீங்கள் போய் இந்த செய்தியை அவரது சீடர்களிடத்தில் அறிவியுங்கள்” என்றனர்.

அதைகேட்ட அவர்கள் கல்லறையை விட்டு அகன்றனர். அவர்கள் செல்லும் வழியில் இயேசு வந்து கொண்டிருந்தார். அவர்களை 'வாழ்க' என வாழ்த்தியதுடன், “பயப்படாதிருங்கள். நீங்கள் போய் என் சீடர்களை கலிலியோவுக்கு போகும் படி சொல்லுங்கள். அவர்கள் அங்கே என்னைக் காண்பார்கள்” என்றார்.

இயேசு உயிர்த்தெழுந்த அந்த நாளில், அம்மோவு என்ற நகருக்கு இருவர் சென்றனர். அவர்களது முகம் துக்கமாக இருந்தது. அவர்களை இயேசு பார்த்தார். “ஏன் துக்கமாக இருக்கிறீர்கள்?” என்றார். அதற்கு அவர்கள், “இயேசு என்ற தீர்க்கதரிசி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் காணவில்லை” என்றனர்.

Jesus

உடனே இயேசு அவர்களை நோக்கி, “கிறிஸ்து தமது மகிமைகளை வெளிப்படுத்தும் நிலையில், இந்தப் பாடுகளை எல்லாம் அடைந்து தீர வேண்டுமல்லவா?” என்றார். ஆம், இயேசு உலக மக்களின் பாவங்களை ஏற்று படாத பாடுபட்டார். உயிரையும் கொடுத்தார். தன்னுயிர் கொடுத்தேனும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என மக்களுக்கு உணர்த்தினார்.

இயேசு இறந்த பிறகு அவருடைய சீடர்கள் மிகவும் சோகமாக இருந்தார்கள். ஆனால், அவர் உயிரோடு எழுந்ததை கேள்விப்பட்டதும் அவர்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உண்டாகியது. அது அவர்களுக்கு இயேசு மீதான விசுவாசத்தை கொடுத்தது. இயேசு கடவுளுடைய மகன்தான் என்பதை அவருடைய உயிர்த்தெழுதல் நிரூபித்தது. இந்த உயிர்த்தெழுதலை அவரை ஏற்றுக்கொண்டவர்கள் கொண்டாடுவதே, ஈஸ்டர் என கொண்டாடப்படுகிறது!

Jesus

இயேசு தற்போது எங்கே இருக்கிறார்?

அப்போஸ்தலர் 7வது அதிகாரத்தில், 'அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் ' என்கிற வசனத்தின் மூலம் , தற்போது கர்த்தராகிய இயேசு பரலோகத்தில் இருக்கிறார் என்று அவரை ஏற்றுக்கொண்டவர்களால் நம்பப்படுகிறது. வேதாகமம் அடிக்கடி இயேசுவை பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பதாக குறிப்பிடுகிறது.