இந்தி சினிமாவில் கோலோச்சிய தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களில் முன்னிலை வகிப்பது தமிழ்த் திரையுலப் படைப்பாளிகள்தான். அமிதாப் பச்சன் அழைத்தும் பாக்யராஜ் போன்றவர்கள் பாலிவுட் பக்கம் தலைகாட்ட விரும்பவில்லை. ஷங்கர், மணிரத்னம், பிரியதர்ஷன் போன்றோர் மட்டும் இதில் விதிவிலக்காக தங்கள் தமிழ்ப் படங்களின் ரீமேக்குகளை மட்டும் எடுத்திருந்தனர். ஆனால், பிரபுதேவா இந்த வரையறையை மாற்றி எழுதினார். சொந்த கதையாக இல்லாவிட்டாலும், ரீமேக் படங்கள் மூலம் பாலிவுட்டில் தனி முத்திரை பதித்தார். அவர் படங்களின் கமர்ஷியல் வெற்றியால் ஒருகட்டத்தில், இந்தி சினிமாவில் அதிக சம்பளம் பெறும் இயக்குநர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், சமீபத்தில் 'ராதே' கொடுத்த தோல்வி அவரை அசைத்து பார்த்தது வேறு கதை.
பிரபுதேவாவை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த இயக்குநர்கள் பலர் இப்போது பாலிவுட் பக்கம் படையெடுத்து வருகின்றனர். அப்படி சொல்வதைவிட அவர்களுக்கு பாலிவுட் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து வருகிறது என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த இயக்குநர்களுக்கு தற்போது பாலிவுட் வட்டாரத்தில் நல்ல மவுசு காணப்படுகிறது.
'ஷெர்ஷா' முதல் 'ஜெர்சி' வரை: சித்தார்த் மல்ஹோத்ராவின் 'ஷெர்ஷா'. கார்கில் போர் நாயகன் கேப்டன் விக்ரம் பாத்ராவின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்திய புதிய படம் இது. இந்தப் படத்தின் மூலமாக தமிழில் 'பட்டியல்', அஜித்தின் 'பில்லா' படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். முதல் படமே மெகா ஹிட் என்பதால், பாலிவுட்டில் கவனிக்கபடக் கூடியவராக மாறி இருக்கிறார். இதேபோல், 'காஞ்சனா' படம் மூலமாக ராகவா லாரன்ஸ் இந்தி சென்றார். இப்போது இயக்குநர் அட்லீ, ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். 'ஓ மை கடவுளே' இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து அதன் இந்திப் பதிப்பை தானே ரீமேக் செய்கிறார். ஷங்கர் 'அந்நியன்' படத்தின் ரீமேக்கில் பிஸியாக இருக்கிறார்.
இப்படி, சமீபத்திய ஆண்டுகளில் பாலிவுட் சினிமா தென்னிந்திய இயக்குநர்களை நோக்கி ஆர்வத்துடன் திரும்பியதற்கு அதிகமான தென்னிந்திய படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதும், முக்கிய காரணம். ரீமேக் படங்களை இயக்க, அதன் அசல் இயக்குநர்கள் பேரில் இவர்கள் இழுக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால், விஷ்ணு வர்தன் விஷயத்தில், அவர் ஐந்து வருடங்களுக்கும் மேலாக மும்பையில் வாழ்ந்ததால் பாலிவுட்டுக்கு அவர் முற்றிலும் அந்நியராகவோ, புதியரகவோ இருக்கவில்லை. 'ஷெர்ஷா'வின் புரோமோஷனின்போது இதனை வெளிப்படுத்தி பேசியவர், தான் பாலிவுட் அமைப்பை முழுமையாக அறிந்திருப்பதாக கூறினார். மேலும், அவர் ஆரம்பத்தில் இருந்தே 'ஷெர்ஷா' படத்தின் எழுத்தாளர் சந்தீப் ஸ்ரீவஸ்தவாவுடன் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டதால் 'ஷெர்ஷா'வை இயக்கும் வாய்ப்பு தனக்கு எளிதாக வந்தது என்றும், இந்தி சரளமாக படிக்கவும் எழுதவும் பேசவும்கூட தெரியும் என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்தி: தென்னிந்திய சினிமாவை ஒப்பிட்டு பாலிவுட்டை விளாசும் கங்கனா... ஏன்?
சினிமா வர்த்தக ஆய்வாளர் திரிநாத் என்பவர், "தென்னிந்திய படங்களின் இந்தி ரீமேக்குகள் சமீபகாலமாக அதன் அசல் இயக்குநர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஏனெனில் இப்படிச் செய்வதால் தயாரிப்பாளர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும். தயாரிப்பாளர்கள் தென்னிந்திய படங்களின் ரீமேக் உரிமைகளைப் பெறும்போதே அவர்கள் ஒரு புதிய இயக்குநரை ஒப்பந்தம் செய்வது என்பது போன்ற விஷயங்களில் பெரிதாக செலவழிக்க வேண்டி இருக்கும் என்பதால், ஒரிஜினல் படத்தை இயக்கிய அதே இயக்குநரையும் இணைத்துக் கொள்ள முயல்கிறார்கள். இது உண்மையில் தயாரிப்பாளருக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது. மேலும், புதிதாக யாராவது வந்து இயக்கி படங்கள் சொதப்பி விடுவதும் நடந்துவிடுகிறது. ஆனால், ஒரே இயக்குநர் தனது சொந்தப் படத்தைக் கையாள்வது மூலம் அது தடுக்கப்படுகிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தமிழ்ப் படமான "ஓ மை கடவுளே" படம். இந்தப் படத்தை தமிழில் இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்தே இந்தி மற்றும் தெலுங்கில் இயக்குகிறார். இப்படிச் செய்வதால், தயாரிப்பாளர்கள் தங்களின் படம் பாதுகாப்பானவர்களின் கைகளில் இருப்பதாக உணர்கிறார்கள்" என்று கூறினார்.
தமிழைத் தாண்டி தெலுங்கு இயக்குநர்களுக்கும் இதேபோன்று வரவேற்பு பாலிவுட்டில் இருந்து வருகிறது. நானி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த 'ஜெர்சி' இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. 'ஜெர்சி' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் அதன் இயக்குநர் கவுதம் தின்னனூரி, ஷாகித் கபூர்தான் தன்னை பாலிவுட்டுக்கு அழைத்தாக தெரிவித்திருக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், "ஜெர்சி வெளியான பத்து நாட்களுக்குப் பிறகு, நான் ஷாஹித் கபூரை சந்தித்தேன். அப்போது கபீர் சிங் ரிலீஸாகவில்லை. அந்தத் தருணத்தில் ஜெர்சியைப் பார்த்த ஷாகித் அதை மிகவும் விரும்பி ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்தார். அந்த நேரத்தில், இந்தத் திட்டம் நடக்குமா அல்லது அதை யார் இயக்குவார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இந்தி ரீமேக்கை நான் இயக்குவேனா என்பதும் எனக்குத் தெரியவில்லை. பின்னர், கபீர் சிங்கில் அவரது நடிப்பைப் பாராட்டி நான் அவருக்கு செய்தி அனுப்பினேன். அவர் என்னை மீண்டும் அழைத்து ஜெர்சி இந்தி ரீமேக் நடக்கிறது என்று கூறி என்னை அழைத்தார்" என்று ஜெர்சி அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இதேபோல், அட்லீ தனது பாலிவுட் அறிமுகம் தொடர்பாக, "பாலிவுட்டில் பணிபுரியும் இந்த வாய்ப்பை, பரந்த அளவிலான பார்வையாளர்கள் மத்தியில் நான் ஒரு திரைப்பட இயக்குநராக நிலைநிறுத்த உதவும் என்பதை மட்டுமே இப்போதைக்கு பார்க்கிறேன்" என்றுள்ளார்.
அட்லீ சொன்னது போல இந்திய அளவில் உள்ள பரந்த அளவிலான சினிமா ரசிகர்கள் மத்தியில் தங்களை ஓர் இயக்குநராக நிலைநிறுத்த இயக்குநர்கள் இதனை ஒரு வாய்ப்பாக பார்க்கின்றனர். ஒட்டுமொத்தமாக இவர்கள் தெரிவித்திருப்பதன் மூலம், பாலிவுட்டில் தற்போது தென்னிந்திய சினிமா இயக்குநர்கள் எழுச்சிக்கு அவர்களின் தரமான கதைகளும், அவர்கள் மீது பாலிவுட் வட்டாரம் வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கையும் முக்கிய காரணமாக புலப்படுகிறது. இதனால், இந்த ட்ரெண்ட் இப்போது அதிகமாகியும் வருகிறது. இந்த மாற்றத்தின் அறிகுறியாக தென்னிந்திய கலைஞர்கள் பலரும் பாலிவுட் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
- மலையரசு