இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமான கோவாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்வதற்கு பாஜகவும் காங்கிரஸும் இப்போதே பணிகளைத் தொடங்கிவிட்டன. பரப்பளவில், மக்கள் தொகையில் மிகச் சிறிய அளவே உள்ள கோவாவை வெல்ல இரு கட்சிகளும் எடுக்கும் முயற்சிகளின் பின்னணியை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
சமீபத்தில் பாஜக சார்பில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் கோவா சென்றனர். இதேபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்த மாத தொடக்கத்தில் கோவா சென்றிருந்தார். ஆகஸ்ட் மாதத்திலும் சிதம்பரம் கோவா சென்றது குறிப்பிடத்தக்கது. இப்படி அரசியல் கட்சித் தலைவர்கள் கோவாவில் அடுத்தடுத்து முகாமிட்டு வருவதற்கு காரணம், அடுத்த ஆண்டு அங்கு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல். இந்த தலைவர்கள் அனைவரும் தங்களின் கட்சிகளுக்காக தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காகவே கோவா சென்றனர்.
3,702 சதுர கிலோமீட்டரே கொண்ட இந்தியாவின் மிகச் சிறிய கடலோர மாநிலம் கோவா. கோவாவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14.85 லட்சம் மக்களே வசிக்கிறார்கள். மும்பை மற்றும் டெல்லி மக்கள் தொகையை கணக்கிடுகையில் இது அவற்றில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே. இப்படி சிறிய மாநிலமான கோவாவை கைப்பற்ற இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக முயன்று வருகின்றன. இதற்கு பல காரணங்கள் உண்டு.
கோவாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் கிளியோபாடோ குடின்ஹோ கூறும்போது, "கோவாவில் பெறப்படும் வெற்றி, அரசியல் கட்சிகளுக்கு தங்களின் வெற்றி எண்ணைக்கையில் மேலும் ஒரு மாநிலத்தைச் சேர்க்கிறது என்பதைத் தவிர, முழு நாட்டின் கவனத்தையும் ஈர்க்கும் ரியல் எஸ்டேட் துறை, சுற்றுலா மற்றும் சுரங்கம் போன்ற தொழில்கள் இங்கே முக்கியமானவையாக இருப்பதால் அரசியல் முக்கியவதும் வாய்ந்ததாக கோவா இருந்து வருகிறது" என்று உண்மைக் காரணங்களை அடுக்கிறார்.
கோவாவின் அரசியல்: மொத்தம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் இருக்கும் வாக்காளர் எண்ணிக்கை பெரும்பாலும் 25,000 முதல் 30,000 வரை மட்டுமே. ஒரு தொகுதியில் இரண்டு முனைப் போட்டி ஏற்பட்டால் ஒரு வேட்பாளர் வெற்றிபெற 12,000 வாக்குகள் மட்டுமே தேவை. அதுவே பல முனைப் போட்டி நிலவும்போது 3,000 - 4,000 வாக்குகள் எடுத்துக்கூட வேட்பாளர் வெற்றிபெற முடியும். இதன் பொருள், இந்த மாநிலத்தில் ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு தொகுதிகளிலும் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தற்போது கோவாவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், 2017 தேர்தலில் காங்கிரஸே பெரும்பான்மையான இடங்களை வென்றது. காங்கிரஸ் 17 இடங்களை வென்றது. ஆனால் இப்போது வெறும் 5 உறுப்பினர்களே காங்கிரஸ் சார்பில் உள்ளனர். மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பாஜகவுக்கு தாவிவிட்டனர். இதன்காரணமாக, 2017-ல் 13 இடங்களை மட்டுமே வென்றிருந்த பாஜக கோவாவில் ஆட்சி நடத்தி வருகிறது. இதே நிலையில், கோவாவின் மாநில கட்சியான எம்ஜிபி என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மூன்று இடங்களை வென்றிருந்த நிலையில், அதில் இருவர் பாஜகவுக்குச் செல்ல, ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மட்டுமே அந்தக் கட்சி சார்பில் இருக்கிறார்.
கோவாவின் நெருக்கடியே இதுதான். அடிக்கடி கட்சி மாறுவது அந்த மாநிலத்தின் அரசியல் தலையெழுத்தையே மாற்றி வருகிறது. பா.ஜ.க கோவா மாநில தலைவர் தானந்த் ஷெட் தனவாடே, "தேவேந்திர பட்னாவிஸ் மிகவும் புத்திசாலி மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியும் கூட. ஏற்கெனவே, 2007, 2012-ல் கோவா தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அவருக்கு இங்கே நடக்கும் விஷயங்கள் புரியும். கட்சி மாறுதல் பிரச்னையை எப்படி கையாள்வது என்பதும் அவருக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார்.
கோவாவில் தற்போது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன், அவர்களை இழுக்க காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதேபோல் அரசியல் வாழ்க்கையில் 50 ஆண்டுகளை கடந்த முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானே பாஜகவில் சேர இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரை பட்னாவிஸ் அவர் வீட்டுக்கே சென்று சந்தித்து விருந்து உண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோகர் பாரிக்கர் இல்லாமல் பாஜகவின் முதல் தேர்தல்: பாஜகவை பொறுத்தவரை இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற முதல் காரணம், முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் இல்லாமல் அந்தக் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். பாரிக்கர் 2019 மார்ச் மாதம் இறந்தார். முன்னதாக அவர் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது கோவாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து மீண்டும் பாஜகவை கோவாவில் பலப்படுத்த மாநில அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இல்லாத நிலையில் தேர்தலை வென்றாக வேண்டிய நிலையில் பாஜக இருக்கிறது.
கோவா மாநில பாஜக தற்போது நம்பியிருப்பது முதல்வர் சாவந்த், பட்னாவிஸ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரைதான். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் கோவாவுக்கும் தனி இடம் இருப்பதாகச் சொல்கிறார்கள் அம்மாநில பாஜகவினர். 2002-ல் கோத்ரா கலவரத்துக்கு பிறகு குஜராத் முதல்வராக இருந்த மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்ந்தது. சொந்தக் கட்சிக்குள்ளே உயர்ந்த எதிர்ப்பை சமாளிக்க முதலில் உதவியது கோவாதான். கோவாவில் நடந்த கூட்டத்தின் மூலமாக முதன்முதலாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றார்.
இதேபோல், 2013-ல் கோவாவில் நடந்த மற்றொரு மாநாட்டில்தான் முதல்முறையாக 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தலைமைத் தேர்தல் பிரசாரகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதால் கோவா மீது மோடிக்கு தனிப் பாசம் உள்ளதாக சொல்கிறார்கள்.
காங்கிரஸுக்கும் ஏன் வெற்றி முக்கியம்? - கடந்த தசாப்தத்தில் நாடு முழுவதும் தனது கோட்டையை ஒவ்வொன்றாக இழந்து வரும் காங்கிரஸுக்கு கோவாவில் வெற்றி பெறுவது மூலம் அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். பாஜக கோவாவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னால் கோவா காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. 2017-ல் கூட தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியை பறித்தது. இதற்கு பழிவாங்கவும் கோவாவில் காங்கிரஸ் பெரும்பான்மை ஆதரவை பெறுகிறது என்பதை நிரூபிக்கவும் 2022 தேர்தல் முக்கியமானது.
ஆனால், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி சண்டை கட்சித் தலைமையை கவலைகொள்ளச் செய்கிறது. கோவா காங்கிரஸின் தலைமையை மாற்ற வேண்டும் என்று கட்சியின் பல மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். இது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனை மீறி காங்கிரஸ் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- மலையரசு
தகவல் உறுதுணை: The Print