Kerala Ayurveda Kerala Tourism
சிறப்புக் களம்

”ஆயுர்வேதத்தின் சொர்க்கம்” ஆயுர்வேத மருத்துவத்துக்கு கேரளா ஏன் இவ்வளவு பிரபலம் தெரியுமா?

கேரளாவின் தென்மேற்குப் பருவமழைக் காலம்தான் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதற்கு சரியான நேரம் என சொல்லப்படுகிறது.

Justindurai S

5,000 வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேதம் தோன்றியது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஆயுர்வேத சிகிச்சை தான் முக்கியமான மருத்துவ முறையாக இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்தது. தற்காலத்தில் இந்தியா முழுவதும் இம்மருத்துவ முறையின் மதிப்பு குறைந்து வந்தாலும், கேரளாவில் பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் வளர்ச்சி அடைந்தே வருகிறது. அதற்கு காரணம் கேரளாவின் தனித்துவமான நிலப்பரப்பு.

ஆயுர்வேதத்தின் சொர்க்கம் என்றுகூட கேரளாவைக் கூறலாம். ஆயுர்வேதத்தில் உலகில் வேறு எந்த நாடும் கேரளாவிற்கு நிகராக நிற்க முடியாது. அந்தவகையில் இதமான காலநிலை, இயற்கை மூலிகைகள் அதிகமாக கிடைப்பது போன்றவை கேரளாவிற்கு வரப்பிராசதங்களாக அமைந்துள்ளன. ஆகவேதான் இது புத்துணர்ச்சியை கொடுக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு சிறந்த இடமாக திகழ்கிறது.

Kerala Ayurveda

கேரளாவின் பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) தான் ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதற்கு சரியான நேரமாகும். இந்த சமயத்தில்தான் மழையும் குளிரும் சருமத்தில் உள்ள நுண்துளைகளை பெரிதாக்கி, நம் உடலில் மூலிகைச் சாறுகள் விரைவாகவும் முழுமையாகவும் இறங்கி தேவையான விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறதாம். மேலும் இந்தக் காலத்தில் தான் பகல் மற்றும் இரவு வேளைகளில் வெப்பநிலை ஒரேமாதிரி இருக்கிறது. ஆகையால் உடலுக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் போதும். அதுமட்டுமல்லாமல் மழை காலத்தில் மாசு ஏதும் இல்லாமல் இருப்பதும் சிகிச்சைக்கு பயனைத் தருகிறது.

ஆயுர்வேத சிகிச்சைக்காக மட்டுமே இந்தியாவிற்கு ஒவ்வொரு வருடமும் நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகிறார்கள். கேரளாவில் இந்தளவிற்கு ஆயுர்வேத சிகிச்சை வளர்ச்சி பெற்றதற்கு முக்கியமான காரணம் இங்கு நிலவுகின்ற இதமான காலநிலை, மருத்துவ மூலிகைகள் வளர்வதற்கு வசதியாக இயற்கையாகவே அமைந்துள்ள காடுகள் மற்றும் மலைகள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அனுபவமிக்க ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகியவையே.

Kerala Ayurveda

அஸ்டவைத்தியர்கள்:

பல நூற்றாண்டுகளாக கேரளாவில் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு சர்வலோக நிவாரணியாக ஆயுர்வேத வைத்தியர்களே (பாரம்பரிய முறையில் ஆயுர்வேத சிகிச்சையை பின்பற்றுகிறவர்கள்) இருந்தார்கள். இந்த வைத்தியர்கள் குறிப்பாக அஸ்டவைத்தியர்கள், தங்கள் தொடுகையின் மூலமே நோயை குணமாக்கும் வித்தையை கற்றிருந்தார்கள். கேரளாவில் இந்தளவிற்கு ஆயுர்வேதம் பலம் பெற்றதற்கு இவர்களின் சிகிச்சை முக்கிய காரணமாகும். அஸ்டவைத்தியர்களும் அவர்களுக்குப் பின் வந்தவர்களும் பல நூற்றாண்டுகளாக கேரளாவில் சிகிச்சையளித்து வருகிறார்கள். அதனால்தான் ஆயுர்வேதம் தொடர்பான பல நடைமுறைகள், விளக்கங்கள் கேரளாவை சுற்றியே வளர்ந்துள்ளன. இங்கு ஆயுர்வேதம் என்பது வெறும் மருத்துவ சிகிச்சை மட்டுமல்ல, அது தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகும். உண்மையில் இதுதான் கேரளாவின் வாழ்க்கை முறை.

பாரம்பரிய மருத்துவர்களான இந்த அஸ்டவைத்தியர்கள், அஸ்டாங்கஹிருதயத்தில் கூறப்பட்டுள்ள ஆயுர்வேதத்தின் எட்டு கிளைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள். ஆயுர்வேத சிகிச்சையின் மையமாக இன்று கேரளா இருப்பதற்கு இவர்களின் பங்கு அளப்பரியது. கேரளாவில் கிடைக்கும் அபரிதமான மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தி ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புற மருத்துவ நடைமுறைகள் இரண்டும் இணைந்து பல நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்றதே இந்த அஸ்டவைத்திய பாரம்பரிய சிகிச்சை. 18 அஸ்டவைத்தியர் குடும்பங்களில் இன்றும் கூட சில குடும்பங்கள் கேரளாவில் சிகிச்சையளித்து வருகிறார்கள்.

Kerala Ayurveda

சமஸ்கிருத பாரம்பரியம்

இயற்கை முறையிலான சிகிச்சை கேரளாவில் இந்தளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இங்கு ஆழமாக வேரூன்றியுள்ள சமஸ்கிருத பாரம்பரியம். அஸ்டவைத்தியர்கள் என அழைக்கப்படும் சில பிராமண வீடுகளில் ஆயுர்வேத முறையில் மருத்துவ சிகிச்சை அளித்தும் மற்றவர்களுக்கு குருகுல முறையில் ஆயுர்வேதத்தை கற்றுக் கொடுத்தும் வந்தார்கள். அஸ்டாங்கஹிருதயா தான் ஆயுர்வேதத்தின் முதன்மையான நூல் என பல பாரம்பரிய மருத்துவர்களும் கருதுகிறார்கள். பல நிபுணர்களால் இந்த நூலிற்கான விளக்கம் எழுதப்பட்டுள்ளது. பல சிகிச்சை முறைகள், மூலிகைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் இந்த நூலில் இருந்து தான் எடுக்கப்படுகின்றன. ஒரே கசாயத்தின் மூலம் பல நோய்களை விரட்டும் வித்தை இந்த வைத்தியர்களிடம் இருந்தது. கேரள வைத்தியர்களின் மற்றுமொரு முக்கியமான பங்களிப்பு பஞ்சகர்ம சிகிச்சை.

ஆயுர்வேதம், வெறும் மருத்துவ முறை மட்டுமல்ல. இதுவொரு அறிவியல் சார்ந்த வாழ்வியல். ஒருவர் ஆரோக்கியமான, சந்தோஷமான வாழ்க்கையை மனதளவிலும் உடலளவிலும் வாழ்வதற்கு எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பவற்றை ஆயுர்வேதம் விளக்குகிறது. நோய் வருமுன் காப்பதே மிகவும் முக்கியம் என்பதை ஆயுர்வேதம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது.

Kerala Ayurveda

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தை வாழ்வின் அறிவியல் என்று கூறலாம். இது உலகின் பழமையான மருத்துவ சிகிச்சை முறையாகும். மருத்துவம் மற்றும் தத்துவம் இணைந்ததே ஆயுர்வேதம். உலகிலுள்ள ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உடல், மனம் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது ஆயுர்வேதம். இன்று யாரும் மறுக்கமுடியாத, தனித்துவமிக்க மருத்துவ முறையாக ஆயுர்வேதம் வளர்ந்துள்ளது. நம் உடலில் உள்ள வாத, கபம், பித்தம் ஆகியவற்றை சரியான அளவில் வைத்துக் கொண்டாலே எந்த நோயும் வராது என ஆயுர்வேதம் கூறுகிறது. இதன் அடிப்படையில் நோய் வராமல் தடுக்கவே ஆயுர்வேதம் முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறது. நோய்க்கான சிகிச்சையை இரண்டாம் இடத்தில்தான் வைத்துள்ளது. வாத, கபம், பித்தம் ஆகிய மூன்று தோஷங்களில் ஏதாவது ஒன்று சரியான அளவில் இல்லவிட்டால் மட்டுமே நமது உடலில் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடலின் உள் உறுப்புகள் பாதிப்படைகின்றன. இந்த மூன்று தோஷங்களோடு பிரபஞ்சத்தின் முக்கிய கூறுகளான நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய ஐந்தும் ஒன்று சேர்ந்து நம் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கின்றன.