சிறப்புக் களம்

கேரள அரசியலில் புயலை கிளப்பிய பிஷப்பின் `போதை ஜிகாத்' கருத்து... என்ன நடந்தது?!

PT WEB

கத்தோலிக்க பிஷப் ஒருவரின் லவ் ஜிகாத் மற்றும் போதை ஜிகாத் கருத்துக்களால் மொத்த கேரள அரசியல் களமும் பரபரப்பில் இருந்து வருகிறது. அப்படி பிஷப் என்ன சொன்னார், சர்ச்சைக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக சற்றே விரிவாக பார்ப்போம்!

நமது அண்டை மாநிலமான கேரளம், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகிறது. கொரோனா ஒருபுறமென்றால், நிபா வைரஸ் மற்றொருபுறம் அம்மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த சுகாதார பேரிடருக்கு மத்தியிலும், மறைமாவட்ட பிஷப் ஒருவரால் கேரள அரசியல் களம் தகித்து கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் அரசியல் கொலைகளுக்கு பெயர்பெற்ற கண்ணூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பாலா மறை மாவட்டம். இதன் பிஷப், மார் ஜோசப் கல்லறங்காட் என்பவர் சில நாட்கள் முன் கோட்டயம் குருவிலங்காடு சபையில் உரை நிகழ்த்தினார்.

அப்போது ``கிறிஸ்தவ சமூகம் சமீப காலங்களில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. முஸ்லீம் அல்லாத பெண்கள், குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் காதலில் சிக்கி, மதமாற்றம் செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக, கத்தோலிக்க பெண்கள் லவ் ஜிகாத் மூலமாகவும், இளைஞர்கள் நார்க்கோட்டிக் ஜிகாத் (போதை ஜிகாத்) மூலமாகவும் மதமாற்ற வலையில் வீழ்த்தப்படுகிறார்கள். இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கேரளத்தில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். இதுபோன்றவர்கள் ஆயுதங்களை கொண்டு சண்டையிட முடியாத பகுதிகளில் தங்களின் சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர். எனவே இதுபோன்ற விஷயங்களில் கத்தோலிக்க குடும்பங்கள் கவனமாக இருக்க வேண்டும். மாநிலத்தில் நாம் இதற்கு முன்பு கண்டிராத அளவில் பிரச்னைகளும், நெருக்கடிகளும் வளர்ந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் (போதை ஜிகாத்).

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்தி மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பது எளிதல்ல என்பது ஜிகாதிகளுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்கள் இலக்கை அடைய வேறு வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இப்போதெல்லாம் கிறிஸ்தவ பெண்கள் பெரும்பாலும் இத்தகைய பொறிகளுக்கு பலியாகி வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், பிற பொது இடங்கள் மற்றும் நிறுவனங்களை ஜிகாதிகள் தங்கள் இலக்கை அடைய உதவும் இடமாக வைத்துள்ளனர் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

கேரளா மாநிலம், பயங்கரவாதிகளின் ஆள்சேர்ப்பு மையமாக மாறியுள்ளது என்று முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெஹரா கூறியிருந்தார். பயங்கரவாதத்தை உயர்த்திப்பிடிக்க, சில குழுக்கள் உலகத்தில் நீதியும், சமாதானமும், இஸ்லாத்தையும் நிலை நாட்ட யுத்தம் செய்ய வேண்டும் என மூளைச்சலவை செய்து வருகின்றனர். நான் கூறுவதை மறுத்து லவ் ஜிகாத் இல்லை என கூறுபவர்கள் அதன் மூலம் வேறுசில நன்மைகளை பெறலாம்" என்று பேசினார்.

வழக்கமாக இந்து அமைப்புகளும், பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சி நிர்வாகிகள் மட்டுமே பேசிவந்த லவ் ஜிகாத் பற்றிய கருத்துகள், தற்போது கத்தோலிக்க பிஷப் மூலமாகவும் வெளிப்பட்டுள்ளதால் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பிஷப்பின் இந்தப் பேச்சு, உடனடியாக கண்டனங்களை பெறத் தொடங்கியது. சி.பி.எம். கட்சியின்ன் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ, ``அடைப்படை ஆதாரமில்லாத பேச்சு இது. கேரளத்தில் நிலவி வரும் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் தகர்க்கும் நோக்கில் பிஷப் ஒருவரே இப்படி பேசியிருப்பது ஆபத்து நிறைந்தது. தனது பேச்சை பிஷப் உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று கூறியிருந்தது.

முதல்வர் பினராயி விஜயனோ, ``பொறுப்பான பதவிகளை வகிப்பவர்கள் மத பிளவுகளை ஏற்படுத்தக்கூடாது. போதைப்பொருள் ஜிகாத் வார்த்தையை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. போதைப்பொருள் பிரச்சனை ஒரு மதத்தை சார்ந்ததல்ல. இது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. நாம் அனைவரும் அதைப் பற்றி கவலைப்படுகிறோம். போதைக்கு மத நிறத்தை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பிஷப் எந்தக் காரணங்களைச் சொன்னார் அல்லது அவர் என்ன சொன்னார் என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று பேசியிருந்தார்.

இதேபோல் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டி.சதீசன், ``குற்றங்களுக்கு மதம், சாதி அல்லது பாலினம் இல்லை. இதற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை குற்றம் சாட்டுவது தவறு. சங் பரிவார் அமைப்புகளின் அஜண்டாவே போதை ஜிகாத் என்பதெல்லாம். இந்த நாட்டில் இருக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர்களை அகற்றுவதே லட்சியமாக கொண்டு அவர்கள் செயல்படுகின்றனர். இங்கு குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருக்கும் அவர்களை போன்ற சிலருக்கு இதுபோன்ற விஷயங்களை பேச வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது. மேலும் மத தலைவர்கள் தங்களின் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இஸ்லாமிய அமைப்புகள் பலவும் பிஷப்பின் பேச்சை கண்டித்து தற்போது போராட்டங்களில் இறங்கப்போவதாக அறிவித்து இருக்கின்றன.

எதிர்ப்புகள் இருக்கும் அதேநேரத்தில் பிஷப்புக்கு ஆதரவும் கிடைத்துள்ளது. அந்தவகையில் முதல் ஆளாக பாஜக பிஷப்பின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பாஜகவின் கேரள தலைவர் கே.சுரேந்திரன், ``பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைதான் பிஷப் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆளுங்கட்சியும், காங்கிரஸூம் இணைந்து அவரை தாக்கிவருகிறது. இரு கட்சிகளின் இந்த செயல், வாக்கு வங்கிக்காக மதவாத சக்திகளை இத்தனை காலம் ஊக்குவித்ததை தெளிவுபடுத்துகிறது. மேலும் அவர்களின் சகிப்பின்மையை வெளிப்படுத்துகிறது" என்றுள்ளார்.

பிஷப்பின் பேச்சை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக பாலா நகரம் முன்னெப்போதும் இல்லாத பேரணிகளை கண்டு வருகிறது. பல்வேறு முஸ்லீம் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறமும், பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளின் பிஷப்பு ஆதரவு பேரணி இன்னொருபுறமும் நடந்து வருகிறது. இவ்விரண்டில் கிறிஸ்தவ அமைப்புகளின் பேரணியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ விசுவாசிகள் கலந்துகொண்டனர். ஆளுங்கட்சியுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கேரள காங்கிரஸ் எனப்படும் மாணி காங்கிரஸ் நிர்வாகிகளும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். கேரள சமூகத்தின் சமூக அமைப்பில் அலைகளை உருவாக்கியிருக்கும் இந்த பேரணிகளால் பாலா நகரமும் கேரள அரசியல் களமும் பதற்றத்தில் இருந்து வருகின்றன.

தகவல் உறுதுணை - thenewsminute