பொத்தி பொத்தி பாதுகாத்து, அன்பு செலுத்தி வளர்ந்த பிள்ளைகள் காட்டுத்தீக்கு இரையாகியுள்ளனர். பெற்ற மகளின் இறப்பை தாங்க முடியாமல் கதறி அழுத தாயின் குரல் இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. 'எப்படி தான் என் புள்ள இந்த நெருப்ப தாங்கினாலோ' என கதறிய போது பார்பவர்கள் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இது ஒருபுறம் இருக்க தீயில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களின் கதறலை கூற வார்த்தைகள் இல்லை. திருமணமான புதுமண தம்பதி, திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன புதுப்பெண் என இறந்தவர்களின் கதையோ அதற்கும் மேல்.
காடுகளில் தீவிபத்து ஏற்படுவது சகஜம் தான். ஆனால் மலையேற்றத்திற்காக சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கும் அளவிற்கு ஆபத்தான நிலைக்கு சென்றது எப்படி. தேனி மலைப்பகுதியில் மலையேற்றத்திற்கு அரசு அனுமதி உள்ளதா?. மலையேற்றத்திற்கு சென்றவர்கள் உரிய பாதுகாப்புடன் சென்றார்களா?. அவர்களுடன் எத்தனை வழிகாட்டிகள் சென்றனர். அனுமதி பெற்ற மலையேற்றம் என்றால் தீவிபத்து ஏற்பட்ட போது வனத்துறையினர் விரைவாக செயல்படாதது ஏன்?. மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்த அமைப்பு இதற்கு முறையான அனுமதி பெற்றதா என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
வனத்திற்குள் மலையேற்றத்திற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள்
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், மலையேற்றத்திற்காக இரண்டு குழுக்கள் குரங்கணிக்கு வந்துள்ளனர். ஈரோட்டில் இயங்கும் டூட் டி இந்தியா ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் மூலம் 12நபர்களும், சென்னை ட்ரக்கிங் கிளப்பில் இருந்து 27 பேரும் வந்துள்ளனர். இவர்கள் காடுகளுக்குள் செல்ல எந்த அனுமதியும் வாங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் இயங்கும் டூட் டி இந்தியா ஹாலிடேஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரபு காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். “டூர் டி இந்தியா ஹோலிடேஸ்’ என்ற பெயரில் ஈரோடு திண்டலில் சுற்றுலா அலுவலகம் வைத்துள்ளேன். மார்ச் 10ஆம் தேதி நான் உட்பட 12 நபர்களுடன் சென்னிமலையில் இருந்து அருள் முருகன் டிராவல்ஸ் மூலம் தேனி வழியாக குரங்கணி பகுதிக்கு சுற்றுலா, மலையேற்றத்திற்காக சென்றோம். எங்களுடன் குரங்கணி மலைபகுதியை நன்கு அறிந்த ரஞ்சித் என்ற வழிகாட்டியும் உடனிருந்தார். சோதனை சாவடியில் ரூபாய் 200 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றோம். கொழுக்குமலையில் இரவில் தங்கியிருந்தோம். அங்கு சென்னையில் இருந்து வந்த சிலரும் எங்களுக்கு அருகில் கூடாரம் அமைத்து இருந்தார்கள். மார்ச் 11 ஆம் தேதி கொழுக்குமலையில் இருந்து குரங்கணிக்கு இறங்கினோம். மதியம் சுமார் 2மணியளவில் காட்டுத் தீ பரவுவதை அறிந்த ரஞ்சித் வேகமாக மலையை விட்டு இறங்க வேண்டும் என்றார். ஆனால் அசம்பாவிதமாக காட்டுத்தீ வேகமாக எங்களை நெருங்கியது. இதனால் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தோம். காட்டுத்தீ அணைந்த பின்னர் குரங்கணி நரிப்பட்டியில் உள்ள மக்கள் ,வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்டனர்.” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறையிடம் கேட்ட போது ஈரோட்டில் இருந்து வந்த குழுவினர் மட்டும் அனுமதி பெற்றதாக பேச்சை மாற்றினர். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இதேபோல் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க எவ்வாறு இவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்ற கேட்டபோது அதற்கும் அவர்கள் தரப்பில் ஒரு பதில் இருந்தது. மலையேற்றத்திற்காக வரையறுக்கபட்ட பாதையில் செல்லாமல் மாறி சென்றிருப்பார்கள் இதனால் இவர்கள் காட்டுத்தீயில் சிக்கி இருப்பார்கள் என்றனர். அவர்கள் பாதையில் இருந்து வெளியேறாமல் இருந்தால் தீயில் சிக்கியிருக்க மாட்டார்கள் என்றனர். குரங்கணியின் உச்சிவரை சென்று அதன் இயற்கை எழிலை கண்டு ரசிக்க தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் கொழுக்குமலை சென்று தங்கியுள்ளனர். இது தமிழகம் - கேரள எல்லைப்பகுதியாகும் அங்கு இருந்து அவர் மலையேற்றம் சென்றது அங்கீகரிக்கப்படாத பாதை என கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுவாக ஜனவரி மற்றும் மே மாதம் வரை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது. இது அனைத்து ரேஞ்ஜர்களுக்கும் தெரியும். வனத்துறையினர் மலையேற்றத்திற்கு அனுமதித்தார்கள், இல்லை என்பது குறித்து பிறகு பேசலாம். ஆனால் இதுபோன்ற மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்யும் ஏற்பட்டாளர்களுக்கு இந்த விஷயத்தில் அக்கறை வேண்டும்.அவர்களும் ஆபத்து குறித்து அறிந்திருக்க வேண்டும். இந்தக்காலக்கட்டத்தில் புற்கள் பசுமை இழந்து காணப்படும். இது ‘மஞ்சப்புல்’ என அழைக்கப்படும். இதுபோன்ற சமயத்தில் தீபற்றினால் அவை வேகமாக பரவும். புற்கள் பசுமையாக இருந்தால் தீ பரவ வாய்ப்பிருக்காது.
இந்த விபத்தில் சிக்கியவர்கள் செய்த முதல் தவறு அவர்கள் இந்த மஞ்சபுல் இருக்கும் பகுதியில் சென்றது.இதனால் இவர்கள் தப்பி செல்ல இடமிருந்திருக்காது. இதுபோன்ற மலையேற்றத்திற்கு செல்பவர்கள் 10 நபருக்கு ஒரு உள்ளூர் வழிகாட்டி என்ற விகிதத்தில் செல்ல வேண்டும். ஈரோட்டில் இருந்து வந்த குழு மட்டும் தான் ஒரு வழிகாட்டியுடன் வந்துள்ளனர். சென்னையில் இருந்து வந்தவர்கள் எந்த வழிகாட்டியும் இல்லாமல் தான் இருந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையை எவ்வாறு கையாளவேண்டும் என தெரியவில்லை என்றார். இந்த விபத்தில் உயிர்பிழைத்த பிரபு காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திலும் தீ பற்றியதும் நாங்கள் சிதறி ஓடினோம் என தெரிவித்திருந்தார்.
வனத்துறையில் 50% சதவீதத்திற்கு காலிப்பணியிடங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாதவர்கள் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தனியார் நிறுவனம் இவ்வாறு மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்வது முதல்முறையில்லை.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை ட்ரெக்கிங் அமைப்பு சார்பாக இங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவரை சேர்ந்த மென்பொறியாளர் கார்த்திக் என்பவர் சமூக
வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை ட்ரக்கிங் கிளப் முகநூலில் அளித்துள்ள விளக்கத்தில்,மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மலையேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், 27 பேர் கொண்ட மலையேற்றக் குழுவை வழிநடத்தி சென்ற நிஷா, திவ்யா, அருண் மற்றும் விபின் ஆகிய நால்வரும் அனுபவம் மிக்கவர்கள் என்று சென்னை டிரெக்கிங் கிளப் தெரிவித்துள்ளது. மேலும் உள்ளூரை சேர்ந்த வழிகாட்டி ஒருவரின் துணையுடன்தான் மலையேற்றம் நடந்ததாகவும் அந்த கிளப் கூறியுள்ளது.10 ஆண்டுகளாக இயங்கி வரும் சென்னை டிரெக்கிங் கிளப் வனத்துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர் இவ்விவகாரத்தில் அலட்சியமாக இருந்துள்ளனர். மாநில வனத்துறையின் எச்சரிக்கைக்கு செவிசாய்த்திருந்தால் இந்த நிலைமை தவிர்க்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய வனவியல் ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட செய்திகளை அவர்கள் புறக்கணித்துள்ளனர். தேனி மாவட்டம் போடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் 'வெப்ப ஒழுங்கின்மை' நிலவுவதாக இந்திய வனவியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் மலையேற்றத்திற்கு சென்றதை வனத்துறையினர் அறிந்திருந்தால் காலதாமதமாக நடவடிக்கை எடுத்தது ஏன். வனத்துறையினரின் மெத்தனப்போக்குக்கு என்ன காரணம்.தற்போது இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
SOURCE: https://goo.gl/w8fGr5