கர்நாடகாவில் இரண்டு பெண் குடிமைப் பணியாளர்களுக்கு இடையில் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ள மோதல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், கர்நாடக அரசியலையும் தாண்டி பலரையும் கவலைகொள்ளச் செய்தது.
கர்நாடகாவில் பெண் குடிமைப் பணியாளர்கள் மோதல்
அறநிலையத்துறை ஆணையரான ரோகிணி ஐஏஎஸ் அதிகாரி, அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக ஐபிஎஸ் அதிகாரியான ரூபா, தெரிவித்திருப்பதுதான் இந்த சலசலப்புக்குக் காரணம். புயலைக் கிளப்பிய இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட இருவருக்கும் கர்நாடக தலைமைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரோகிணி ஐஏஎஸ் அதிகாரியின் விவகாரத்தை வெளியுலகில் பூதாகரமாக்கியிருக்கும் ரூபா ஐபிஎஸ் யார்? அவர், இதற்கு முன் அவர் செய்த செயல்கள் என்ன?, யாரை எல்லாம் அவர் பந்தாடி இருக்கிறார்?, தன்னுடைய செயல்பாடுகளால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?, பலமுறை பந்தாடப்பட்டாலும் ஐபிஎஸ்ஸை நேசிப்பது ஏன்?... என அனைத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.
யார் இந்த ரூபா ஐ.பி.எஸ்.?
காவல் துறைக்கு வந்துவிட்டால் போதும், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் கொஞ்சம்கூட வளைந்துகொடுக்காமல், அரசியல்வாதிகளையும், அரசு உயர் அதிகாரிகளையும் பகைத்துக்கொண்டு அவர்களுக்கு நேர் எதிராய் நடப்பவர் என கர்நாடக மாநில மக்களால் சொல்லப்படுபவர்தான், இந்த ரூபா ஐ.பி.எஸ். இன்னும் சொல்லப்போனால், ”நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் வேண்டுமென்பார்” மகாகவி பாரதி. அந்த வரிகளுக்குச் சொந்தக்காரராய் மிளிர்பவர்தான் இந்த டி.ரூபா ஐ.பி.எஸ் என்கின்றனர், அவர்கள்.
இசை, நடனத்திலும் திறமை பெற்றவர் ரூபா
கர்நாடக மாநிலத்தில் உள்ள, அதாவது பெங்களூருவிலிருந்து 264 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாவணகரே மாவட்டத்தில் ஓய்வு பெற்ற இன்ஜினீயர் ஜே.எஸ்.திவாகர் மற்றும் ஹேமாவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் டி.ரூபா. இவருக்கு ரோகினி என்ற தங்கையும் உண்டு. அவரும் ஓர் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆவார். கர்நாடகா குவெம்பு பல்கலைக்கழகத்தில், தன் பட்டப்படிப்பை நிறைவுசெய்த டி.ரூபா, அதற்காக தங்கப் பதக்கத்தையும் வென்றார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்பில் மட்டுமின்றி, இசை, நடனம் ஆகியவற்றிலும் நன்கு திறமை பெற்றவர், ரூபா. பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அவர், கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில் ஓர் இசை வீடியோவை வெளியிட்டார். அதுமட்டுமின்றி, கர்நாடக திரையுலகில் பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார்.
யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 43வது இடம்
2000வது ஆண்டில் யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 43வது இடம் பிடித்த டி.ரூபா, ஆந்திர மாநிலம் ஹைதராபாத் சர்தார் வல்லபபாய் படேல் போலீஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கேயும் 5வது இடத்தைப் பிடித்த அவர், கர்நாடக கேடராக தேர்வு செய்யப்பட்டார். காவல் துறையில் சேருவதற்கு முன்பே காக்கி உடையை அதிகம் நேசித்தவர் டி.ரூபா. அவர் பள்ளிக்கூடத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும்போதே என்.சி.சியில் சேர்ந்தவர். பின்னர் காவல் துறையில் பயிற்சி முடித்தவுடனேயே ரூபா, வட கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
காவல் துறையில் டிஜிபி, டிஐஜி, சிறைத்துறை அதிகாரி, சைபர் துறை தலைமை அதிகாரி, போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி எனப் பல பொறுப்புகளை வகித்த ரூபா, தன்னுடைய பணிக்காலத்தில் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாரையும் விட்டுவைக்காமல் அவர்கள் செய்த தவறுகளை வெளிப்படுத்தியவர் என்ற பெயரை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
17 வருட பணிக்காலத்தில் 47 முறை மாற்றம்
குறிப்பாக, 2004ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரான உமாபாரதியை, நீதிமன்ற வழக்கு ஒன்றில் கைது செய்யும் வாய்ப்பைப் பெற்றார். அதோடு கர்நாடகாவில் பல்வேறு அரசியல்வாதிகளை கைதுசெய்து அன்றைய நாளேட்டுகளின் தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்தார், ரூபா. மேலும், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் முறைகேடான 8 SUV கார்களையும் பறிமுதல் செய்தார். அனுமதியின்றி அரசியல்வாதிகள் பயன்படுத்திய ஆயுதம் தாங்கிய காவலர்களை திரும்பப் பெற்றது எனப் பல்வேறு அதிரடி சம்பவங்களை செய்திருக்கிறார் ரூபா. இதன் காரணமாகவே அவர், தன்னுடைய 17 வருட பணிக்காலத்தில் 47 முறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
”நான் எப்போதும் வலிமையுடன்தான் இருக்கிறேன்”!
இது, அவருக்கு கடினமாகத் தோன்றினாலும், அதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை; பயப்பட்டதில்லை. இதுகுறித்து அவர் சொல்லும் பதில், ”எப்போதும் மனவலிமை முக்கியம். நான் எப்போதும் வலிமையுடன்தான் இருக்கிறேன். ஒருவரிடம் எதையும் மறைப்பதற்கு இல்லை என்றால், ஏன் பயப்பட வேண்டும். எனது லட்சியம் அப்படியே இருப்பதால், நான் நம்பிக்கையை இழக்கமாட்டேன். இந்த அமைப்பின் செயல்முறையை மாற்றுவது கடினம். ஆனால், அதிகாரமிக்கவர்கள் அதை மாற்ற முடியும் என நம்புகிறேன்.
என்னுடைய செயல்களால் நான் என்றாவது ஒருநாள் அரசியலில் சேருவேன் என சிலர் கூறுகின்றனர். அது நடக்க வாய்ப்பில்லை. இது, நான் விரும்பி நேசிக்கும் பணியாகும். எனக்கு பதவிகள் முக்கியமில்லை, எந்தப் பதவியிலும் நான் மிகவும் வசதியாக இருப்பதில்லை. என் பைகள் எப்போதும் நிரம்பியே இருக்கிறது. நான் எப்போதும் இப்படியே இருப்பேன். ஒருபோதும் சமரசத்திற்கோ, மாற்றத்திற்கோ ஆளாக மாட்டேன். காரணம், இது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. அதை வீணடிக்க மாட்டேன்” என்பதுதான்.
வி.கே.சசிகலா விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ரூபா
கர்நாடக அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் பகைத்துக் கொண்டு தம் பணியிலிருந்து கொஞ்சமும் விலகாத ரூபா, வெளியுலகத்துக்கு (குறிப்பாக தமிழகத்திற்கு) தெரியவந்தது மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழியான வி.கே.சசிகலா விஷயத்தில்தான். ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சிறையில் இருந்தபோது சட்ட விதிமுறைகளை மீறி அவர் சொகுசு வசதிகளைப் பெற்றதாகவும், இதற்காக சசிகலா ரூ.2 கோடியை லஞ்சமாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கியதாகவும், அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த டி.ரூபா வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவும் உறுதி செய்தது. இதன்மூலம் தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும் அவரது பெயர் அனைவராலும் முணுமுணுக்க ஆரம்பித்தது.
உள்துறைச் செயலாளராக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி
இந்த நிலையில், டி.ரூபா மீண்டும் ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கர்நாடக மாநில உள்துறைச் செயலாளராகப் டி.ரூபா பதவியேற்றதன் மூலம், அம்மாநிலத்தின் உள்துறைச் செயலாளராக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், இந்தப் பதவி அவருக்குக் கொஞ்ச காலமே நீடித்தது. பெங்களூரு காவல்துறை கூடுதல் ஆணையராக இருந்த ஹேமந்த் நிம்பல்கருக்கும் டி.ரூபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, கைவினைப் பொருட்கள் வளர்ச்சி துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார்.
அத்துறையின் ஆணையராக இருந்து வந்த ரூபா, ரோகிணி விவகாரத்தால் பொறுப்பு ஏதும் இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுபோல் ரோகிணியும் ரூபாவின் கணவர் முனிஷும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2003இல் ஐஏஎஸ் அதிகாரியான முனிஷ் மௌத்கிலை மணந்த ரூபாவுக்கு, அனகா மௌத்கில், ருஷில் மௌத்கில் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்திய குடியரசுத் தலைவர் விருதைப் பெற்ற ரூபா
இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக நடத்தப்பட்ட Discover Israel delegation நிகழ்வில் இந்திய பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட ரூபா, காவல் பணியில் தன்னுடைய சிறந்த சேவைக்காக 2016ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார். சைபர் துறை காவல் டிவிசனுக்கு பொறுப்பாக இருந்த இந்தியாவின் முதல் பெண்ணும் இந்த ரூபாதான்.
அவதூறு வழக்கை ரத்து செய்த கர்நாடக உயர்நீதிமன்றம்
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதில் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த சத்திய நாராயண ராவுக்கு தொடர்பு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்திருந்திருந்தார், டி.ரூபா. இதுதொடர்பாக, அவதூறு வழக்கைத் தொடர்ந்திருந்த சத்திய நாராயண ராவ், ரூபாவிடம் ரூ.20 கோடியை நஷ்டஈடாகவும் கோரியிருந்தார்.
கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய நாணயத்தின் ‘ரூபாய்’ மதிப்பைப் போலவே கர்நாடக மக்களிடமும், இந்த ரூபா ஐபிஎஸ் மதிப்பைப் பெற்றிருக்கிறார் என அம்மாநில மக்கள் அவருக்கு புகழுரை வழங்குகின்றனர்.
- ஜெ.பிரகாஷ்