சிறப்புக் களம்

இம்ரான் கான் உரைக்கு பதிலடியாக வெளுத்து வாங்கிய ஐஎஃப்எஸ் அதிகாரி சினேகா துபே யார்?!

இம்ரான் கான் உரைக்கு பதிலடியாக வெளுத்து வாங்கிய ஐஎஃப்எஸ் அதிகாரி சினேகா துபே யார்?!

PT WEB

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து பேசிய இந்திய ஐஎஃப்எஸ் அதிகாரியான சினேகா துபே நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அவரது பின்புலம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசும்போது, "எங்கள் நாடு இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது. அதேநேரம், காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண்பது மூலமே தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலவச்செய்ய முடியும்" என வழக்கம்போல் இந்தியாவை குறிவைத்து பேசினார். இந்தக் கூட்டத்தில் நேரடியாக இம்ரான் கலந்துகொள்ளாவிட்டாலும், அவரின் பேச்சு முன்பதிவு செய்யப்பட்டு வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. அந்த ஒளிபரப்பு பேச்சிலும், காஷ்மீர் விவகாரம், சிறப்பு பிரிவு நீக்கம் தொடர்பாக இந்தியா மீது அனலை கக்கினார்.

இம்ரானின் பேச்சுக்கு பதிலளிக்க ஐ.நா. சபையில் ரைட் ஆஃப் ரிப்ளை (Right of reply) எனப்படும் பதிலளிக்கும் உரிமையை இந்தியா கையிலெடுத்தது. வழக்கமாக, ஐ.நா.வில் பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை அடுக்கும்போது இந்தியா பதிலளிக்கும் உரிமை மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தமுறையும் அதே யுக்தியை கையாண்டது. இந்தமுறை இந்தியா சார்பில் பாகிஸ்தானையும் வறுத்தெடுத்தடுத்தவர் இந்திய முதன்மைச் செயலர் சினேகா துபே என்ற பெண் அதிகாரி.

அவர் தனது பேச்சில், "ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்து விட்டு, அத்தீயை அணைக்க முற்படுவது போல பாகிஸ்தானின் செயல் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஐ.நா போன்ற உலக சபைகளை தவறாக பயன்படுத்தி, பொய் மற்றும் திரிக்கப்பட்ட வதந்திகளை பாகிஸ்தானோ, பாகிஸ்தான் தலைவர்களோ பரப்புவது இது முதல்முறை கிடையாது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள், சாமானியர்கள் போல் சாதாரணமாக வாழ்வதை உலக நாடுகளின் பார்வைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சியாக இதுபோன்ற செயல்களை பாகிஸ்தான் தலைவர் செய்கிறார் என்பதை இங்கே வருத்தத்துடன் பதிவுசெய்து கொள்கிறேன்.

உலக அரங்கில் பொய்யை பரப்பும் பாகிஸ்தானின் அம்பலப்படுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது. காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான். உலகையே அதிரவைத்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் தந்தது பாகிஸ்தான்தான். அதை எந்த ஒரு நாடும் எப்போதும் மறக்காது.

பின்லேடன் போன்றொரு நபரை, பாகிஸ்தான் தியாகி போல் இப்போதுவரை சித்தரிக்கிறது. பாகிஸ்தான் அமைதியை மீட்பதற்கு நினைத்தால், அதற்கு முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமைதான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டுக்கொண்டுள்ளது. இதனால் உலகமே ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

தீவிரவாதிகளை உருவாக்குவது அவர்களுக்கு உதவி செய்வது மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயல்களை வரலாறாக கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது அனைவருக்கும் தெரியும். இதே ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் இருக்கும் நாடு என்ற சாதனையையும் பாகிஸ்தானே பெற்றுள்ளது" என்று வறுத்தெடுத்தார்.

நேர்த்தியான பேச்சு மற்றும் கடுமையான தொனி என அதிகாரி சினேகா துபே பேசியது ஐ.நா மன்றத்தில் இருந்து பாகிஸ்தான் பிரதிநிதிகளை அதிரவைத்தது மட்டுமில்லாமல், இந்திய நெட்டிசன்கள் புருவத்தையும் உயர்த்தியது. அவரின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுகளை பெற, இந்தியாவின் வைரல் அதிகாரியாக மாறியிருக்கிறார்.

யார் இந்த சினேகா துபே?

2012 பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான சினேகா துபே, சிறுவயதில் கோவாவில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பை அங்கேயே மேற்கொண்டவர், புனேயில் உள்ள பெர்குசன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இதேபோல் டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். சிறுவயது முதலே சர்வதேச பிரச்னைகளில் ஆர்வம் கொண்டிருந்தவர் சினேகா. இதுவே அவரை ஐஎஃப்எஸ் படிக்க தூண்டியிருக்கிறது. இதனை ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியவர், ``இந்திய வெளியுறவு சேவையில் சேரும் எண்ணம் எப்போதுமே என்னை ஊக்கப்படுத்திகொண்டே இருந்தது. உலகளாவிய விவகாரங்களில் இருந்த ஆர்வமே சர்வதேச விஷயங்களை இதற்காக என்னை படிக்கத் தூண்டியது" என்றிருந்தார்.

ஐஎஃப்எஸ் தேர்வான பிறகு சினேகா தனது முதல் பணியாக வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் அதிகாரியாக இணைந்தார். என்றாலும், 2014-ல் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பணிபுரிந்து வந்தவர், தற்போது இந்தியாவின் முதன்மைச் செயலாளராக ஐ.நா.-வில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் தான் ‘Right of Reply’ எனப்படும் `பதிலளிக்கும் உரிமை' மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு செல்ல, அதன்மூலம் பாகிஸ்தானை தனது பேச்சால் வெளுத்து வாங்கி தற்போது இந்தியா முழுவதும் அறியப்படும் நபராகி இருக்கிறார்.

- மலையரசு