சிறப்புக் களம்

மீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்?

மீண்டும் கனடாவின் 'கிங் மேக்கர்' ஆக இந்திய வம்சாவளி... யார் இந்த ஜக்மீத் சிங்?

PT WEB

கனடாவில் மீண்டும் ஆட்சியமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. பிரதமர் அரியணை ஏற இன்னும் 13 இடங்கள் தேவை இருக்கும் நிலையில், அவருக்கு கைகொடுத்து இரண்டாம் முறையாக 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங். இவரது பின்புலத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மூன்றாவது முறையாக தேர்தலில் தனது தலைமையில் அதிக இடங்களை கைப்பற்றியிருக்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில் 156 இடங்களை வென்றுள்ளது ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி. அதேநேரம் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்ற நிலையில், பிற கட்சிகளின் ஆதரவுடன், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ.

2019 தேர்தல் முடிவின்போதும் இதே நிலையை எதிர்கொண்டார் ட்ரூடோ. தற்போது வென்றுள்ள இடங்களைவிட 2019-ல் ஓர் இடம் அதிகமாக வென்றிருந்தார். அப்போது ஆட்சி அமைக்க 13 கூடுதலாக இடங்கள் தேவை என்ற நிலையில், ட்ரூடோவுக்கு கைகொடுத்தது ஓர் இந்தியர். புதிய ஜனநாயக கட்சியை வழிநடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்தான் ட்ரூடோ ஆட்சியமைக்க உதவினார். 2019 தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி 24 இடங்களை வென்றிருந்தது.

இந்த முறையோ, புதிய ஜனநாயக கட்சி 27 இடங்களை வென்றுள்ளது. இந்த முறையும் ஜக்மீத் சிங் உதவியைத்தான் ஜஸ்டின் ட்ரூடோ நாடவிருக்கிறார். அப்படி நாடினால் இரண்டாம் முறையாக இந்தியர் ஒருவர் 'கிங் மேக்கர்' ஆக இருந்து கனடாவில் ஆட்சி அமைக்க உதவுவார்.

யார் இந்த ஜக்மீத் சிங்?

`அகதிகளின் தேசம்' என வர்ணிக்கப்படும் நாடு கனடா. தங்கள் நாட்டுக்கு அகதிகளாக அல்லது புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு வாழ்வதற்கான உரிமையை மட்டுமல்ல, அரசியல் உரிமையும் கொடுக்கும் தேசம் கனடா. தங்களின் மகத்துவம் மிக்க இந்த செயலால் உலகளவில் கனடா தனித்து தெரிகிறது. இந்த செயல் பன்முக கலாசாரங்களை கனடாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் அதிகம் இருப்பவர்கள் இந்தியர்கள். அதிலும் சீக்கியர்களின் இரண்டாம் வீடாக கனடா உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா, ஓண்டாரியோ, ஆல்பெர்ட்டா, பிராம்ப்டன், டொரான்டோ, வான்கூவர் போன்ற பகுதிகளில் சீக்கியர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள்.

இவர்கள் பலரின் குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன்னதாகவே கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள். அப்படி 42 வருடங்களுக்கு முன்பு பஞ்சாப்பின் பர்னாலா மாவட்டத்தில் இருந்து கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்துக்கு புலம்பெயர்ந்தது ஜக்தரன் சிங், ஹர்மீத் கவுர் தம்பதியின் குடும்பம். இந்த தம்பதியின் மூத்த மகனே தற்போது கனடாவின் கிங் மேக்கராக உருவாகி இருக்கும் ஜக்மீத் சிங். ஆரம்பத்தில் தந்தையின் ஆலோசனைப்படி உயிரியல் படிப்பை முடித்த ஜக்மீத் சிங்கிற்கு சட்டம் பயில வேண்டும் என்பதே கனவு. அதன்படி, தந்தையிடம் தனது கனவை புரியவைத்து டொரான்டோவின் புகழ்பெற்ற யார்க் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை 2005-ல் முடித்த ஜக்மீத், அந்தப் பகுதியிலேயே குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.

தனது பணிகளுக்கு இடையே, டொரான்டோ பகுதி மக்களுக்காக இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி வந்தார். புலம்பெயர்ந்த மக்கள்மீது எப்போதும் ஒருவித பாசத்தோடு இருக்கும் ஜக்மீத், அந்நாளில் அம்மக்களுக்கான உரிமைகளை நீதிமன்றங்கள் மூலம் கிடைக்க உதவி வந்தார். இந்த இலவச சேவைகளே அவரை அரசியலில் நுழையத் தூண்டியது. வழக்கறிஞர் பணியில் மூன்று ஆண்டுகள் இருந்தவர், 2008-ல் புதிய ஜனநாயக கட்சியில் சேர்கிறார். கனடாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயக கட்சி அப்போது வளர்ந்து வரும் ஓர் அமைப்பாக இருந்தது.

ஜக்மீத் சிங்கின் பேச்சும், திறமையும் அவரை விரைவாகவே அரசியலில் நல்ல வளர்ச்சி காண வைத்தது. இதன் காரணமாக அரசியலில் நுழைந்த அடுத்த மூன்று ஆண்டுகளில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். 2011 பொதுத் தேர்தலில், பிரமேலியோ கோர் மல்டான் தொகுதியில் போட்டியிட்ட ஜக்மீத் சிங்கிற்கு வெற்றி கைகூடியது. இதே தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இந்த தருணம்தான் ஜக்மீத் சிங்கின் வாழ்க்கையில் ஏற்றம் மிகுந்த தருணம் எனலாம். ஒருபுறம் எம்பியாக பணிபுரிந்துகொண்டே, மறுபுறம் வழக்கம்போல் தனது இலவச சேவைகளையும், புலம்பெயர் மக்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பது என தீயாக உழைத்து கொண்டிருந்தார்.

அதேநேரம் ஆளுங்கட்சியின் குறைகளையும் தனது பேச்சுத் திறனால் அழுத்தமாக நாடாளுமன்றத்தில் முன்வைத்து பேச, சொந்த கட்சிக்குள் மிகப்பெரிய ஸ்டாராக வலம்வந்தார். இது பின்னாளில் வெகுவாக உதவியது. 2017-ல் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருக்கான தேர்தல். இதில் தலைவர் பதவியில் போட்டியிட்டார் ஜக்மீத். மக்களின் வாக்கெடுப்பு மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தத் தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். ஒருமுறை உரையாற்றிக்கொண்டிருந்த போதுக் கூட்டத்தில் இருந்த நபர் ஜக்மீத் சிங்கிற்கு கடும் குடைச்சல் கொடுத்து கொண்டிருந்தார். கூடவே புலம்பெயர்ந்தவர்கள் குறித்து வசைபாடிய அந்த நபருக்கு மிகப் பொறுமையாக, அதேநேரம் மிகச் சரியாக தனது வாதங்களில் பதில் கொடுத்தார் ஜக்மீத்.

ஜக்மீத் அப்போது கடைபிடித்த பொறுமையும், புலம்பெயர் மக்களின் வேதனைகளை சொல்லும் தெளிவான விளக்கமும் அடங்கிய அவரின் உரையாடல் வீடியோதான் கனடாவின் அப்போதைய வைரல். ஓவர் நைட் சென்சேஷனால் நாட்டின் பட்டிதொட்டி எங்கும் ஜக்மீத் பிரபலமானார். அதன் விளைவு, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களில் 53.6 சதவிகித வாக்குகளைப் பெற்று புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆகினார். வெள்ளையர் அல்லாத ஒருவர், கனடாவின் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவராக மாறியது அதுவே முதல்முறை. இங்கே கவனிக்கப்பட வேண்டியது ஜக்மீத்தின் குணம். தன்னை சீண்டிய நபரிடம் அவர் காண்பித்த பொறுமையான குணம்தான் அவரை மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்த்து.

இயல்பாகவே மக்களிடம் எளிதாக பழக்கூடிய ஒரு நபர். இதுவே அவர் அரசியலில் உயர ஏணிப்படியாக அமைந்தது. ஜக்மீத் தலைவராக பதவியேற்கும் முன் புதிய ஜனநாயக கட்சி துவண்டு கிடந்தது எனலாம். ஆனால், ஜக்மீத் அதனை தூக்கி நிறுத்தினார். அவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு 2019-ல் முதல்முறையாக பொதுத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் மற்ற கட்சிகள் செய்யும் வழக்கமான பிரசாரத்துக்கு நடுவில், இளைஞர்களை குறிவைத்து செயல்பட தொடங்கினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து இளைஞர்களை ஈர்க்கத் தொடங்கினார். இளைஞர்களுக்கு தேவையான கருத்துகளுடன் டிக்டாக் வீடியோவாக வெளியிடுவது என சுழன்ற ஜக்மீத் தலைமையில் துவண்டு கிடந்த புதிய ஜனநாயக கட்சி, புதிய பாய்ச்சலைக் கண்டு வருகிறது. இதனால் இரண்டாம் முறையாக கிங் மேக்கராக உருவாகி இருக்கிறார்.

இந்தியாவுடனான ஜக்மீத் உறவு!

இந்திய வம்சாவளி என்றாலும், இந்தியாவுடனான ஜக்மீத் உறவு என்பது மோசமான ஒன்றாக இருக்கிறது. தான் பிறந்தது முதல் கனடாவில் இருந்தாலும், சிறுவயதில் ஒரு வருடம் மட்டும் இந்தியாவில் கழித்திருக்கிறார். குழந்தைப் பருவத்தில் ஒரு வருடம் பஞ்சாப்பில் உள்ள தனது தாத்தா, பாட்டியுடன் வசித்திருக்கிறார் ஜக்மீத். அதுவே இந்தியாவுக்கும் அவருக்குமான அதிகபட்ச உறவு. அதன்பிறகு அவர் இந்தியா வரவில்லை. என்றாலும் பஞ்சாப் வரலாற்றில், சீக்கிய மக்களின் மனதில் கசப்பான சம்பவமாக நிலைகொண்டிருக்கும் 1984 சீக்கியர் படுகொலை, மத உணர்வு அதிகம் கொண்ட ஜக்மீத் மனதிலும் அதிக தாக்கத்தை கொண்டுள்ளது.

இது இந்திய அரசை எதிர்க்கும் அளவுக்கு அவரை கொண்டுச் சென்றுள்ளது. 1984 சீக்கியர் படுகொலையின்போது சீக்கிய குருத்வாராவில் கலவரத்தை முன்னின்று நடத்தியவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத். ஒருமுறை கமல்நாத் கனடா சென்றபோது, அவரின் வருகையை கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தினார் ஜக்மீத். இந்தப் போராட்டம் இந்திய அரசியல்வாதிகள் மத்தியிலும் அவரை அறியவைத்தது. அதேபோல் ஓண்டாரியோ பேரவையில் சீக்கிய கலவரத்தை இனப்படுகொலையாக அறிவிக்க கோரி தீர்மானமும் கொண்டு வந்திருக்கிறார்.

இந்திய அரசை தொடர்ந்து இந்த விவகாரத்தில் எதிர்த்து வரும் ஜக்மீத், காலிஸ்தான் ஆதரவு கூட்டங்களில் சிலவற்றிலும் பங்கேற்றதற்காக 2013-ம் ஆண்டு, இந்திய அரசு விசா வழங்க மறுத்தது. இதன்காரணமாக இந்தியாவுக்கு அவரால் வரமுடியவில்லை. இந்தியாவுடன் கடுமையான போக்கை கடைப்பிடித்து வரும் ஜக்மீத்தின் தாத்தா, ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி இந்தியா என்னும் நாடு சுதந்திரம் அடைய உதவிய புகழ்பெற்ற பஞ்சாப் புரட்சியாளர் சேவா சிங் திக்ரிவாலா என்பது காலத்தின் வினோதம்.

- மலையரசு

தகவல் உறுதுணை: Hindustan Times, Times Now News