சிறப்புக் களம்

மோடி முதல் ஓவைசி வரை... - உ.பி. தேர்தல் களத்தில் முக்கிய முகங்கள் யார், யார்?

மோடி முதல் ஓவைசி வரை... - உ.பி. தேர்தல் களத்தில் முக்கிய முகங்கள் யார், யார்?

PT WEB

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 2022-ஐ முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்களின் பிரசாரங்களை தொடங்கியுள்ளன. இந்த பிரசாரங்களை தாண்டி உ.பி. தேர்தல் களத்தில் முக்கிய முகங்களாகப் பார்க்கப்படும் தலைவர்கள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்குத் தயாராகி வருகின்றன. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் தனது சாதனைகளை முன்வைத்து வரும்போது, எதிர்க்கட்சிகளோ பாஜக ஆட்சியில் நடந்த குறைகளை முன்னிறுத்து பேசி வருகின்றன. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அரசு கொரோனாவை கையாண்ட விதம் முக்கியப் பிரசாரமாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரசாரங்களை தாண்டி தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய முகங்கள் இவர்கள்தான்:

பிரதமர் நரேந்திர மோடி: வழக்கமாக வடமாநிலங்களில் எங்கு தேர்தல் நடந்தாலும், அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாக்கம் இருக்கும். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியின் எம்பியாக இருப்பதால், மற்ற மாநிலத் தேர்தல்களை காட்டிலும், இந்த தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும், தாக்கமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இப்போது இருந்தே மோடி உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முக்கியவதும் கொடுக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்டபோது யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசினார்.

யோகி ஆதித்யநாத்தை புகழ்வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தை காண்பிக்கிறது. முக்கியவத்துவம் கொடுக்க மற்ற காரணங்களும் இருக்கிறது. உத்தரப் பிரதேச தேர்தலை கைப்பற்றுபவர்கள்தான் அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெறுவார்கள் என்ற கணிப்பால் இயல்பாகவே முக்கியவத்துவம் பெறுகிறது தேர்தல். மேலும், அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்த பிறகு உத்தரப் பிரதேச தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த தேர்தலில் இந்த விஷயங்கள் முக்கிய கோரிக்கைகளாக எதிரொலித்தன. இவை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதால் இது தேர்தலில் எப்படி எதிரொலிக்கப் போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மொத்தமாக வரவிருக்கும் உ.பி சட்டப்பேரவைத் தேர்தல் 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னால் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் புகழுக்கு ஒரு சோதனைக் களமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

யோகி ஆதித்யநாத்: பிரதமர் மோடிக்கு அடுத்து முக்கிய அரசியல் முகமாக இருப்பவர் யோகி ஆதித்யநாத். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக பெரும்பான்மை பெற்றபோது லிஸ்ட்டிலே இல்லாத யோகி ஆதித்யநாத் முதல்வராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் 1998 முதல் தொடர்ந்து ஐந்து முறை உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தவர் யோகி ஆதித்யநாத். முதல்வரான பின் அவரின் புகழ் மற்றொரு தளத்துக்குச் சென்றுவிட்டது. குறிப்பாக, பாஜகவில் வருங்கால பிரதமர் வேட்பாளர் என்றே சிலர் சொல்ல ஆரம்பித்தனர்.

குறுகிய காலத்தில் இந்தப் புகழை அடைய அவரின் தீவிர இந்துத்துவா கொள்கையும், அதிரடி நடவடிக்கைகளுமே காரணம். இந்த நடவடிக்கைகளுக்காக ஆரம்பத்தில் யோகி கொண்டாடப்பட்டவர், அதே காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாக சொந்த கட்சிக்குள்ளே சிக்கலை எதிர்கொண்டார். அவரை பதவியில் இருந்து தூக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. மோடிக்கும் யோகிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த சிக்கலில் இருந்து தன்னை நிரூபிக்கவும், வருங்காலத்தில் தந்தது அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கவும், தனது அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் என்ன வகையான வரவேற்பு இருக்கிறது என்பதை சோதிக்கும் தேர்தலாக யோகி இதனை பார்க்கத் தொடங்கியிருக்கிறார். அதற்கேற்ப தற்போது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார் யோகி.

அகிலேஷ் யாதவ்: சமாஜ்வாதி கட்சியின் (SP) தேசிய தலைவர்; 2012 - 2017 காலகட்டத்தின் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ். மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சி முகமாக அறியப்படுகிறார். 2017-ல் இழந்த ஆட்சியை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அகிலேஷ். கடந்த 300 நாட்களாக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வருவது போன்றவை அகிலேஷின் இமேஜை சற்று மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாஜகவுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய குடைச்சல் அகிலேஷ்தான்.

இதனால் இவர் மீது அனைவரின் கண்களும் திரும்பியிருக்கின்றன. கடந்த தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்தமுறை மாநிலத்தில் உள்ள சிறிய கட்சிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திக்க இருக்கிறார். ``நாங்கள் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் 350 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் மக்கள் பாஜக அரசு மீது கோபமாக இருப்பதால், நாங்கள் 400 இடங்களை வெல்லலாம்" என்று கூறியுள்ள அகிலேஷ், பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம் மாநில அளவில் சைக்கிள் யாத்திரையைத் தொடங்கியவர், இப்போது அடுத்தகட்ட பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.

மாயாவதி: உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான மாயாவதி, இந்தியாவின் முதல் பெண் பட்டியலின முதல்வர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். கடந்த சில ஆண்டுகளாக தனது அரசியல் வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருக்கும் மாயாவதி அதனை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக தனது கடந்த ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளை செய்யமாட்டேன் என்ற உறுதியுடன் மக்கள் மன்றத்தை நாடியிருக்கும் மாயாவதி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி என அனைத்துக் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் வெகுவாக இருக்கும் பட்டியிலன மக்களை மீண்டும் கவரும் முனைப்பில் இறங்கியிருக்கும் அவர், உத்தரப் பிரதேசத்தில் 10 சதவிகிதம் இருக்கும் பிராமணர்களுக்கு ஆதரவாகவும் செயல்படத் தொடங்கியுள்ள்ளார். அவரின் இந்த சாதி முன்னெடுப்பு மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மாயாவதியின் இந்தப் புது அவதாரம் அவரை தேர்தல் களத்தில் முன்னிலைப்படுத்தி வருகிறது.

பிரியங்கா காந்தி: உத்தரப் பிரதேசத்துக்காகவே அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டவர் பிரியங்கா காந்தி என்றால் மிகையல்ல. 2019-ல் தீவிர அரசியலில் நுழைந்தபோதே கிழக்கு உ.பி.-யின் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார். அப்போது இருந்து இப்போது வரை அவரின் முழு கவனமும் உத்தரப் பிரதேசம் மேல் மட்டுமே இருக்கிறது.

இந்தியாவின் வருங்கால அரசியல் முகங்களில் முக்கியமானவராக பார்க்கப்படும் பிரியங்கா, உத்தரப் பிரதேசத்துக்கு அடிக்கடி வருவது, மக்களுடன் நெருங்கிப் பழகுவது, போராட்டங்களில் கலந்துகொள்வது என அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனால் புதுயுக தலைவராக உருவெடுத்திருக்கும் பிரியங்கா உத்தரப் பிரதேச தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், கடந்த தேர்தலில் ஏழு இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸுக்குள் நிலவும் உட்கட்சி பிரச்னைகள் அவருக்கு ஒரு சோதனையாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற நெருக்கடிகளைத் தாண்டி தனது கட்சியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பிரியங்கா.

ஜெயந்த் சவுத்ரி: பிரியங்கா போல் உத்தரப் பிரதேச அரசியலுக்கு இவர் புது முகம் இல்லை என்றாலும், நிச்சயம் புதிய தலைமுறை அரசியல்வாதி ஆவார். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரன்தான் ஜெயந்த் சவுத்ரி. இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜெயந்த் சவுத்ரி, தனது தந்தையும் முன்னாள் எம்பியுமான அஜித் சிங் இறந்தபின்பு கட்சியை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். உத்தரப் பிரதேச இளைஞர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த கூடிய தலைவராக அறியப்படும் ஜெயந்த் சவுத்ரி, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம், மற்ற கட்சிகளை விட ராஷ்ட்ரிய லோக் தளத்துக்கு மிக முக்கிய சோதனையாக மாறியிருக்கிறது.

இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே வலுவாக இருக்கும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஜாட் இன மக்கள் அதிகம் கலந்துகொண்டுள்ள விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. ஜாட் இனத்தைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரியும் விவசாயப் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான ஜாட் வாக்கு வங்கியை பெறுவதில் தற்போது முன்னிலை வகிக்கும் ஜெயந்த் சவுத்ரி இந்தத் தேர்தலில் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் புதிய அவதாரம் எடுக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அசாதுதீன் ஓவைசி: ஹைதராபாத் எம்.பி-யான அசாதுதீன் ஓவைசி உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனது அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லீம் கட்சி (AIMIM) 100 இடங்களில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்திய அளவில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் சமீபத்தில் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து வருகிறார் ஓவைசி. இந்த தாக்கம் கடந்த சில தேர்தலாக எதிரொலித்தது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 20 இடங்களில் ஐந்து இடங்களை வென்றார். மேலும் சில மாநிலங்களில் இஸ்லாமிய மக்களை கவர்ந்து வருகிறார்.

உத்தரப் பிரதேசத்திலும் இருக்கும் அதிகப்படியான இஸ்லாமிய வாக்கு வங்கியை குறிவைத்து 100 இடங்களில் போட்டியிடுகிறது அவரின் கட்சி. இதற்காக கடந்த வாரம் அயோத்தியில் தொடங்கி மாநிலத்தின் பல பகுதிகளில் மூன்று நாள் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது யோகிக்கும், அவருக்கும் எழுந்த வார்த்தைப் போர் கவனிக்கப்படக் கூடியதாக இருந்தது.

சந்திரசேகர் ஆசாத்: உத்தரப் பிரதேச பட்டியிலன மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரும் தலைவராக உருவெடுத்து வருபவர் சந்திரசேகர் ஆசாத். இரண்டு ஆண்டுகள் முன்பு, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜும்மா மசூதியில் நடந்த பேரணியில் அரசியலமைப்பின் நகலையும் அம்பேத்கரின் புகைப்படத்தையும் கையில் ஏந்திக்கொண்டு கலந்துகொண்ட பின் பொதுவெளியில் பிரபலமான நபராக அறியப்படும் சந்திரசேகர் ஆசாத், மேற்கு உத்தரப் பிரதேசமான சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.

உ.பி தேர்தல் களத்தில் முக்கியமான மற்றொரு இளம் அரசியல்வாதியாக அறியப்படுகிறார். லட்சக்கணக்கான உத்தரப் பிரதேச பட்டியலின இளைஞர்களின் புதுயுக தலைவராக உருவெடுத்து வருகிறார் சந்திரசேகர் ஆசாத். குடியுரிமை போராட்டங்களுக்கு பிறகு பாஜக அரசை கடுமையாக எதிர்த்தும் வருகிறார். சில ஆண்டுகள் ஆசாத் சமாஜ் கட்சி என்ற அரசியல் கட்சியையும் நிறுவி, தேர்தல் அரசியலிலும் இறங்கியுள்ளார்.

பட்டியிலன மக்கள் மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாற்றாக உருவெடுத்து வரும் இவரின் கட்சி, 2019-ல் கட்சி ஆரம்பித்த பிறகு புலந்த்ஷகார் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதல்முறையாக களம்கண்டது. இந்த தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், 10,000 வாக்குகளுக்கு மேல் பெற்று புலந்த்ஷகார் சட்டப்பேரவை தொகுதியில் தனது இருப்பை உணர்த்தியது. இதன்பின் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் ஆசாத் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மேற்கு உ.பி.யில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வென்றனர். இந்த வெற்றி அவரின் கட்சித் தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இதனால் மற்ற கட்சிகளை விரைவாகவே பிரசாரத்தை தொடங்கியிருக்கிறது ஆசாத் சமாஜ் கட்சி. ஏற்கெனவே மாநிலம் முழுவதும் தனது சைக்கிள் பேரணி பிரசாரத்தை நடத்தி வரும் சந்திரசேகர் ஆசாத் இம்முறை தேர்தலில் நிற்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆசாத் கட்சியின் முக்கிய கவனம் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ளது என்றாலும், அவருக்கான செல்வாக்கு பகுஜன் சமாஜ் கட்சியை வெகுவாக பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- மலையரசு