சிறப்புக் களம்

வாட்ஸ்அப்பிலும் வருகிறது மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி! ஆனால் 2 சிக்கல் இருக்கிறதாம்..!

வாட்ஸ்அப்பிலும் வருகிறது மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி! ஆனால் 2 சிக்கல் இருக்கிறதாம்..!

ச. முத்துகிருஷ்ணன்

வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய மெசேஜ்களை தவறுதலாக அனுப்பிவிட்டால் அதை திருத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த வசதி வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்பிய பிறகு அவற்றைத் திருத்துவதற்கான வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. பயனர்கள் தங்கள் மெசேஜ்களில் உள்ள தட்டச்சுப் பிழைகளை நீக்க இனி அந்த மெசேஜை முழுமையாக டெலிட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தவறான மெசேஜ்களை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. சோதனை முடிந்தபிறகு தொழில்நுட்ப ரீதியிலான பிழைகள் நீக்கப்பட்டு அனைத்து பயனர்களுக்கும் எடிட் வசதி வழங்கப்படும்.

ஆனால் வாட்ஸ்அப்பில் வழங்கப்படும் இந்த எடிட் வசதியில் இரு சிக்கல்கள் இருக்கின்றன. அனுப்பிய மெசேஜை எடிட் செய்த பின் அந்த மெசேஜில் “Edited" என்ற லேபிள் தோன்றும். இதை அந்த மெசேஜைப் பெறும் பயனரும் பார்க்க முடியும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதே வேளையில் மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் மட்டுமே அதை எடிட் செய்ய இயலும். அதன்பின்னர் அதை எடிட் செய்ய வாய்ப்பில்லை என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பீட்டா வெர்ஷன் சோதனைக்கு பிறகு ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு மட்டும் இந்த எடிட் வசதி வழங்கப்படும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த எடிட் வசதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகவில்லை.

ஒரு முறை மட்டுமே ஒரு மெசேஜை திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ட்விட்டரில் சில நாடுகளில் மட்டும் அறிமுகமாகியுள்ள எடிட் வசதியில் ஒரு பதிவை 5 முறை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்பின் எடிட் வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ட்விட்டர் தளத்தில் அனைத்து பயனர்களுக்கும் எடிட் வசதி வழங்கப்படவில்லை. தற்போது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள ட்விட்டர் புளூ டிக் வசதி கொண்ட பயனர்களுக்கு மட்டும் ட்வீட்களைத் திருத்தும் விருப்பத்தை ட்விட்டர் வெளியிடத் தொடங்கியுள்ளது.

இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் புளூ டிக் பயனர்களுக்கு மட்டும் இந்த எடிட் வசதி இன்னும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.