சிறப்புக் களம்

விமான விபத்து : கருப்பு பெட்டியின் வேலை என்ன ?

விமான விபத்து : கருப்பு பெட்டியின் வேலை என்ன ?

webteam

கடவுளின் தேசம் எனப்படும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு துபாயில் இருந்து வந்த ‘ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது. 35 அடி ஆழத்தில் விழுந்து விமானம் உடைந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 18 பேர் இறந்தனர்ர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் குவிந்த மக்கள் மீட்புப் பணிக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது, விபத்துக்காண காரணம் என்பதை ஆய்வு செய்ய, விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் உண்மைகள் வெளிவரும் என நம்பப்படுகிறது. இந்த விமான விபத்து அல்ல அனைத்து விமான விபத்துகளிலும் காரணத்தை கண்டறிய பயன்படும் முக்கிய அம்சமாக கருப்புப் பெட்டி விளங்குகிறது. கடலில் விழுந்து காணாமல் போன விமானங்களை தேடும்போது கூட, முதலில் கருப்புப் பெட்டியை தான் தேடுகின்றனர். இந்த கருப்புப் பெட்டி அப்படி என்ன தான் செய்யும் ? என்பதை காணலாம்.

‘கருப்புப் பெட்டி’ என்பது இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை பதிவு செய்யும் ஒரு கருவியாகும். விமானம் எத்தகைய கோர விபத்துக்கு உள்ளானாலும், முழுவதுமாக வெடித்து சிதறினாலும், இந்த கருப்புப் பெட்டி மட்டும் எதுவும் ஆகாமல் அப்படியே இருக்கும். அவ்வளவு பாதுகாப்பான முறையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் வால் போன்று இருக்கும் பகுதியின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கருப்புப் பெட்டி, உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஒரு விமானத்தில் மட்டும் மொத்தம் 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும். இதில், “பிளைட் டேட்டா ரெகார்டர்” என்ற கருப்புப் பெட்டி விமானம் பறக்கும் நேரம், வேகம், உயரம், திசை உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்துகொண்டிருக்கும். “வாய்ஸ் ரெகார்டர்” என்ற மற்றொரு கருப்புப்பெட்டி, விமானத்தை இயக்கும் விமானிகள் பேசிக்கொள்ளும் உரையாடல்களைப் பதிவு செய்யும். இதன்மூலம் கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும் அறிய முடியும்.

எந்த நிலையிலும் அழியாமல் இருக்கும் இந்த கருப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிகா, டைட்டானியம், ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ஆகியவை இணைந்த கலவையால் உருவாக்கப்பட்டிருப்பது தான். விமானம் விபத்திற்குள்ளான பிறகு கருப்புப் பெட்டி ஒரு ‘பீப்’ சத்தத்தை எழுப்பிக்கொண்டே இருக்கும். இந்த சத்தத்தை வைத்து அதனை எளிமையாக கண்டுபிடிக்கலாம். 2000 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கக் கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கும். அத்துடன் 2 டன் எடையுடைய பொருள் இதன் மீது விழுந்தாலும், சுமார் 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் இந்த கருப்புப் பெட்டி எதுவும் ஆகாது.