சிறப்புக் களம்

சுகாதாரத்துறை, கல்வித்துறையில் ஸ்டாலின் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன?

சுகாதாரத்துறை, கல்வித்துறையில் ஸ்டாலின் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன?

webteam

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் மே 7 ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் அவர் முன்சவால்கள் குறித்து அலசுகிறது இந்தக்கட்டுரை..

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களின் தேவைகள் குறித்து மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் கூறும் போது, “ கொரோனா பரவல் நிச்சயம் புதிய அரசிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். தற்போது மத்திய அரசு நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்துள்ளது. இந்தத்தேர்வை மாநில அரசுகளே எடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை சட்டசபையில் சட்டமாக இயற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். உயர்தரப்பு கல்வி இடங்களில் முழுமையாக நாம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.

கொரோனாவை வெல்லும் பெரும் ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில் மத்திய அரசு நமக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்காமல் இருக்கிறது. ஆகையால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்களிலேயே தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். கொரோனா 2 வது அலை சங்கிலியை உடைப்பதற்கு 14 நாட்கள் அடங்கிய ஊரடங்கு அவசியம் என நினைக்கிறோம். அந்த நாட்களில் தடுப்பூசி பணி தடைப்படக் கூடாது.

காரணம் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போதே 90 சதவீத மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. குணமடைந்து வருவோர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இவையெல்லாவற்றிற்கும் நிதி அவசியம். ஆகையால் அதனை மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியை பெற வேண்டும். நன்கொடை அளிப்பவர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

கல்வித்துறை

கல்விதுறையில் உள்ள சவால்கள் குறித்து பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும் போது, “ முதற்கட்டமாக மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை புதுப்பிக்க வேண்டும். இந்த ஊரடங்கு காலங்களில் மாணவர்களின் கல்விகற்கும் வேகம் குறைந்துள்ளது. பாடத்திட்டங்களைத் தாண்டி குழந்தைகளுக்கு பிடித்தவற்றை இணைத்து நாம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள பல மாணவர்கள் கல்வியை பாதியில் நிறுத்தும் சூழ்நிலையும் நிலவுகிறது.அதனை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

மருத்துவமனைகளில் நிலவும் சிக்கல்களை எதிர்கொள்ள நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதில் ஐஐடி, அண்ணா பல்கலை மாணவர்களை புகுத்த வேண்டும். மாணவர்களின் பாடப்பிரிவை பொறுத்து, அவர்களுக்கு களப்பணியை வழங்கினால் களத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்க அவர்கள் பெரும் உதவியாக இருப்பார்கள்.

நீட் தேர்வு எந்த விதத்திலும் கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை. அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. ஆதலால் அதனை ரத்து செய்யவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.” என்றார்.