ஊரடங்கில் பெருமளவிலான தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் மீண்டும் வெளியே செல்லத்தொடங்கும் இந்த நிலையில், தங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்?
மருத்துவர் சென்பாலன் தரும் ஆலோசனைகள் இங்கே..
‘’ஆறு மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் ஆரம்பித்தபோது அதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் அவசர அவசரமாக உலக நாடுகள் கையில் எடுத்த ஆயுதம் தான் ஊரடங்கு. ஊரடங்குடன் சோதனை, சிகிச்சை, மருத்துவ வசதி, ஆராய்ச்சி, விழிப்புணர்வு, மாற்று நடவடிக்கைகள், பொருளாதார ஊக்கம் எனப் பலவற்றை இணைத்து சிறப்புடன் செயலாற்றிய பல நாடுகள் கொரோனா தொற்றின் தீவிர பாதிப்பில் இருந்து வெளியே வந்துள்ளன.
பிப்ரவரி மாதம் அதிக தொற்றுகளுடன் இருந்த ஐக்கிய அரபு அமீரகம் இன்று ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடிய அளவு உறுபிணியை வென்றுள்ளது. அண்டை நாடான இலங்கையில் இதுவரை மொத்தமே 3015 கொரோனா நோயாளிகள், 12 கொரோனா மரணங்கள் தான். சென்னை எனும் ஒரு நகரத்தின், ஒருநாள் மரண எண்ணிக்கையே இதைவிட அதிகமாக உள்ளது.
ஊரடங்கை மட்டுமே நம்பாமல் அதை ஒரு தள்ளிப் போடும் முயற்சியாக மட்டும் நினைத்து செயல்பட்டு கொரோனாவை வென்ற நாடுகள் என்ன செய்தனர்?
சோதனைகளை அதிகப்படுத்தினர். நோயுற்றவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். மக்கள் பொதுவெளிகளில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை நடைமுறைச் சாத்தியங்களோடு வகுத்தனர், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இவை அனைத்திற்கும் தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்கினர், மக்கள் முடக்கத்தை சமாளிக்கும் வகையில் பொருளாதார உதவி அளித்தனர், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்தனர். அறிவியல் முறைப்படி மூட நம்பிக்கைகளை நம்பாமல் உறுபிணியை எதிர்த்துப் போரிட்டனர்.
இந்தியா போன்ற வறிய, அதிக மக்கள்தொகையும், நெருக்கமும் கொண்ட நாடுகளில் கொரோனா போன்ற நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மற்ற எந்த நாடுகளையும் விட கடுமையாக உழைத்தால்தான் நாம் இவற்றை வெல்ல முடியும். இனிமேலும் ஊரடங்கை பின்பற்றுவதற்கு நம் பொருளாதாரம் ஒத்துழைக்க மறுக்கும் நிலையில் தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
கோட்டைக்குள் பதுங்கிப் போரிட்ட நாம் இனி கோட்டைக்கு வெளியே வந்து எதிரியுடன் நேருக்கு நேர் மோதும் நிலையில் உள்ளோம்.
லாக் டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இந்நேரம் முன் எப்போதையும் விட நம் மக்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் ஆகும்’’ என்கிறார் அவர்.