கோடை கொளுத்த ஆரம்பித்துவிட்டது. கடந்த சில மாதங்களாக மூடி வைத்திருந்த குளிர்சாதப் பெட்டியின், குளிரூட்டியை வேகவேகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிடுவோம். இனிமேல் தாகம் எடுத்தால் ‘ஜில்ஜில்’ தண்ணீர் கேட்கும். உடம்புக்குப் போற்றிக் கொள்ளப் போர்வை தேவை இருக்காது. நன்றாகக் குளிரூட்டப்பட்ட அறை கேட்கும் உடம்பு. தகிக்கும் வெயிலை விரட்ட நாம் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பிப்போம். ஆனால் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷங்களை மறந்துவிடுவோம். ஆகவே கோடைக்கு ஏற்ற சில முன்னெச்சரிக்கையை நாம் மேற்கொள்வது நல்லது.
முதலில் பல மாதங்களாக மூச்சுப் பேச்சு இல்லாமல் மூடி வைத்திருந்த ஏர்கண்டிஷன் பெட்டியை உபயோகிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த சில மாதங்களாக மழை மற்றும் குளிர்காலம் நிலவியதால் நாம் குளிர்சாதன உபகரணங்களை எல்லாம் பயன்படுத்தாமல் இருந்திருப்போம். ஆகவே அந்த மின்சாதன உபகரணங்களில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கலாம். குறிப்பாக ஏசி பெட்டியாக இருந்தால், சில மாதங்களாக இயக்கப்படாமல் இருந்ததால் அதில் உள்ள வயர்களை எலி ஏதாவது கடித்து வைத்திருக்கலாம். அல்லது எலி, பூனை உள்ளிட்ட ஜீவராசிகள் ஏதாவது குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கலாம். அந்த எலி ஏதாவது துணியைக் கொண்டு போய் பேன் இறக்கையில் சுற்றி வைத்திருக்கலாம். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் ஏசியை மீண்டும் இயக்க தொடங்கும் போது துணியானது மேலும் வலுவாகச் சுற்றிக் கொள்ளும். அதனால் அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பாக ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மேலும் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஏசியை, கோடை காலம் வந்ததால் உடனே இயக்கக் கூடாது. அதில் உள்ள குளிரூட்டும் பகுதியில் பூஞ்சைகள் உருவாகி இருக்கும். செப்பு காயிலில் பூஞ்சை பச்சையாக படிந்து இருக்கும் போது அதனை நாம் அகற்றாமல் பயன்படுத்தும் போது அவற்றை ஏசியில் உள்ள காற்றுருளை அப்படியே இழுத்து அறைக்குள் கடத்தும். அந்தக் காற்றைச் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒவ்வாமை வரலாம். மூச்சுத் திணறல் கூட வரலாம். தோல் பிர்ச்னைகள் உண்டாகக் கூட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆகவே அந்தப் பூஞ்சைகளை அகற்றிய பின் பயன்படுத்துவது உடல் ஆரோகியத்திற்கு நல்லது.
ஆகவே முறையாக, செப்பு காயில் பகுதியில் படிந்துள்ள பூஞ்சையை நீர் கொண்டு அலசி சுத்தம் செய்வதற்கு என்று மெக்கானிக் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து அதனைக் கழுவி அகற்றிய பிற்பாடு நீங்கள் பயன்படுத்து சிறந்த வழி. குறைந்தது இதனைச் சுத்தம் செய்வதற்கு ரூ 500 வரை ஆகலாம். அதை செலவழிப்பதற்கு தயங்கி, வேறு உபாதைகளை வாங்கிக் கொள்ள வேண்டாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
இவை தவிர வேறு ஒரு விஷயம் மிகமிக முக்கியமானது. ஏசி பெட்டியில் உள்ள கம்ப்ரசர் மோட்டார் உள்ளே குளிரை உருவாக்குவதற்காக ஒருவிதமான வாயு நிரப்பப்பட்டிருக்கும். அந்த வாயு சில மாதங்களாக ஓடாத மோட்டார் பகுதியில் அழுந்திக் கொண்டிருக்கும். அதனை உடனடியாக மீண்டும் இயக்க தொடங்கும் போது compressor இல் அழுத்தம் நிரம்பி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் மோட்டார் எரிந்து போகவும் வாய்ப்பு உண்டு. மின் இணைப்பு மீண்டும் கிடைத்தவுடன் ஏற்படும் அழுத்தத்தால் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகி எரிந்தும் போகலாம். ஆகவே முறையான ஆட்கள் வந்து பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துவது மிகமிக நல்லது. இதே போன்ற பிரச்னைகளால் குளிரூட்டி வெடித்து இதற்கு முன் சில உயிரிழப்புகள் கூட நடந்துள்ளன. அதனை மனதில் வைத்து எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
இதைவிட பெரிய விஷயம். மின்சாரம் பல மாதங்கள் வரை ஏசியில் பாயாமல் இருப்பதால் அதனையொட்டி ஏதேனும் பிரச்னைகள் உருவாகி இருக்கலாம். அதனையும் யோசித்து பழுது நீக்கிக் கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.