லோக்பால் உறுப்பினர்களை நியமிக்க எடுத்த நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் விரைவில் கூட்டம் நடக்க உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இத்தோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. லோக்பால் கடந்து வந்த பாதை என்ன?
'லோக்பால்' என்னும் சொல்‘லஷ்மி மால் சிங்வி’ என்ற பாராளுமன்ற உறுப்பினரால் உருவாக்கப்பட்டது. 'லோக்' என்றால் மக்கள் என்றும் 'பலா' என்றால் மக்களை காப்பவர்கள் என்றும் சமஸ்கிருதத்தில் அர்த்தம். ஊழல் மற்றும் லஞ்சத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் அரசு உயர் அதிகாரிகளும் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டது. லோக்பால் மசோதா பாராளுமன்ற மக்களவையில் முதன்முதலில் 1968 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவையின் 4ஆவது அமர்வு முடிவடைந்ததால் லோக்பால் மசோதா காலாவதியானது.
பின்னர் 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. இரு அவைகளிலும் லோக்பால் மசோதாவை நிறைவேற வைப்பது கடினமாக இருந்தது. 2011ம் ஆண்டு ஏப்ரலில் லோக்பால் அமைப்பைக் கொண்டுவர வலியுறுத்தி டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, லோக்பால் அமைப்பதாக உறுதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா டிசம்பர் 22, 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது, அது 27 டிசம்பர் 2011ல் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா டிசம்பர் 29, 2011ல் நிராகரிக்கப்பட்டது.
பின்பு 21 மே 2012ல் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்த பின் மாநிலங்களவையில் இம்மசோதா 17 டிசம்பர் 2013 ல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 18 டிசம்பர் 2013 ல் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவின் மூலம் மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் அடுத்த ஓராண்டுக்குள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் அவை இன்னும்கூட நாடெங்கும் அமைக்கப்படவில்லை.
மேலும் லோக்பால் சட்டத்தின் 44-வது பிரிவின்படி, பொது ஊழியர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் – ஆனால் அந்தப் பிரிவு 2016ல் திருத்தப்பட்டு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. தொடரும் தாமதத்தினால்‘உரிய காலத்தில் மத்தியில் லோக்பாலையும், மாநிலங்களில் லோக் அயுக்தாவையும் ஏன் அமைக்கவில்லை?’ – என்று உச்சநீதிமன்றம் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றது. பலமுறை கெடுவையும் விதித்து உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இல்லை, சட்ட வல்லுநரை நியமிப்பதில் சிக்கல் – என்றெல்லாம் தொடர்ந்து விளக்கங்களைக் கொடுத்துவந்த மத்திய அரசு, இப்போது லோக்பால் உறுப்பினர் நியமனம் குறித்து கூட்டம் நடக்க உள்ளதாகத் தெரிவித்து உள்ளதால் விரைவில் லோக்பால் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.