சிறப்புக் களம்

“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?

“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?

webteam

 நீதிமன்றத்தில் தொடர்ச்சியான உத்தரவுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக  பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 5 நாட்களாக மனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையிதான் நாளையுடன் கடைசி நாள் நிறைவடைய உள்ளது. 

இந்தத் தேர்தலில் 1 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 528 பெண்களும், 1 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்து 778 ஆண்களும் ஆயிரத்து 635 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்களர் எண்ணிக்கை நிலவரப்படி பார்த்தால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் உள்ளனர் எனத் தெரிகிறது. ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பதவிகளில் அந்தளவுக்கான பெண்களின் பங்கு உள்ளதா என்றால் அது கேள்விக்குறிதான். சட்டமானது பதவிகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமையை அளிக்க சொல்கிறது.

அதாவது, 50க்கு 50 சதவீதம் இருபாலரும் சமமாக தேர்தலில் பங்களிப்பு செய்ய வலியுறுத்துகிறது. இந்த நிலை இன்னும் இந்தியாவில் உருவாகவில்லை. சரிசமமாக கூட வரவில்லை என்றாலும் கணிசமான அளவுக்குக்கூட பெண்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. பெண்கள் நிலையை போலவே பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது என்பது நிறைவேறாத கனவாகவே உள்ளது. இந்தப் போதாக் குறைகள் குறித்து பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அரசியல் கட்சிகளில் அதை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதில்லை. ஆகவே பெண்கள் பங்களிப்பும் பட்டியலின மக்களின் பங்களிப்பும், பெயர் அளவில் மட்டுமே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களின் கவலையை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். 

இந்த இடர்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் சில கேள்விகளை நாம் முன்வைத்தோம். அவர் தனது தேர்தல் கால புரிதல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். “சட்டம் என்பது 50 சதவீதம் இடஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கி உள்ளது. ஆக சட்டப்படி பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நாம் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் அது சட்ட அளவில் மட்டுமே உள்ளது என்பதுதான் வேதனை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மத்தியில் பெண்களின் முன்னேற்றம் என்பது பழைய நிலையைவிட கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால் பட்டியலினப் பெண்கள் மத்தியில் இந்த முன்னேற்றம் குறிப்பிடும்படியாக இல்லை. அப்படியே ஒரு பெண் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்கு வந்தால் அவரை ஒப்புக்கு அமர்த்திவிட்டு அந்தப் பதவியின் முழு ஆதிக்கத்தை அவரது கணவரே செயல்படுத்தி வருவதை  பார்க்கிறோம். அந்த நிலை மாறவேண்டும். இதே ஆதிக்கமுறை பிற்படுத்தப்பட்ட பெண்கள் போட்டியிட்ட பதவிகளிலும் இருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓரளவுக்கு இந்தச் சமூக பெண்கள் வலிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள். பட்டியலினப் பெண்களிடம் இந்த முன்னேற்றம் இன்னும் வரவில்லை. 

இன்னும் பல ஊர்களில் பட்டியலின மக்கள் ஊர் எல்லையை தாண்டி உள்ள காலனி பகுதியில்தான் வாழ்க்கிறார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தங்களை ஆளுவதை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் விரும்புவதில்லை. எனவே அவர்களே தங்களுக்கு அடங்கிப் போகின்ற நபர்களை தேர்வு செய்து வெற்றி பெற வைத்து இந்தச் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது மாறவேண்டும் என்றால் பட்டியலினப் பெண்கள் முழு கல்வி அறிவை பெற நாம் உழைக்க வேண்டும்.

‘தாலிக்கு தங்கம்’ திட்டத்தின் மூலம் பட்டியலின பெண்களின் படிப்பறிவு கூடி உள்ளது. பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் முதல் பட்ட படிப்பு படித்தவர்கள் வரை அரசு வழங்கும் வேறுவேறு திட்டங்களை பெறுவதற்காகவே பட்டியலினப் பெண்களை படிக்க வைக்க வேண்டும் என்று அந்தச் சமூகத்தினர் நினைக்க ஆரம்பித்துள்ளனர். ஆக, குறிப்பிட்ட மாற்றம் இந்தத் திட்டங்கள் மூலம் உருவாகியுள்ளது. படிப்பறிவு கூடக்கூட அந்தப் பெண்கள் விழிப்புணர்வு அடைவார்கள். அதன் மூலம் பதவிக்கு வருவார்கள். அவர்களுக்கான அதிகாரத்தை அவர்கள் பிறகு சரியாக செலவு செய்வார்கள்” என்கிறார் ஷ்யாம். மேலும், 1996 ஆம் ஆண்டு முதல் 2011 வரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களை கவனித்து வருவதாவும், இந்த 23 ஆண்டுகளில் படிப்படியாக பட்டியலின மக்கள் முன்னேறிக் கொண்டுதான் வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இவரிடம் பொதுத்தொகுதிகளில் பட்டியலின சமூகத்தினர் போட்டியிடும் நிலைமை குறித்த கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர், “எனக்குத் தெரிந்து திருச்சி எம்.பி பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தலித் எழில்மலை மட்டும்தான். அவருக்குப் பின் யாரும் வந்ததாக தெரியவில்லை. அந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் போட்டியிடுவதற்கான சீட்டையும் வழங்க முன்வர வேண்டும். ஆனால் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன. ஒருவர் சீட்டு கேட்டு நேர்காணலுக்கு வருபவரிடம் பிரதானமாக இரண்டு கேள்விகளைதான் முன்வைக்கிறார்கள். ஒன்று; நீங்கள் என்ன சாதி? உங்கள் பகுதியில் எந்தச்சாதியினர் அதிகமாக உள்ளனர்? தேர்தலில் எவ்வளவு செலவு செய்வீர்கள்.  

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் என்ற உடன் எல்லா கட்சிகளும் அங்கே வன்னியர் வேட்பாளரைதான் நிறுத்துகிறார்கள். இப்படி இருந்தால் பொதுத்தொகுதியில் எப்படி பட்டியலின மக்களின் பங்களிப்பு உருவாகும். 1952 தேர்தலில் ஒன்றுபட்ட ராமநாத மாவட்டத்தில் தென்னரசுவை நிறுத்தினார் அண்ணா. இந்தத் தொகுதியில் முக்குளத்தோர் ஆதிக்கம்தான் அதிகம். ஆனால் அந்தச் சாதியை சாராத தென்னரசுவை நிறுத்தினார். இதை பல கட்சிகளும் செய்ய முன்வர வேண்டும்” என்கிறார். 

இவரிடம் பல ஊர்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பதவிகள் ஏலம் விடப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர் இந்தப் பிரச்னையை மிக பிராக்டிக்கலாக அணுகி பதிலளித்தார். “ஊரின் பொது அமைதி கெடக்கூடாது என்பதற்காக இதைபோன்ற ஏலம் நடக்கின்றது. அதை நான் கொச்சைப்படுத்தமாட்டேன்.
 

கடந்த முறை எங்கள் ஊர் பக்கத்து கிராமத்தில் கூட இந்த நடைமுறை கடைப்பிடித்தோம். பஞ்சாயத்து நிதியில் இருந்து செலவு செய்ய முடியாத விஷயங்கள் என்று சில உள்ளன. கோயில் மேம்பாடு போன்றவை அதில் அடங்கும். அதற்காக ஏலம் விடப்பட்டு அந்த வேலைகளை செய்கிறார்கள். அதில் தவறு இல்லை. பஞ்சாயத்து தலைவருக்கு அதிகபட்ச தேர்தல் செலவு வரம்பு 9 ஆயிரம் ரூபாய். ஆனால் குறைந்தது 2 லட்சம் வரை செலவு செய்கிறார்கள். இது எதுவும் இல்லாமல் ஒருவரை ஏக மனதாக தேர்ந்தெடுக்க இந்த முறையை கடைப்பிடிக்கிறார்கள்” என்கிறார் ஷ்யாம்.