சிறப்புக் களம்

அட்மின் பரிதாபங்கள் !

அட்மின் பரிதாபங்கள் !

webteam

அட்மின் : ஹெச்.ராஜாவின் உச்சரித்த இந்த பெயர் இப்போ தமிழ்நாட்டின் ட்ரெண்ட்.

என்ன பண்றாங்க இந்த அட்மின் ? யார் இந்த அட்மின் ? தெரிஞ்சிக்கணுமா ?             

சாதாரணமா நாம் எல்லாரும் இப்போ பேஸ்புக் , ட்விட்டர் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்.  நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என தனிநபர்களும் , அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் என அமைப்புகளும் கூட பேஸ்புக் , ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியாவை பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. பெருசா பிஸியா இல்லாத நாம எல்லாம் ஒரு நாளைக்கு 2 ட்வீட், 3 ஸ்டேட்டஸ், 5 போட்டோ ஷேர் பண்ணுவோம். ஆனால் எப்பவுமே பிஸியா இருக்க பெரிய ஆளுங்க அப்படியா ?

அட்மினோட தேவை இங்கதான் ஆரம்பிக்கிறது. சோஷியல் மீடியா மூலமா மக்களோட கனெக்ட் ஆக நினைக்கிற, தங்களோட பிசினஸை பெரிச்சாக்க நினைக்கிறவங்க , அவங்க அவங்க பேருல ஒரு பேஸ்புக் அக்கவுண்டோ, டிவிட்டர் அக்கவுன்டோ இல்லா இன்ஸ்டா அக்கவுண்டோ ஓப்பன் பண்ணிடுவாங்க. ஆனால் அதுல போட்ற எந்த போஸ்ட்டையும் அவங்களே , நம்மள மாதிரி டைப் பண்ணி போட மாட்டங்க.

அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியா ட்வீட் போடணும், நடிகர், நடிகைகளுக்கு சினிமா சார்ந்து ட்வீட் போடணும், எப்பவாவது கொஞ்சம் சமூக அக்கறை , தொழிலதிபர்கள் அவங்க சார்ந்து பதிவு போடணும். இப்படி அவங்க என்ன சோஷியல் மீடியால போடணும்னு நினைக்கிறாங்களோ, அதை அவங்களோட ஒப்புதலோட போட்றவர்தான் அட்மின். இப்படி பண்றதுக்கு அட்மினுக்கு சம்பளம் கொடுக்கப்படும். அவரும் தன்ன்னோட முதலாளி யாரோ , அவராவே மாறக் கூடியா ஆளா இருக்கணும். பெரும்பாலும் அட்மின்கள் , சம்பந்தப்பட நபருக்கு மிக நெருக்கமான ஆட்களாதான் இருப்பாங்க.

அரசியல்வாதிகள் தங்களோட உதவியாளர்களை அட்மின்களா பயன்படுத்துவாங்க. நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுத்து பயன்படுத்துவாங்க. நடிகர், நடிகைகள் மேனேஜர்களை அட்மினா பயன்படுத்துவாங்க. ஆக, அட்மின் என்பவர் ஒரு வெளி ஆள். ஆனால் சமூக வலைத்தளத்தில் அவரே ஹெச்.ராஜாவின் , நரேந்திர மோடியின், அமிதாப் பச்சனின், ஒபாமாவின், எடப்பாடி பழனிச்சாமியின் நிஜம். இப்போ ஹெச்.ராஜா விஷயத்துக்கு வருவோம். அவர் ஒரு அரசியல் தலைவர் என்பதால் அவரோட பேஸ்புக் , ட்விட்டர் அக்கவுண்ட மெயிண்டெய்ன் பண்ண பாஜகவோட ஐடி விங் ஆட்கள் அட்மினாக இருக்கலாம். இல்லைனா அவரே தன்னோட உதவி ஆள அட்மினா வச்சிருந்திருக்கலாம். ஐடி விங் ஆட்கள் அட்மினா இருந்தா, ஹெச்.ராஜாவை அவரது உதவியாள் வழியாக தொடர்பு கொண்டு , அவரது ஒப்புதல் பெற்று மட்டுமே பதிவிட்டிருப்பார்கள்.

பெரியார் சிலை இடிக்கப்படும் என பதிவிட்ட அட்மினுக்கு மோடி ஒழிக என பதிவிட எவ்வளவு நேரம் ஆகும் ? அவர்கள் அப்படி செய்வதில்லை. ஏனெனில் சமூக வலைத்தளங்களில் நிஜங்கள் அவர்கள். அட்மினுக்கான முதல் விதியே, ”முதலாளி ஒப்புதலே முதன்மை“. ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு இதுதான் ட்ரெண்டிங், இது பற்றிதான் பேச்சு இருக்கிறது என அட்மின் தரப்பில் சொல்லப்படும். ஹெச்.ராஜா அந்த விவகாரத்தில் கருத்துக் கூற விரும்பினால், குறிப்பிட்ட கருத்தை கூறி, இதனை போடலாம் என ஒப்புதல் அளிப்பார். அதனை தொடர்ந்தே அட்மின் தரப்பில் இருந்து, சம்பந்தப்பட்ட பதிவு முகநூலில், ட்விட்டரில் பதியப்படும். இல்லையெனில் ஒன்றும் பதிவு செய்யப்படாது.

இரவு, பகல், மழை, வெயில் என எந்தக் காலத்திலும் அட்மின்கள் ஆன்லைனிலேயே இருப்பர்கள். சம்பந்தப்பட்ட சோஷியல் மீடியா அக்கவுண்ட் பாஸ்வேர்ட் அட்மினை தாண்டி, அக்கவுண்ட்டுக்கு சொந்தக்காரர் யாரோ, அவரிடமும் இருக்கும்.  தேவைப்படும் பட்சத்தில் அவர்களே சென்று ட்வீட் போடவோ  அல்லது பார்க்கவோ அதனை பயன்படுத்துவர்கள். இப்பொழுதெல்லாம் அட்மின்களாக தனிநபர்களை தாண்டி, அதனை வியாபாரமாகவும் சில நிறுவனங்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக பலரின் அக்கவுண்டை குறிப்பிட்ட நிறுவனமே மேற்கொள்ளும் வியாபாரமெல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனால், தனிநபராக , நிறுவனமாக எப்படி வேண்டுமானாலும் அட்மின் இருக்கலாம். ஆனால் அவர் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபரின் ஒப்புதல் பெறாமல் எதையும் பதிவு செய்யும் நபராக இருக்க முடியாது. ஒருவேளை அட்மின் வேலையை விட்டு சென்றால், உடனடியாக பாஸ்வேர்ட் மாற்றப்படும். இப்படி பல ரகசியங்களையும், விதிகளையும் கொண்ட தனி ஒருவனே அட்மின். இரவில் விழித்திருக்கும் ஆந்தை.