சிறப்புக் களம்

ஃபோபியா பலவிதம்: 'க்ரோமோஃபோபியா' - அச்சுறுத்தும் நிறங்களும், கேரக்டர் கூறும் வண்ணங்களும்!

ஃபோபியா பலவிதம்: 'க்ரோமோஃபோபியா' - அச்சுறுத்தும் நிறங்களும், கேரக்டர் கூறும் வண்ணங்களும்!

Sinekadhara

சிறு குழந்தையிலிருந்து பெரியவர் வரை பிடித்த நிறம் என்னவென்று கேட்டால் எல்லாருமே சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, வெள்ளை என ஒவ்வொரு நிறத்தைக் கூறுவார்கள். பிடித்த நிறங்களை வைத்து, அவர்கள் எந்த மாதிரியான குணாதிசயங்கள் உடையவர்களாக இருப்பார்கள் என்பதை கணிக்கமுடியும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

காரணம், ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. நிறங்கள் மனிதனுடைய மனதை எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன, மனநிலையில் என்னென்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று பலருக்கும் தெரியாது.

உதாரணமாக, சிலர் வீடுகளில் அடர்த்தியான மஞ்சள், சிவப்பு நிற பெயின்டுகளை அடித்திருப்பார்கள். அந்த வீட்டுக்குள் புதிதாக செல்பவர்களுக்கு ரத்த ஓட்டம் திடீரென அதிகரிக்கலாம், மேலும், ஒருவித டென்ஷன் உருவாகலாம். ஆனால், அந்த நபருக்கு உடலில் எந்த பிரச்னைகளும் இல்லாதபோதும், திடீரென ஏன் இவ்வாறு பதற்றம் உருவாகிறது என்ற காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் நிறங்கள், மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றம்தான் அதற்குக் காரணம். அதனால்தான் விபத்து ஏற்படும் இடங்களில் அதிக ரத்தத்தைப் பார்க்கும்போது, சிலருக்கு மயக்கம், குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு நிறங்களுக்கும் உளவியல்ரீதியாக அர்த்தங்கள் உள்ளன. அதைத்தான், 'கலர் சைக்காலஜி' என்கிறோம்.

திடீரென ஏற்படும் இந்த மாற்றங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அதுவே ஒரு பயத்தை ஆழ்மனதில் விதைத்துவிடுகிறது. அதனால்தான் சிலருக்கு சில நிறங்களைப் பார்க்கும்போது ஒரு அதீத பயம் மனதில் உருவாகும். இதுவும் ஒருவித ஃபோபியாதான் என்கின்றனர் மனநல ஆராய்ச்சியாளர்கள். நிறங்களைப் பார்க்கும்போது உருவாகும் பயத்தைத்தான் 'க்ரோமோஃபோபியா' (Chromophobia) என்று சொல்கிறார்கள். இதை க்ரோமட்டோஃபோபியா (Chromatophobia) அல்லது க்ரெமட்டோஃபோபியா (Chrematophobia) என்றும் சொல்கிறார்கள்.

'க்ரோமோஃபோபியா' என்ற சொல்லுக்கு நிறங்களைக் குறித்த அதீத பயம் அல்லது அதீத வெறுப்பு என்று அர்த்தம். கிரேக்க வார்த்தைகளான 'க்ரோம்' என்ற சொல்லுக்கு 'நிறம்' என்றும், 'ஃபோபியா' என்ற சொல்லுக்கு 'பயம்' என்றும் பொருள். சிலர் 'க்ரோமோஃபோபியா' என்றால், வாசனை அல்லது துர்நாற்றம் குறித்த பயம் என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள். ஆனால், அதை 'ஓஸ்மோஃபோபியா' என்று குறிப்பிடுவர்.

'க்ரோமோஃபோபியா' பெரும்பாலும் காணப்படக்கூடிய ஃபோபியாவாக இருக்காது. சிலருக்கு சில நிறங்கள் அல்லது குறிப்பிட்ட ஒரு நிறத்தால் கிடைத்த மறக்கமுடியாத வெறுக்கத்தக்க அனுபவத்தால் இந்த 'ஃபோபியா' ஏற்படும்.

நிறங்களும் உளவியலும்:

நிறங்கள் உளவியல்ரீதியாக என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்தால் ஃபோபியா பற்றியும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

வெள்ளை நிறம் சுத்தம் மற்றும் புத்துணர்ச்சியை குறிக்கும். இது இளமை, நவீனத்துவத்தை தூண்டக்கூடிய நிறம். கருப்பு நிறம் வலிமை மற்றும் ஸ்டைலைக் குறிக்கிறது. அதனால்தான் அதிக விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள் மற்றும் பொருள்கள் கருப்பு நிறத்தில் வருகிறது. இது கவர்ச்சியான, சக்தி வாய்ந்த, மர்மமான மற்றும் அச்சுறுத்தக்கூடிய நிறமாக உள்ளது.

நிறையபேருக்கு சிவப்பு நிற கார் வாங்கவேண்டும் என்பது கனவாகவே இருக்கும். இது தைரியமான, கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு நிறம். சிவப்பு நிறமும் சக்தி, செயல் மற்றும் நம்பிக்கையைக் குறிக்கும். இது மனவேகத்தை அதிகப்படுத்தும். இதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

நீலம் மற்றும் பச்சை போன்ற நிறங்கள், இயற்கை, ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையது. சில நேரங்களில் பச்சை நிறமானது பொறாமை போன்ற எதிர்மறையான விஷயங்களையும் குறிக்கும். நீல நிறம் வானம் மற்றும் கடலின் நிறம். இது நிலைத்தன்மை, நம்பிக்கை மற்றும் அமைதியைக் குறிக்கும். அதேசமயம் நீல நிறம் மன அழுத்தத்தையும் குறிக்கும். ஆனால் 'Cool colors' என்று சொல்லப்படுகிற இவை மன அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடியவை.

அதேசமயம் 'Warm Colors' என்று சொல்லக்கூடிய நிறங்களான மஞ்சள், சிவப்பு போன்றவை ஒரு பதற்றத்தைத் தூண்டக்கூடியவை.

க்ரோமோஃபோபியா அறிகுறிகள்:

  • அதீத கவலை அல்லது பதற்றம்
  • மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது இதயத்துடிப்பு அதிகரித்தல்
  • அதிகமாக வியர்த்தல்
  • குமட்டல்
  • நா வறட்சி
  • பேசுவதில் சிரமம்
  • நடுக்கம் மற்றும் படபடப்பு போன்றவை பொதுவாக காணப்படக்கூடிய அறிகுறிகள்.

தீர்வுதான் என்ன?

ஹைப்னோசிஸ் (Hypnosis): நன்கு பயிற்சி எடுத்த சிறப்பு நிபுணரால் மட்டுமே இந்த சிகிச்சையை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கமுடியும். இந்த தெரபி கொடுக்கப்படும்போது சிகிச்சைப்பெறுபவர் நிபுணர் கொடுக்கும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவராக இருக்கவேண்டும். எதன்மீது பயம் இருக்கிறதோ, அதை நேர்மறையாக எப்படி அணுகவேண்டும் என்பதை நிபுணர் கற்றுக்கொடுப்பார்.

என்.எல்.பி (Neuro Linguistic Programming): இது மனதுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும். அதாவது நிறங்கள் மற்றும் அதன் பயத்தின்மீதான அணுகுமுறை மற்றும் அந்த பயம்குறித்து பயன்படுத்தும் வார்த்தைகளை மாற்றியமைப்பது குறித்த விளக்கங்கள் மற்றும் சிகிச்சைகளை அளிப்பர். மேலும், எனர்ஜி ஹீலிங் (energy healing) போன்ற சிகிச்சை முறைகளையும் நிபுணர்கள் பயன்படுத்துவர். டாய் சி, யோகா, ஆழ்ந்த தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவையும் ஃபோபியாக்களுக்கு தீர்வைக் கொடுக்கக்கூடிய வழியாகும்.