கடலூரில் சமூக விரோத கும்பல்களுக்கு இடையிலான மோதலில் ரவுடி முகத்தில் பிலீச்சிங் பவுடர் தூவி பழிக்கு பழி வாங்கிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் - சுப்புராயுலு நகரில் தலை வேறு, உடல் வேறாக வெட்டி கொடூரமான முறையில் கொல்லப்பட்டவரின் பெயர் வீரா. உழவர் சந்தை அருகே பழக்கடை நடத்தி வரும் வீரா மீது, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எப்போதும் நண்பர்களுடன் இருக்கும் வீரா, விலை உயர்ந்த ஜீப்பில் வலம் வருவதை வழக்கமாகக் கொண்டவர். வீரா கும்பலுக்கும், குப்பன்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் கும்பலுக்கும் முன்பகை இருந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வீரா தரப்பினர் கிருஷ்ணனின் உறவினர் சதீஷை வெட்டிக் கொன்றதால், வன்மம் மேலும் அதிகரித்தது.
கிருஷ்ணனின் மனதிற்குள் பற்றி எரிந்த பகை நெருப்பு, வீராவை கொடூரமாக வெட்டிச் சாய்க்க வேண்டுமென தூண்டியுள்ளது. இதற்காக நேரம் பார்த்து காத்திருந்த கிருஷ்ணன் கும்பல், செவ்வாயன்று இரவு நேரம் குறித்துள்ளது. அன்றிரவு வீரா சுப்புராயுலு நகரில் தனது வீட்டின் அருகே தனியே செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் சுற்றி வளைத்துள்ளனர். வீராவின் முகத்தில் பிளீச்சிங் பவுடரை வீசியுள்ளனர். இதை எதிர்பாராத வீரா, நிலைதடுமாறியுள்ளார். அவரை மடக்கிப்பிடித்த கிருஷ்ணன் கும்பல், வீராவின் கழுத்தை அறுத்து தலையை துண்டாக்கி எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது. தலையை குப்பன்குளத்தில் சதீஷ் என்பவரின் வீட்டின் முன் வைத்துவிட்டு கிருஷ்ணன் தரப்பினர், இருளில் மறைந்தனர்.
வீராவின் உடலும் தலையும் வெவ்வேறு இடங்களில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். கடலூரே அச்சத்தில் அதிர்ந்து போனது. தகவலறிந்த காவல்துறையினர், கொலையாளிகளைப் பிடிக்க துரிதமாக செயலில் இறங்கினர். விடியும் முன் கொலையாளிகளைப் பிடிக்க உறுதிபூண்ட அவர்கள், மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.
பண்ருட்டி அருகே மடப்பட்டு சாலையில் வாகனச் சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். தங்கள் கூட்டாளிகள் அருகே மறைத்திருப்பதாகக் கூறி, அழைத்துச் சென்ற கிருஷ்ணன், திடீரென உதவி ஆய்வாளரை தீபனை அரிவாளால் வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக கிருஷ்ணனை 3 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
ஒரே இரவில், ஒரு ரவுடி கொலை, மற்றொரு ரவுடி என்கவுன்டர் என, பதற்றத்துடன் விடியலைச் சந்தித்தது கடலூர். என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பண்ருட்டி மாஜிஸ்திரேட் மணிவர்மனும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, என்கவுண்ட்டர் செய்த புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் தீபனிடம் விசாரணை நடத்தினார்.
இதனிடையே, கொல்லப்பட்ட வீராவின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. வீரா கொலை வழக்கில், ரமணன், ராஜசேகர், அருன்பாண்டியன், சுதாகர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தப்பி ஓடிய மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.