சிறப்புக் களம்

'ஆப்' இன்றி அமையா உலகு 10: Water Reminder - தண்ணீர் பருக நினைவூட்டும் அசத்தல் ஆப்!

EllusamyKarthik

வான் சிறப்பு குறித்து திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை கொஞ்சம் மாற்றி 'நீர் இன்றி அமையாது உடல்' எனச் சொல்லலாம். அந்த அளவுக்கு உடல் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் தேவைப்படுகிற சக்தியை கொடுப்பது தண்ணீர்தான். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்கின்ற உணவுகளில் நீர் சத்து நிறைந்திருந்தாலும் தண்ணீர் பருகுவது அவசியமானதாகும். அது பல்வேறு ஆரோக்கிய சீர்கேட்டில் இருந்து நம்மை தள்ளிப்போகச் செய்கிறது.

இன்றைய அவசர உலகில் வேலை பளுவினால் சிலர் தண்ணீர் பருக மறந்து போவதுண்டு. அவர்களுக்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதுதான் 'Water Reminder - Remind Drink Water' என்ற கைபேசி செயலி. 

ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது அவரவர் வயது, உடல்வாகு மற்றும் கால நிலையை பொறுத்தே உள்ளது. 

நேச்சுரல் டானிக்கான தண்ணீரை நாள்தோறும் உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் துவங்கி உடலை துடிப்போடு வைத்துக்கொள்ளவும் உதவும் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். "தண்ணீரை அளவுக்கு அதிகமாக பருகுவதும், அதுவே அறவே பருகாமல் இருப்பதும் ஆரோக்கியத்திற்கு ஆபத்துதான்" என்கின்றனர் மருத்துவர்கள். 

ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தேவைப்படும் தண்ணீரை எவ்வளவு குடிக்க வேண்டும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் வருவதுண்டு. இதற்கெல்லாம் சேர்த்து தீர்வு கொடுக்கிறது இந்த செயலி. 

நேரம் காலம் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் உடனடியாக இந்த மொபைல் அப்ளிகேஷனை அவரவர் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். 

ஒருவர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? தண்ணீர் அதிகம் குடிக்காமல் போனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? - இதுகுறித்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டேன். 

"நம் உடலில் பார்த்தோமானால் 70 முதல் 80 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அதற்கு உதாரணம். மனிதர்களால் சாப்பிடாமல் கூட மூன்று வார காலம் வரை இருக்க முடியும். ஆனால், தண்ணீரைப் பருகாமல் இருந்தால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். அந்த அளவுக்கு உடல் இயக்கத்திற்கு நீர் சத்து அவசியம். தண்ணீர் குடிக்காமல் விட்டால் உடலில் அமிலத்தன்மை ஏற்பட்டு கிட்னி, இதயம், மூளை மாதிரியான உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்படும். அதே நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால் சிறுநீர் தொற்று, சிறுநீரகக் கற்கள் மாதிரியான உபாதைகள் வரலாம். அதனால் ஒவ்வொருவரும் தண்ணீர் அவசியம் குடித்தாக வேண்டும். 

50 கிலோ எடையுள்ள நபர் ஒருவர் 1,500 மில்லி தண்ணீர் பருக வேண்டும். அதாவது 1 கிலோவுக்கு 30 மில்லி என கணக்கு. இது கால நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். காய்ச்சல் சமயங்களில் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். தற்போதுள்ள மாறி வரும் வாழ்க்கை முறை தான் நம் அன்றாட உடல் இயக்கத்திற்கு தேவையான தண்ணீரை பருக விடாமல் செய்கிறது. ஏசி அறையில் உட்கார்ந்த படி பணியாற்றுபவர்களுக்கு அதிகம் தாகம் எடுக்காது. அவர்களுக்கு இந்த ரிமைண்டர் உதவும். வியர்வை சிந்தி உழைப்பவர்களுக்கு தானாகவே தாகம் எடுக்கும். மூளை தண்ணீரை குடிக்க சொல்லி அறிவுறுத்தும். மறுபக்கம் தண்ணீரை அதிகம் குடிப்பது மிகவும் அரிது. ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக தாகம் எடுக்கிறது என்றால், அவருக்கு நீரிழிவு நோய் மாதிரியான தாக்கம் இருக்கலாம்" என்றார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. 

சரி, Water Reminder அப்ளிகேஷனை பயன்படுத்துவது?

> யார், எப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற நினைவூட்டலை இந்த அப்ளிகேஷன் தருகிறது. 

> கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இந்த அப்ளிகேஷனை இலவசமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யலாம். 

> இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தவுடன் பாலினம், உடல் எடை, இரவு தூங்கும் நேரம், காலையில் விழிக்கும் நேரம் என அனைத்தையும் அப்டேட் செய்யும்படி கேட்கும். 

> அதை முடித்த கையோடு பயனரின் உடல் எடைக்கு ஏற்ப ஒரு நாளில் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் இந்த அப்ளிகேஷனே கணித்து சொல்கிறது. கூடவே 100 மில்லி லிட்டரில் இருந்து 400 மில்லி லிட்டர் வரையிலான அளவுகொண்ட தண்ணீர் கோப்பைகளில் ஏதேனும் ஒன்றை செலெக்ட் செய்யும்படியும் சொல்கிறது. அதை செய்து முடித்த நொடியிலிருந்து தனது பணியை ஆரம்பித்து விடுகிறது. 

> தண்ணீர் குடிக்கும் கோப்பையின் அளவை பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.  

> கடைசியாக தண்ணீர் எப்போது குடித்தோம், எவ்வளவு குடித்தோம், அடுத்ததாக தண்ணீர் குடிக்க வேண்டியது எப்போது என தண்ணீர் குடிப்பது சம்பந்தமான எல்லாவித ரெக்கார்டுகளையும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பயனர்கள் ட்ராக் செய்து தெரிந்து கொள்ளலாம். 

> தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர ரெக்கார்டுகளை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். 

> வேலை பளுவினால் அதை செய்ய நாம் மறந்தாலும் நோட்டிபிகேஷன் அலாரம் மூலமாக 'தண்ணீர் குடி' என இந்த அப்ளிகேஷன் நினைவூட்டுவதோடு, தண்ணீர் குடிக்கும் வரை படுத்தெடுத்து விடுகிறது இந்த அப்ளிகேஷன்.

> இந்த அப்ளிகேஷனை இதுவரை 1 கோடிக்கும் அதிகமான உலக மக்கள் தங்களது மொபைல் போன்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.