சிறப்புக் களம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆர்ச் வடிவிலான கேரளாவின் இடுக்கி அணை மீண்டும் திறப்பு

இந்தியாவின் மிகப்பெரிய ஆர்ச் வடிவிலான கேரளாவின் இடுக்கி அணை மீண்டும் திறப்பு

கலிலுல்லா

இடுக்கி அணை நீர்மட்டத்தை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு இடுக்கி அணை இன்று மாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆர்ச் வடிவ அணையான கேரளாவின் இடுக்கி அணை நிரம்பி வருவதைத் தொடர்ந்தும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து எந்நேரமும் நீர் திறப்பு அதிகரிக்கப்படலாம் என்பதாலும் இடுக்கி அணை நீர்மட்டத்தை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு இடுக்கி அணை இன்று மாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை வரலாற்றிலேயே இதுவரையிலும் 1981, 1992, 2018, ஆண்டுகளில் திறக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக நான்காண்டுகள் கழித்து, இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 19ஆம் தேதி இடுக்கி அணை திறக்கப்பட்டு அக்டோபர் 27 ஆம் தேதி மூடப்பட்டது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போது இடுக்கி அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையின் நீர்மட்டம் தற்போது 2,401.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் உபரி நீர் வெளியேறும் செறுதோணி அணையின் மூன்றாவது மதகு திறக்கப்பட்டு வினாடிக்கு 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் இடுக்கி தாலுகாவிற்கு உட்பட்ட செறுதோணி அருகே பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஆர்ச் வடிவ இடுக்கி அணை. 1969ம் ஆண்டு அணை கட்டும் மணி துவங்கப்பட்டு 1973ம் ஆண்டு அணை திறக்கப்பட்டது. 75 டி.எம்.சி., நீர் கொள்ளவு கொண்ட இடுக்கி அணை கேரள மின்சார வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. அணை மொத்த நீர்மட்டம் 2,403 அடி என கடல் மட்டத்திலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது. அணை நீர் மூலம் தினசரி 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மூலமற்றம், செறுதோணி, குளமாவு மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

கேரளா மாநிலம் இடுக்கியில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,398 அடியாக வேகமாக உயர்ந்தது. இதனால் அணைக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப்பின் கடந்த அக்டோபர் 19 தேதி அணையின் உபரி நீர் வெளியேற்றும் செறுதோணி அணையின் மூன்று மதகுகள் தலா 35 செ.மீ., உயர்த்தப்பட்டு விநாடிக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

பின் மழை குறைந்து அணையின் நீர்மட்டம் 2397.90 அடியாக கீழிறங்கியது. அணைக்கு நீர்வரத்தும் குறைந்ததால் இடுக்கி அணை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 மற்றும் 141 அடிக்கும் இடையில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து ஏற்ப விநாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது போக மீதமுள்ள உபரிநீர் கேரளாவிற்கு திறக்கப்பட்டு வருகிறது.

முல்லைப்பெரியாறு அணைக்கு எந்நேரமும் நீர் வரத்து அதிகரிக்கலாம் எனவும், அதிக அளவில் கேரளாவில் நீர் திறப்பு இருக்கும் எனவும் முல்லைப் பெரியாறு அணை துவங்கி வல்லக்கடவு சப்பாத்து உப்பு தரை வழியாக அணை நீர் சென்றடையும் இடுக்கி அணை வரையிலான நீரோட்ட பாதைகளுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதமும் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 2,100 கனஅடி தண்ணீர் கேரளாவிற்குள் உபரி நீராக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இடுக்கி அணை நிரம்பி வருவதைத் தொடர்ந்தும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து எந்நேரமும் நீர் திறப்பு அதிகரிக்கப்படலாம் என்பதாலும், இடுக்கி அணை நீர்மட்டத்தை கட்டுக்குள் வைக்கும் நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து இடுக்கி அணை செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையின் நீர்மட்டம் தற்போது 2,401.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் உபரி நீர் வெளியேறும் செறுதோணி அணையின் மூன்றாவது மதகு 60 செ.மீ., உயர்த்தப்பட்டு வினாடிக்கு 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.