சிறப்புக் களம்

அதிமுக - திமுக 'வார்த்தைப்போர்' அன்றும் இன்றும்... உணரப்படுகிறதா 'வெற்றிடம்'?

அதிமுக - திமுக 'வார்த்தைப்போர்' அன்றும் இன்றும்... உணரப்படுகிறதா 'வெற்றிடம்'?

webteam

'யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்...' - இதுதான் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கவனத்துக்குரியவர்களுக்கு சீனியர் தலைவர்கள் கொடுக்கும் முதல் கவர்ச்சி வார்த்தை. தேர்தல் அரசியலைப் பொருத்தவரையில், தற்போது தமிழகத்தின் மூத்த கட்சிகள் என்றால், அண்ணா தொடங்கிய திமுகவும், எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவும்தான். மூத்த தலைவர்கள் மறைந்தாலும் அவர்கள் வளர்த்த மூத்த கட்சிகள் இன்னும் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா, திமுகவை உருவாக்கினார். அப்போதைய காலகட்டத்திலும் அரசியலுக்காக தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வது உண்டு. ராபின்சன் பூங்காவில் அண்ணாவின் தலைமையில் திமுக உருவானபோது, அதை 'கண்ணீர்த்துளிக் கட்சி' என கிண்டலடித்தார் பெரியார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது திராவிடர் நாடு பத்திரிகையில் 'கண்ணீர்த்துளிகள் கண்ணீர்க் கடலாகி, அதில் பெரியார் சிக்கித்தவிப்பதாக' ஒரு கார்ட்டூனை வெளியிட்டார் அண்ணா.

மேலும், திமுகவை வளர்க்க கருணாநிதியின் கவிதைத்திறனையும் எம்.ஜி.ஆரின் திரைத்திறனையும் சிறப்பாக பயன்படுத்தினார் அண்ணா.

அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுகவை வழிநடத்தினார் கருணாநிதி. ஆனால், அண்ணா பெரியாரிடம் இருந்து பிரிந்ததுபோன்ற ஒரு பிளவை, கருணாநிதியிடம் இருந்து 1972ஆம் ஆண்டு சந்தித்தார் எம்.ஜி.ஆர். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதி - எம்.ஜி.ஆர் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்களே. ஆம்... திருக்கழுக்குன்றத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், 'ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவினர் சொத்து சேர்த்துவிட்டதாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தர, கட்சியின் தலைவர்கள் தங்கள் சொத்துக்கணக்கை தரவேண்டும்' என கர்ஜித்தார் அப்போதைய திமுகவின் பொருளாளர் எம்.ஜி.ஆர்.

இது திமுகவினரை கலங்கடித்தது. எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அப்போதும் தலைவர்களுக்கிடையே வார்த்தைப்போர் வந்தது வாடிக்கையே. 'அண்ணா ஒப்படைத்துவிட்டுச் சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. வேறு வழியின்றி கனியை எறியவேண்டியதாயிற்று' என வார்த்தை ஜாலம் காட்டினார் கருணாநிதி.

அதன்பின்னர், கனத்த இதயத்துடன் அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர், 'ஒன்றும் செய்யாத நான் கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன்' என உருக்கத்துடனே மக்களை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகள் அசைக்க முடியாத சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அந்த வகையில் தூக்கியெறியப்பட்டதாக அவர் சொன்ன வார்த்தைதான் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக மக்களிடையே எழுச்சியை உருவாக்கியது.

1987 டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்தார். அதற்கு பின்னால் அதிமுகவிற்கு தலைமை யார்? என்ற கேள்வி எழுந்தபோது நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி என எல்லோரையும் பின்னுக்கு தள்ளி தனக்கென இடத்தை தக்க வைத்தார் ஜெயலலிதா. வெறும் 29 எம்.எல்.ஏக்களை தன்னுடன் வைத்துக்கொண்டு ஜானகியின் ஆட்சியை கலைத்தார் ஜெயலலிதா.

இதையடுத்து ஜெயலலிதா - கருணாநிதி அரசியல் எவ்வாறு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து திமுகவும், அதிமுகவும் தங்களை தவிர வேறு அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் ஒத்த கருத்துடனையே இருந்து வந்ததாக மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஜெயலலிதா வருகைக்கு பிறகு ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்களது நற்பெயரை தற்காத்துக் கொண்டு வருவதிலேயே முனைப்பு காட்டினர். எங்கிருந்தாலும் எலியும் பூனையுமாகவே மறையும் வரை தங்களை வெளிக்காட்டிகொண்டனர்.

பழைய காலகட்டங்கள் மறைந்து தற்போது அதிமுகவை ஒபிஎஸ் - இபிஎஸ் வழிநடத்தி வருகின்றனர். அதேபோல் திமுகவை ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார். அதிர்ஷ்டவசமாக ஜெயலலிதா விட்டுச்சென்ற வெற்றிக்கனியை விட்டுவிடக்கூடாது என அதிமுக தலைவர்களும், தந்தை இழந்த ஆட்சிக்கட்டிலை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு திமுக தலைவரும் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகாலத்தில் ஓரளவுக்கு பெரிதாக மோதல் இல்லாமல் இருந்து ஆச்சரியப்பட வைத்த மூத்த பெரும் கட்சிகள், தற்போது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டன. நாடாளுமன்றத் தேர்தல்களில்கூட பெரிதாக குற்றம் சாட்டாமல் ஓரளவுக்கு திமுக தனது பலத்தை சோதனை செய்து பார்த்தது. ஆனால், தற்போது தலைவர்கள் சாடிக்கொள்ளும் வார்த்தைகள் காதுகொடுத்து கேட்க முடியாத அளவிற்கு வரம்பு மீறி செல்கின்றன என்றால் அது மிகையல்ல.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்றார். அப்போது எழுந்த குற்றச்சாட்டு அவரின் மறைவுக்கு பின்னர்தான் இறுதி வடிவம் எடுத்தது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் குற்றவாளிகள் என்று கூறி, உச்ச நீதிமன்றம் சிறை தண்டனையை உறுதி செய்தது.

அதேபோல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்ததாக கூறி, திமுகவின் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா மற்றும் திமுகவின் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அந்த வழக்கில் இருந்து ராசாவே வாதாடி சில மாதங்களுக்கு முன்பு ஜோடிக்கப்பட்ட வழக்கு என இருவரும் விடுதலை ஆகினர். அதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்தான் சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி ஆளுங்கட்சியான அதிமுக அரசு மீது தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் திமுகவின் தலைவர் ஸ்டாலின். இதற்கு பதிலடி கொடுக்கும் வழக்கில் முதல்வர் பழனிசாமி, 2ஜி வழக்கை இழுத்துவிட்டார்.

சும்மா இருப்பாரா ஸ்டாலின்? ஆ.ராசாவை வைத்தே 'முடிந்தால் வாதத்திற்கு வாருங்கள். நான் கோட்டைக்கு வருகிறேன். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு பற்றியும் விவாதிக்கலாம்' என சவால் விடுக்க வைத்தார். அதற்கு 'ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவுக்கு அருகதையில்லை' என அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும், 'ராசாலாம் ஒரு ஆளா? அவர் கூப்பிட்டா நாங்கள் போயிடனுமா' என முதல்வரும் காரசாரமாக பேச ஆரம்பித்துவிட்டனர். இது மாறி மாறி அதிமுக - திமுக இடையே உருவ பொம்மை எரிப்பு, போராட்டம், தள்ளுமுள்ளு என பல்வேறு விதங்களில் மோதல்கள் வெடித்து வருகிறது.

2ஜி ஊழல் குறித்து ஜெயலலிதா காலத்தில் இருந்தே பேசப்பட்டு வந்ததுதான். அதை தற்போது அதிமுகவினர் கையில் எடுப்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தற்போது ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து ஸ்டாலின் தலைமையிலான திமுக கையில் எடுத்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியானபோதுகூட ஜெயலலிதா மறைவால் கண்ணியத்தை பாதுகாத்த திமுக, தற்போது அரசியலுக்காக அதை பேசுபொருளாக்க முற்படுகிறதா? என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.

மேலும், அதிமுகவின் கண்ணியத்தை குறைக்க திமுகவிற்கு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்குதான் ஒரே வழியா? மறைந்த தலைவரை பற்றி பேசுவதால் திமுகவிற்கு இழுக்கு ஏற்படுமா? இதனால், திமுகவின் ஓட்டு வங்கி குறையுமா? இல்லை, அதிமுகவை திமுக சரியான வியூகத்தில் எதிர்த்து வருகிறதா? என்பன போன்ற பல கேள்விகள் எழாமல் இல்லை என்கின்றனர் அவர்கள்.

திமுக - அதிமுக இடையே 'வார்த்தைப் போர்' எல்லா காலகட்டத்திலும் இருந்ததுதான். ஆனால், அவை அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டதில்லை என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இப்போது, அநாகரிகத்தின் உச்சத்தை இந்த வார்த்தைப்போர் வெளிப்படுத்தியிருப்பதுதான் தமிழக அரசியல் தலைமைகளின் நிஜ வெற்றிடத்தை உணர்த்துகிறதோ என்று எழும் கருத்துக்கும் இடமளிக்கிறது.