சிறப்புக் களம்

பணம் பண்ண பிளான் B -21: சிறந்த முதலீட்டாளராக உருவாக விரும்புகிறீர்களா?

பணம் பண்ண பிளான் B -21: சிறந்த முதலீட்டாளராக உருவாக விரும்புகிறீர்களா?

webteam

கிரிக்கெட் என்பது அனைவருக்கும் பிடித்த விளையாட்டு. ஆனால் தற்போதைய தலைமுறையினருக்கு பிடித்த வடிவமாக டி20 மாறி இருக்கிறது. ஐபிஎல் காலத்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டிகளின் எண்ணிக்கையே குறைந்திருக்கும் சூழலில் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது. ஆனால் டெஸ்ட்போட்டி மன நிலையில்தான் முதலீடு இருக்க வேண்டும் என முதலீட்டு ஆலோசர்கள் வலியுறுத்துவார்கள்.

டெஸ்ட் போட்டியின் மனநிலையே நீண்ட நேரம் களத்தில் இருக்க வேண்டும் என்பதுதான். நீண்ட நேரம் களத்தில் இருந்தால் வெற்றி தானாக வரும். ஆனால் பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேனை அவுட் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்திலே அடிப்பதற்கு ஏதுவான பந்துகளை வீசுவார்கள். பொறுமையாக இருந்தால் மட்டுமே அந்த பந்தினை தவிர்க்க முடியும்.

அதுபோல முதலீட்டில் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து முதலீடு செய்யும்போது உங்களைச் சுற்றி பல முதலீட்டு வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக தெரியும். சமயங்களில் பென்னி ஸ்டாகளில் அதிக வருமானம் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகும். கிரிப்டோ கரன்ஸியில் பணத்தை அள்ளலாம் என்னும் செய்திகள் வெளியாகும். இதுபோல கவனச்சிதறல்கள் இல்லாமல், உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு எவ்வளவு, எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்ய முடியும், எவ்வளவு வருமானம் தேவை என்பதில் தெளிவாக இருந்தால் போதும் நமக்கு ஏற்ற முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் தெளிவு பிறக்கும்.

ஒவ்வொரு திட்டத்துக்கும் கால அளவு இருக்கிறது. அதற்கான நேரத்தை வழங்காமல் டி20 போல குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க நினைப்பது என்பது டிரேடர்களின் மனநிலை. ஒவ்வொரு பந்தினையும் அடிக்க நினைத்தால் அவுட் ஆகும் வாய்ப்பு அதிகம். அதுபோல குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க நினைத்தால் உங்களுடைய முதலீடே கரையும் வாய்ப்பு இருக்கிறது.

தற்போதைய முதலீட்டாளர்கள் பலரிடம் பேசி இருக்கிறேன். அவர்களுடன் உரையாடும்போது ஐந்தாண்டுகளில் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வருமானம் என்பது இயல்பாக கிடைக்கும். இந்த வருமானத்தை இலக்காக கொள்ளலாம் என பேசினால், இதெல்லாம் ஒரு வருமானமா என்னும் மனநிலையில் அவர்களுக்கு இருக்கிறது. காரணம் குறுகிய காலத்தில் சில பங்குகள் அல்லது புதிய முதலீடுகளில் இதைவிட அதிக லாபம் கிடைக்கும் என்னும் நம்பிக்கைதான் காரணம்.

சிறந்த முதலீட்டாளர்களாக மாறுவதற்கு, பொறுமை, நிதானம், நம்முடைய இலக்கு ஆகியவை தேவை. நிதிசார்ந்த விஷயங்களில் திறமையை விட பொறுமையே பெரிய வெற்றியை தேடித்தந்திருக்கிறது. ரியல் எஸ்டேட்டில் பணம் சம்பாதித்த பலரும், ஒரு முதலீட்டை செய்துவிட்டு ஆண்டு கணக்கில் மறந்திருப்பார்கள். அதன் பிறகு அந்த சொத்தின் விலை எங்கேயோ இருக்கும். ஆனால் இதர நிதிசார்ந்த திட்டங்களில் உடனடி வருமானத்துக்கு ஆசைப்படுகிறார்கள். அதனால் பங்குச்சந்தையில் முதலீட்டாளராக நுழைந்து, அதன் பிறகு டிரேடராக மாறி, பணத்தை இழந்து, அதன் பிறகு பங்குச்சந்தை குறித்து எதிராக பேசுகிறார்கள்.

ஓடிஐ மற்றும் டி20-ல் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் சூழல் இருக்கும். ஆனால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெரும் அணியில் ஒரிருவர் மட்டுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஒருவர் 200 ரன் எடுக்கலாம். அல்லது ஒருவரே 7 விக்கெட் எடுக்கலாம். மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட் ஆகலாம்.

பத்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்காமல் இருக்கலாம். இருந்தாலும் அனைவரையும் சேர்ந்துதான் டெஸ்ட் மேட்ச். காரணம் அடுத்த போட்டியில் வேறு ஒருவர் ஆதிக்கம் செலுத்துவார். ஷர்துல் ஏழு விக்கெட் எடுத்துவிட்டார் என்பதற்காக பும்ரா இல்லாமல் விளையாட முடியாது. அதுபோல நீண்ட காலம் முதலீடு செய்யும்போது அனைத்து பிரிவிலும் உங்களுடைய முதலீடு இருக்க வேண்டும். உங்களுடைய போர்ட்போலியோவில் அசெட் அலோகேஷன் முக்கியம்.

இங்கேயும் சில முதலீட்டாளர்கள் தவறு செய்வார்கள். 10 பங்குகளில் முதலீடு செய்வார்கள். உதாரணத்துக்கு ஒரு லட்ச ரூபாயை 10 பங்குகளில் முதலீடு செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஓர் ஆண்டுகளுக்கு பிறகு எந்தெந்த பங்குகளில் லாபம் வந்திருக்கிறதோ அதனை விற்றுவிடுவார்கள். நஷ்டமாக இருக்கும் பங்குகளை தொடர்ந்து வைத்திருப்பார்கள். மீண்டும் வேறு பங்குகளை வாங்குவார்கள். சில மாதங்களுக்கு பிறகு லாபத்தில் இருக்கும் பங்குகளை விற்பார்கள். நஷ்டத்தில் இருக்கும் பங்குகள் அப்படியே தேங்கும். ஒரு கட்டத்தில் மோசமாக செயல்படும் பங்குகள் மட்டுமே உங்களது போர்ட்போலியோவில் இருக்கும். தேர்ந்த ஆலோசனை இல்லாமல் ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

இறுதியாக முதலீட்டை டி20 மனநிலையில் இருந்து விலகி டெஸ்ட் போட்டி மனநிலையில் அணுகவும். அப்போதுதான் கணிசமான வெல்த் கிரியேஷன் நடக்கும். அதற்கு ஒரு ஸ்திரமான போர்ட்போலியோவை உருவாக்கவும்.