சிறப்புக் களம்

விசாரணையை முடுக்கி விடும் போலீஸ்; விழுப்புரம் சம்பவம் எக்ஸ்குளூசிவ் தகவல்

விசாரணையை முடுக்கி விடும் போலீஸ்; விழுப்புரம் சம்பவம் எக்ஸ்குளூசிவ் தகவல்

webteam

வெள்ளம்புத்தூரில் நடந்த கொடூர தாக்குதல் தொடர்பாக காவல்துறை 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தின் பின்னணியில் என்னவெல்லாம் இருக்கலாம் என்ற கோணங்களில் முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு , ஒவ்வொரு தனிப்படைக்கும் குறிப்பிட்ட வேலை கொடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஆராயியின் செல்போன் அழைப்புகளை தனிப்படை ஆராய்ந்து யார் எவ்வளவு நேரம் பேசியிருக்கிறார்கள், வந்த அழைப்பு என்ன, சென்ற அழைப்பு என்ன என்பது ஆராயப்படுகிறது. அதன் அடிப்படையில் கணபதி என்ற பெயரில் அதிக அழைப்புகள் வந்துள்ளது. அதே போல் அய்யம்பெருமாள் என்ற பெயரில் உள்ள எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த எண்ணில் இருந்து பேசியவர் மீது சந்தேகம் ஏற்பட்டு காவல்துறை விசாரித்து வருகிறது. ஆராயியின் செல்போனுக்கு வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மேல் எந்த அழைப்பும் வரவில்லை. செல்லவும் இல்லை.

இது ஒருபக்கம் இருக்க, அறிவியல் ரீதியாக குற்றவாளியை கண்டறிய மற்றொரு தனிப்படை வேலை செய்து வருகிறது. சம்பவ இடத்தில் கைரேகை அல்லது இரத்த மாதிரிகள் கிடைக்கவில்லை. ஆனால் விந்தணு கிடைத்துள்ளது. அதன் மூலம் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு , உறுதி செய்யப்பட்டுள்ளது. விந்தணுவை பயன்படுத்தி குற்றவாளியை அடையாளம் காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சம்பவம் நடந்த நாளில் வெள்ளம்புத்தூர் அருகாமை கிராமம் ஒன்றில் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்க ஊரில் இருந்து பலர் வந்திருந்தனர். வந்தோர் விபரம் சேகரிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது. சந்தேகமுள்ள நபர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது. 

இதற்கு இடையில், சைகோ கொலையாளி இதனை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதே கிராமத்தில் நடைபெற்ற 2 சம்பவங்களும் இதோடு ஒத்துப் போவதால் ஒருவரோ அல்லது குழுவோ செய்திருக்க வாய்ப்புண்டு என கருதப்படுகிறது. ஆராயி வீட்டிற்கு அருகேயும் அந்த பகுதி வழியாக வந்தவர்கள் யார் என்ற விபரமும் முடிந்தவரை சேகரிக்கப்படுகிறது. ஆனால் இது பலனளிக்கவில்லை

இப்படி விசாரணை செய்து வரும் நேரத்தில் எவையெல்லாம் தொடர்பில்லாத விஷயங்கள் என கண்டறிந்து அவற்றை நீக்கவும் காவல்துறை தவறவில்லை. குறிப்பாக நிலத்தகராறில் ஈடுபட்ட ராஜேந்திரனுக்கு தொடர்புள்ளதா என விசாரித்த காவல்துறை, சம்பந்தம் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளது. சொத்துக்காக ராஜேந்திரன் கொலை செய்ய முயன்றிருந்தால் குடும்பத்தையே கொன்றிருக்க வேண்டும். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய நினைத்திருந்தால், அந்த சிறுமி தனிமையில் இருந்த மற்ற நேரத்தை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 

இதே போல் இன்னும் சிலரை அவர்களது செல்போன் அழைப்புகளை வைத்து ஆய்வு செய்து இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளது போலீஸ். அதே நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க அதிக நாள் ஆகாது என்கிறார் விசாரணை அதிகாரி வீமராஜ்...