தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். 50 கோடியைத் தாண்டிய சம்பளம், ரசிகர்களின் பலம், தமிழ்நாட்டை தாண்டிய வியாபாரம், அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் என உச்சத்தில் இருக்கும் விஜய்க்கு இன்று 46வது பிறந்தநாள்.
குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்த விஜய், நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகன் ஆனார். தந்தை பிரபல இயக்குநர் என்றாலும், ஆரம்பத்தில் அவ்வளவு எளிதில் அவருக்கு வெற்றி கைகூடவில்லை. எதிர்பார்த்த வெற்றியில்லாமல் திரைப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த விஜய்க்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான பூவே உனக்காக திரைப்படமே பெரும் வெற்றியைக் கொடுத்தது.
தொடர்ந்து குடும்பப் பாங்கான படங்களில் நடித்து வந்த விஜய்யை காதல் நாயகனாக மடை மாற்றியத் திரைப்படம் காதலுக்கு மரியாதை. அதற்கு பின் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகுதான் விஜய்க்கு இளம் ரசிகர், ரசிகைகள் அதிகரித்தனர். தொடர்ந்து திருமலைக்குப் பிறகு நடித்த கில்லி, திருப்பாச்சி போன்ற படங்கள் ஆக்ஷன் ஹீரோவாகவும் விஜய்யை மாற்றின.
விஜய்க்கு ரசிகர்கள் பலம் அதிகரிக்க அதிகரிக்க தன் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி ரசிகர்கள் மட்டுமின்றி மக்களுடனும் நெருங்கத் தொடங்கினார் விஜய். அரசியல் வருகைக்கான பணிகளையும் அவர் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதன் வெளிப்பாடாகவே தலைவா போன்ற கதாநாயக பிம்பத்திலிருந்து விலகி, தலைவனாக நிலைநிறுத்திக் கொள்ளும் திரைப்படங்களை தேர்வு செய்வதாகவும் கூறப்பட்டன.
துப்பாக்கி படத்தின் மிகப்பெரும் வெற்றி தமிழ்நாட்டின் உச்ச நடிகராக விஜய்யை கொண்டு நிறுத்தியது. அதன்பிறகு அவர் நடித்த மெர்சல், பிகில் திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் வியாபார எல்லைகளை கடந்து மிகப்பெரும் சாதனைகளைப் படைத்தன. இவை ஒருபுறமிருக்க படங்களுக்கான தடைகள், அரசியல் ரீதியான சர்ச்சைகள், வருமான வரி சோதனை போன்றவையும் விஜய்யை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன.
கொரோனா ஊரடங்கால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தள்ளிப்போன நேரத்தில், பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் தவிர்க்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார் விஜய். ஆனாலும், போஸ்டர்கள், நலத்திட்ட உதவிகள் என கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ரசிகர்கள். தங்கள் தளபதி அரசியல் அரங்கிலும் வெற்றிக் கொடி நாட்டுவார் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.